Spotlightவிமர்சனங்கள்

மர்மர் – விமர்சனம் 3.25/5

ஹேம்நாத் நாராயணனின் எழுத்து & இயக்கத்தில் ரிச்சி கபூர், தேவ்ராஜ் ஆறுமுகம், சுகன்யா ஷண்முகம், யுவிகா ராஜேந்திரன், அரியா செல்வராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இன்று திரைகண்டிருக்கும் திரைப்படம் தான் “மர்மர்”.

எஸ்.பி.கே பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் association with ஸ்டாண்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

இசையமைப்பாளர் இப்படத்திற்கு தேவைப்படாத காரணத்தினால் ஒலி வடிவமைப்பாளராக கேவ்ய்ன் பிரெடெரிக் பணிபுரிந்திருக்கிறார். ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

படத்தொகுப்பினை ரோஹித் கவனித்திருக்கிறார்.

படத்தின் போஸ்டரில் ஆரம்பித்து டீசர் வரை சினிமா ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது.

படத்திற்கும் அதே எதிர்பார்ப்பு நிலவுவதால், எதிர்பார்ப்பை இயக்குனர் பூர்த்தி செய்திருக்கிறாரா இல்லையா என்பதை விமர்சனம் மூலம் பார்த்துவிடலாம்.

காத்தூர் என்ற கிராமத்தின் வழியே ஜவ்வாது மலைக்குச் சென்று அங்குள்ள சில அமானுஷ்யங்களைப் பற்றி ஆவணப்படம் எடுக்க இரண்டு இளைஞர் மற்றும் இரண்டு இளைஞிகள் பயணப்படுகின்றனர்.

உதவிக்காக காத்தூர் கிராமத்தைச் சேர்ந்த காந்தா என்ற சிறுமியும் இவர்களோடு அந்த காட்டிற்குள் செல்கின்றார்.

காட்டிற்குச் செல்வதற்கு முன்பே, அக்கிராமத்தில் சிலர் காட்டிற்குள் இருக்கும் 7 கன்னிகள் பற்றியும் சூனியக்காரி பற்றியும் அவர்களிடத்தில் கூறுகின்றனர்.

ஆனால், வந்த நால்வரும் அந்த கதைகளை நம்புவதாக இல்லை. மெல்வின், ரிஷி, அங்கீதா மற்றும் ஜெனி இவர்கள் தான் அந்த நால்வர்.

ஐவரும் காட்டிற்குள் பயணப்படுகின்றனர். செல்லும் இடங்களையெல்லாம் தங்களது கேமரா மூலமாக படமெடுக்கின்றனர்.

நேரல் செல்ல, இரவு எட்டிப் பார்க்க, அங்கு ஒரு இடத்தில் டெண்ட் அமைத்து ஐவரும் அங்கு தங்குகின்றனர். வந்த நால்வரும் மதுவும் புகையுமாக இருக்கின்றனர்.

இரவு செல்ல செல்ல, காட்டிற்குள் இருக்கும் சூனியக்காரி தனது அச்சுறுத்தும் வேலையை ஆரம்பிக்கிறது.

சிறுமியான காந்தாவை முதலில் கடத்தி கொலை செய்து விடுகிறது அந்த சூனியக்காரி. மீதமிருக்கும் நால்வரின் நிலை என்ன.?? சூனியக்காரியின் பிடியில் இருந்து தப்பித்தார்களா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தில் நடித்த நால்வரும் மிகவும் யதார்த்தமான நடிப்பைக் கொடுத்திருந்தனர். இயல்பாக தனது நடிப்பைக் கொடுத்து அக்கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர் நால்வரும்.

ஏதோ ஒன்று நடக்கவிருக்கிறது என்ற எதிர்பார்ப்பிலேயே முதல் பாதியை கடக்க வைத்துவிட்டார் இயக்குனர். அமானுஷ்யத்தை காட்டாமலே முதல் பாதியை கடக்க வைப்பதெல்லாம் சாதாரண விஷயம் இல்லை. இருந்தாலும், எடுத்துக் கொண்ட நேரம் சற்று அதிகம் தான்.

ஒவ்வொரு காட்சிகளையும் பயமுறுத்தும்படியாக படமாக்கி தமிழ் சினிமாவில் ஒரு புதிய பாய்ச்சலை பாய்ச்சியிருக்கிறார் இயக்குனர் ஹேம்நாத்.

படத்தின் ஆரம்பத்திலேயே வித்தியாசமான முறையில், காட்சிகளை காட்சிப்படுத்தி இது வழக்கமான படமில்லை என்று மனதில் பதிய வைத்துவிட்டார் இயக்குனர்.

அதன்பின் காட்டுக்குள் பொருத்தப்பட்ட கேமராவின் பார்வையிலேயே நமது பார்வையையும் கொண்டு சென்று அக்கதையின் போக்கை நமதாக்கி கதையோடு பயணிக்க வைத்துவிட்டார் இயக்குனர்.

படத்தின் கதையை இன்னும் ஷார்ப்பாக கொடுத்திருந்திருக்கலாம். கொஞ்சம் அல்ல அதிகமாகவே நம் பொறுமையை சோதித்து பார்த்துவிட்டார் இயக்குனர்.

தமிழ் சினிமாவில் புதியதோர் முயற்சி என்றாலும் இருக்கும் பிழைகளை சற்று கவனித்து, அடுத்த படத்தில் அதனை சரிசெய்து இதைவிடவும் சரியான படைப்பைக் கொடுப்பதில் வல்லவர் இந்த இயக்குனர்.

படத்தொகுப்பில் இன்னும் ஷார்ப்பான வேலையை செய்திருக்கலாம். ஒளிப்பதிவு மற்றும் ஒலி வடிவமைப்பு இரண்டும் படத்தினை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று விட்டது.

படம் பார்ப்பவர்கள் அனைவரும் தங்களை மறந்து ஜவ்வாது மலைக்குள் நடைபோட வைக்கும் திரைக்கதையை கொடுத்திருக்கிறார்கள்.

படத்தின் இரண்டாம் பாதி முழுவதுமே பரபரப்புக்கும், பயத்துக்கும் பஞ்சம் இல்லை. 100% கேரண்டி கொடுக்கலாம்.

இரண்டாம் பாதிக்காகவே இரண்டு முறை படத்திற்குச் செல்லலாம்.

Facebook Comments

Related Articles

Back to top button