
சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், அதுல்யா ரவி, சாய் குமார், வினய், அனன்யா, கருணாஸ், ரமேஷ் திலக், விவேக் பிரசன்னா, தங்கதுரை, மாறன் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பிலும் திபுநினன் தாமஸ் இசையில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் டீசல்.
இப்படத்தை தேவராஜலூ மார்கண்டேயன் தயாரித்திருக்கிறார்.
வட சென்னையில் கடலோரத்தில் கிராமம் ஒன்று இருக்கிறது. அந்த பகுதியில், குருடாயிலை திருட்டுத்தனமாக எடுத்து அதனை சப்ளை செய்து வருகிறது சாய்குமார் & டீம். அதிலிருந்து கிடைக்கும் டீசலை கள்ளச் சந்தையில் விலை குறைவாக விற்று வருகிறார்கள்.
சாய்குமாரின் இறந்து போன நண்பனின் மகன் தான் ஹரீஷ் கல்யான் (டீசல்). இந்த பிசினஸை கையில் எடுத்து செய்து வருகிறார் ஹரீஷ்.
இந்த பிசினஸில் போட்டி பகை என அனைத்தும் இருக்கிறது. இந்த சூழலில், போலீஸ் அதிகாரியான வினய், பணம் சம்பாதிப்பதற்காக அந்த பிசினஸை செய்ய விவேக் பிரசன்னாவை களத்தில் இறக்குகிறார்.
இதனால், ஹரீஷ் கல்யாணுக்கும் வினய்க்கும் நேரடி மோதல் வர, சண்டையில் வினய் பலத்த காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
மருத்துவமனையில் இருந்து மீண்டு வரும் வினய், ஹரீஷ் கல்யாணை பழி வாங்க நினைக்கிறார். அதற்குள் ஹரீஷ் கல்யாண் தலைமறைவாகி விடுகிறார்.
இந்த மோதலில் யார் வென்றார் என்பதே படத்தின் மீதிக் கதை. மேலும், படத்தில் கடலோர சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றியும் பேசியிருக்கிறார் இயக்குனர்.

மிகவும் வலுவான டீசல் கதாபாத்திரத்திற்குள் ஹரீஷ் கல்யாணை பொருத்திக் கொண்டு வர இயக்குனர் இன்னும் முயற்சித்திருக்கலாமோ என்று சந்தேகம் எழுந்துவிட்டது. படத்தின் முதல் காட்சியிலேயே டீசல் என்ற கதாபாத்திரத்தை மிகவும் சாதரணமாக கொண்டுவந்ததாலோ என்னவோ அக்கதாபாத்திரத்திற்குள் ஹரீஷ் கல்யாணை பொருத்தி வைத்து பார்க்க முடியவில்லை.
தனக்குக் கொடுத்த காட்சிகளை மிகவும் அழகாக நடித்து அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்துவிட்டுச் சென்று விட்டார் அதுல்யா ரவி.
சாய் குமாரும் தனது கேரக்டரை மிகவும் அழுத்தமாக பதிந்துவிட்டுச் சென்றுவிட்டார். வினய்யின் கதாபாத்திரம் மிகவும் வலுவானதாக இருந்தது. அதை அவர் சரியாகவும் பயன்படுத்திச் சென்றிருந்தார்.
திபு நினண் தாமஸின் இசை படத்திற்கு சற்று ஆறுதல். வட சென்னை கதை என்றால் இப்படி தான் இருக்கும் என்ற மனப்பாண்மையை உருவாக்கி வைத்திருக்கும் தமிழ் சினிமா இயக்குனர்களின் வரிசையில் இப்படமும் இணைக்கப்படுகிறது. இதில் டீசல் மாஃபியா பற்றி கூறியிருக்கிறார்கள்.
நேஷ்னல் வரையிலும் இருக்கும் அரசியலையும் சற்று கூறியிருக்கிறார் இயக்குனர். முதல் பாதி அதிரி புதிரியாக சென்றாலும் இரண்டாம் பாதியில் இயக்குனர் சற்று சறுக்கியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். கோடிக் கணக்கான குருடாயிலை சாதாரண பைப் போட்டு, கொண்டு சென்றதெல்லாம் வேற லெவல் தான்..
இரண்டாம் பாதியில் அதீத கவனம் செலுத்தியிருந்திருக்கலாம்…





