விமர்சனங்கள்

சொட்ட சொட்ட நனையுது – விமர்சனம்

நவீத் S ஃபரீத் இயக்கத்தில் நிஷாந்த் ரூஷோ, பிக்பாஸ் வர்ஷிணி, ஷாலினி, ரோபோ சங்கர் கேபிஒய் புகழ், ராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் இந்த சொட்ட சொட்ட நனையுது திரைப்படம்.

Adler Entertainment என்ற நிறுவனம் படத்தினை தயாரித்திருக்கிறது. திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார் கலக்கப்போவது யாரு புகழ் ராஜா.

இசையமைத்திருக்கிறார் ரெஞ்சித் உன்னி. ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ரயீஷ். படத்தொகுப்பு செய்திருக்கிறார் ராம் சதீஷ்.

கதையின் நாயகனான நிஷாந்த் ரூஷோவிற்கு, தலையில் சுமார் 70 சதவீதத்திற்கும் மேல் முடி இல்லாததால், அவருக்கு தொடர்ந்து திருமணம் தடைபட்டுச் செல்கிறது.

அவருக்கு முடி இல்லாத ஒரே காரணத்தால், அவரை பெண்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க மறுக்கிறார்கள். மேலும், பலராலும் கேலி கிண்டலுக்கும் ஆளாகிறார்.

ஒருவழியாக, நாயகி ஷாலினி நாயகன் நிஷாந்திற்கு ஓகே கூற, திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கிறது. திருமணத்திற்கு ஒரு நாள் மட்டும் இருக்கும் நிலையில், அன்றிரவு நண்பன் மூலமாக நிஷாந்திற்கு வீடியோ ஒன்று வருகிறது.

அந்த வீடியோவில் ஷாலினி வேறு ஒரு நபருடன் நெருக்கமாக இருப்பதை அறிந்து கொண்ட நிஷாந்த், உடனே திருமணத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார்.

அதன்பிறகு இவரது வாழ்க்கையில் எண்ட்ரீ ஆகிறார் பிக்பாஸ் வர்ஷிணி. அதன்பிறகு நிஷாந்தின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகனான நிஷாந்த், தனக்குக் கொடுக்கப்பட்டதை அழகாக செய்து முடித்திருக்கிறார். காமெடி, எமோஷன்ஸ் என இரண்டு கோணங்களிலும் களம் இறங்கி தனது நடிப்பின் திறமையை நிரூபித்திருக்கிறார்.

நாயகிகளான வர்ஷினி மற்றும் ஷாலினி இருவருமே காட்சிகளில் அழகு தேவதைகளாக காட்சியளித்திருந்தனர். நடிப்பிலும் நன்றாகவே மெருகேற்றியிருக்கிறார்கள்.

ரோபோ சங்கரின் காமெடி ஆங்காங்கே சரவெடியாக வெடித்தது. மற்றபடி, காமெடி என்ற பெயரில் கேபிஒய் டீம் செய்த அட்ராசிட்டியை துளியளவும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அதிலும், இரண்டாம் பாதியில் திருமணத்தை நிறுத்துவதாகக் கூறி அவர்கள் செய்யும் அலப்பறைகள், படம் பார்ப்பவர்களை எரிச்சலடையத் தான் வைத்திருக்கிறது.

நல்லதொரு கதையை கையில் எடுத்த இயக்குனர் அதை கொண்டு செல்லும் இடத்தில் சற்று தடுமாறியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். வசனத்தில் இன்னும் அதிகமாகவே மெனக்கெடல் செய்திருக்கலாம்..

இசை ஓகே ரகமாக தான் இருந்தது. ஒளிப்பதிவு சற்று ஆறுதல் தான்.

Facebook Comments

Related Articles

Back to top button