
இயக்கம்: ஜெய் ஆகாஷ்
நடிகர்கள்: ஜெய் ஆகாஷ், மீனாட்சி, நிஷா, காதல் சுகுமார், கே பி ஒய் திவாகர், ராகுல் தேவ், பிரம்மாஜி, அருணாச்சலம்
ஒளிப்பதிவு: பால் பாண்டி,
இசை: நந்தா
படத்தொகுப்பு: மணிகண்டன்
கதைப்படி,
கல்லூரி படித்து வரும் ஜெய் ஆகாஷ், பணிபுரியும் மீனாட்சியை காதலிக்கிறார். இரு தலை காதலாக சென்று கொண்டிருக்கிறது. இருவரும் ஒருவருக்கொருவர் உயிராக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், நண்பனின் காதலி அவனை ஏமாற்றிச் சென்றதால், ஜெய் ஆகாஷ் மீனாட்சி மீது சந்தேகப் பார்வையை வீசுகிறார்.
ஒருகட்டத்தில், சந்தேகம் அதிகமாகி மீனாட்சி மீது அவதூறு பரப்புகிறார் ஜெய் ஆகாஷ். இதனால், கோபமடைந்த மீனாட்சி, ஜெய் ஆகாஷை விட்டுப் பிரிகிறார்.
தொடர்ந்து, காதலி விட்டுச் சென்ற ஏக்கத்தில் மிகவும் கவலையில் இருந்து வருகிறார். காதலை கண்டாலே வெறுப்பைக் கொட்டி வருகிறார். அவரை சுற்றி இருக்கும் எவரையும் காதல் செய்யாமலும் பார்த்து வருகிறார்.
அதேசமயம், பாக்ஸிங் வீரரான ஜெய் ஆகாஷ் நண்பனுக்காக பாக்ஸிங் செய்ய போன இடத்தில் எதிரிகளால் துரோகம் செய்யப்பட்டு வீழ்த்தப்படுகிறார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஜெய் ஆகாஷின் வாழ்க்கையில் அடுத்ததாக என்ன நடந்தது.? என்பதே படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகனான ஜெய் ஆகாஷ், வழக்கமான யதார்த்தமான நடிப்பைக் கொடுத்து, ராஜா என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். காதலிக்கும் போதாக இருக்கட்டும், காதல் தோல்வியில் இருக்கும் போதாக இருக்கட்டும், காதலை உணர்ந்து கொண்ட தருணமாக இருக்கட்டும் என நடிப்பின் உச்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கதையின் நாயகியான மீனாட்சி, அழகாலும் நடிப்பாலும் நன்றாகவே அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.
ஒரு சில இடங்களில் திவாகரின் காமெடி சற்று கைகொடுத்துள்ளது. காதல் சுகுமாரின் எமோஷ்னல் வசனங்கள் ரசிக்க வைத்தது.
காதலின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் ஒரு படமாக எடுக்கப்பட வேண்டிய இப்படத்தை, திரைக்கதையை நசுக்கி படு மோசமான ஒரு படமாக எடுத்து வைத்திருக்கிறார் இயக்குனர். படத்தின் காட்சிகளை மீண்டும் மீண்டும் காட்சிப்படுத்தப்பட்டு நம்மை சோதனையின் உச்சத்திற்கே செல்ல வைத்துவிட்டார்கள்.
ஜெய் ஆகாஷின் காதல் பருவத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் எதுவும் சரியான ஒளிப்பதிவாக இல்லை என்பது கூடுதல் கவலை தான். காட்சிகளும் பாதியிலேயே கட் ஆகி கட் ஆகி சென்றது படத்தின் ஓட்டத்தை வெகுவாகவே பாதிப்படைய வைத்துவிட்டது.
பல நூறு சினிமாக்களில் நடித்த ஜெய் ஆகாஷ், ஒரு சினிமாவின் மொழி எப்படியாக இருக்கும் என்பது கூடவா கற்றுக் கொள்ளாமல் இருந்திருக்கிறார் என்பது தான் படத்தினை பார்த்தவர்களுக்கு ஏற்பட்ட ஆச்சர்யம்.
படத்தின் ஓட்டத்திற்கு மிகப்பெரும் ஸ்பீட் ப்ரேக்கராக இருந்தது படத்தின் பாடல்கள் தான். பின்னணி இசை ஓகே ரகமாக கடந்து சென்றிருக்கிறது. ஒளிப்பதிவில் மிகப்பெரும் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம்.





