
அறிமுக இயக்குனர் எஸ் ஜே அர்ஜுன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, ஹரிஷா ஜஸ்டின் , கருணாகரன், வாகை சந்திர சேகர் , MS பாஸ்கர், கவி, கல்கி, அருள் தாஸ்,யோக் ஜேபி, கராத்தே கார்த்தி, ராதா ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் சூது கவ்வும் 2.
சுமார் 11 வருடங்களுக்கு முன் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வெளிவந்து மிகப்பெரும் ஹிட் அடித்த படம் தான் சூது கவ்வும். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 11 வருடங்களுக்குப் பிறகு இதன் இரண்டாம் பாகத்தை தற்போது உருவாக்கியிருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் சி வி குமார்.
படத்திற்கு கார்த்திக் கே தில்லை ஒளிப்பதிவு செய்ய, எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்திருக்கிறார். சிவி குமார் மற்றும் தங்கராஜ் இருவரும் படத்தினை தயாரித்திருக்கிறார்கள்.
விஜய் சேதுபதிக்குப் பதிலாக இப்படத்தில் மிர்ச்சி சிவா நடித்திருக்கிறார்.
கதைக்குள் பயணப்பட்டு விடலாம்…
தமிழகத்தின் அரசியலை மையப்படுத்தி கதை ஆரம்பிக்கிறது. ஆளுங்கட்சியை உருவாக்கியவரும் நிறுவியவருமான வாகை சந்திரசேகர், நீண்ட வருடத்திற்குப் பிறகு கோமாவில் இருந்து நினைவு திரும்புகிறார். முதல்வர் பதவியில் ராதாரவி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார். பெரும் ஊழல்வாதியான ராதாரவி முதல்வர் பதவியில் இருப்பதை வாகை சந்திரசேகருக்கு விருப்பமில்லை.
மேலும், அதே கட்சியில் நல்லவாராகவும் வாகை சந்திரசேகரின் விசுவாசியுமான எம் எஸ் பாஸ்கரின் மகனான கருணாகரன், ராதாரவின் அமைச்சரவையில் அமைச்சராக இருக்கிறார். இவரும் ஊழலில் நம்பர் ஒன்னாக இருக்கிறார்.

இந்நிலையில் ராதாரவிக்கு எதிராக கட்சி ஆரம்பிக்கிறார் வாகை சந்திரசேகர். இந்த சூழலில் ”கேம் ஆப்” மூலமாக மக்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை பெற்று விடலாம் என்று எண்ணுகிறார் கருணாகரன். அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும் பொழுது மிர்ச்சி சிவாவும் அவரது கும்பலும் கருணாகரனை கடத்தி விடுகிறது. இதனைத் தொடர்ந்து கருணாகரனை கண்டுபிடிப்பதறாகவும் மிர்ச்சி சிவாவை பிடிப்பதற்காகவும் வருகிறார் போலீஸ் அதிகாரி பிரம்மா.
இருவரையும் பிரம்மா கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதி கதை.
நாயகன் மிர்ச்சி சிவா, விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தை பூர்த்தி செய்தாரா இல்லையா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். தனக்கென இருக்கும் ஓரிரு முயற்சியைக் கொடுத்து படத்தில் ஆங்காங்கே சிரிக்க வைத்திருக்கிறார் மிர்ச்சி சிவா. பல இடங்களில் என்ன சிவா உங்களுக்கு என்ன தான் ஆச்சி என்று நம்மளை புலம்ப வைக்கும் அளவிற்கான நடிப்பைக் கொடுத்து காட்சிகளை கெடுத்து தான் வைத்திருக்கிறார்.
கருணாகரன் பல இடங்களில் ஓவர் ஆக்டிங்கை கொடுத்து, நம்மை எரிச்சலடைய வைத்திருக்கிறார். நாயகி ஹரிஷா, அருள்தாஸ், எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்ட நடிகர்கள் நமக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளனர்.
இல்லாத காதலியை இருப்பதாக நினைத்து அவரது உடலில் புல்லட் பாய்ந்துவிட்டதாக மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லும் காட்சி நம்மை ரசிக்க வைத்தது.
கார்த்திக் கே தில்லையின் ஒளிப்பதிவு படத்திற்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது. கதை மற்றும் திரைக்கதை இரண்டுமே சற்று பலவீனமாக இருந்ததால் சூது கவ்வும் 2 பெரிதாக நம்மை கவரவில்லை என்று தான் கூற வேண்டும். இன்னும் பெரிதாகவே படத்திற்காக உழைத்திருக்கலாமே என்று கூறத் தோன்றியது.
சூது கவ்வும் என்பதே ஒரு ஃபிராண்ட் தான். அதன் தொடர்ச்சி என்பதை மக்கள் பெரிதாக எதிர்பார்த்து காத்திருந்தனர். அவர்கள் காத்திருந்ததில் எந்த பலனையும் படக்குழுவினர் கொடுக்கவில்லை என்பதே நிஜம்.
சூது கவ்வும் 2 – மன உளைச்சல்…





