
நடிகர்கள்: துஷாரா விஜயன் ,அதிதி பாலன், அப்பாஸ், வசுந்தரா, நரேன் மணி
தொழில்நுட்ப குழு:
எழுத்து & இயக்கம் : ஏ. சற்குணம்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்கள் : புஷ்கர் & காயத்ரி
வால்வாட்சர் பிலிம்ஸ் தயாரித்து வழங்கியுள்ளது
தயாரிப்பாளர்கள்: கௌதம் செல்வராஜ், எஸ் குஹப்ரியா, எஸ் நந்தகுமார்
ஒளிப்பதிவு : அருண் அமரேந்திரன்
இசையமைப்பாளர்: சாம் சி எஸ்
எடிட்டர் : ரிச்சர்ட் கெவின். ஏ
போலீஸ் உயரதிகாரியான அதிதி பாலன், ஒரு ஊரில் இருந்து பணி மாறுதல் ஏற்பட்டு மற்றொரு மலைக்கிராமம் சார்ந்த ஒரு ஊருக்குச் செல்கிறார். தனது 5 வயது மதிக்கத்தக்க மகளையும் தனது அம்மாவையும் வீட்டில் விட்டுவிட்டு, அந்த மலைக்கிராமத்திற்கு தனது காரில் சென்று கொண்டிருக்கிறார் அதிதி.
செல்லும் வழியில், துஷாரா அவரது காருக்குள் மறைமுகமாக ஏறிக் கொண்டு, அதிதியைக் கடத்திச் சென்று விடுகிறார். வீட்டில் தனி அறையில் அதிதியை சிறைப்படுத்தி, அவரது பணிக்கு துஷாரா போலீஸ் உடை அணிந்து சென்று விடுகிறார். புது அதிகாரி என்பதால், அனைவரும் துஷாரா தான் தனது உயர் அதிகாரி என்று நம்பி விடுகிறார்கள்.
துஷாராவிற்கு ஒரு சிலரும் தொடர்ச்சியாக உதவி செய்து வருகிறார்கள். அதில், அப்பாஸும் ஒருவர். அதன்பிறகு, அந்த ஏரியாவில் இருக்கும் பல கோச்சிங் செண்டருக்கு செல்கிறார் துஷாரா. விசாரணை ஒன்றை அன் அபிஷியலாக விசாரிக்கிறார். நுழைவுத் தேர்வில் பல மோசடிகள் நடப்பதை அறிந்து கொண்டு தான் அதன் வேட்டையில் ஈடுபடுகிறார் துஷாரா.
எதற்காக துஷாரா இந்த விசாரணையில் இறங்க வேண்டும்.? இந்த விசாரணைக்கும் அவருக்கும் என்ன சம்மந்தம்? அவரின் பின்னணி என்ன.? அப்பாஸ் யார்.? அதிதி பாலனை கடத்துவதன் காரணம் என்ன.? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு மீதமிருக்கும் தொடரில் விடை வைத்திருக்கிறார்கள்.
சஸ்பென்ஸ் த்ரில்லர் ட்ராமாவாக உருவாகியுள்ளது இந்த தொடர். நுழைவுத் தேர்வில் நடக்கும் மோசடிகளை களைந்திருக்கிறது இந்த டீம். அதனை ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லராக கொடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு தொடர் முடியும் போது அடுத்து என்ன நடக்கும் என்ற தொனியிலேயே கதை நகர்கிறது.
யார் இந்த மோசடியில் ஈடுபடுகிறார் என்று தெரிந்தும் கூட, அந்த த்ரில்லர் தொடர்ந்து கொண்டே இருப்பது தொடருக்கு மிகப்பெரும் பலம் தான். தொடரில் நடித்த அனைவரும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். சாம் சி எஸ் அவர்களின் பின்னணி இசை தொடருக்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.
அருண் அமரேந்திரனின் ஒளிப்பதிவு தொடருக்கு மிகப்பெரும் பலம்.
கதை ஆங்காங்கே தொங்கிக் கொண்டே சென்றது தொடருக்கு சற்று பலவீனம் தான். குறைந்த நேரத்திலேயே முடிக்க வேண்டிய தொடரானது தொடர்ச்சியாக இழுத்துக் கொண்டே சென்று சற்று சலிப்பை ஏற்படுத்தி விட்டது.
இருந்தாலும், ட்ராமா சஸ்பென்ஸ் த்ரில்லரை விரும்பும் ரசிகர்களுக்கு நல்லதொரு விருந்தாக இது இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.





