Spotlightசினிமாவிமர்சனங்கள்

கருடன் – விமர்சனம் 4/5

கொடி, பட்டாசு உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி, சசிக்குமார், உன்னி முகுந்தன், ரேவதி ஷர்மா, ஷிவதா, பிரகிடா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர் வி உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இன்று திரை கண்டிருக்கும் படம் தான் “கருடன்”.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் ஆர்த்தூர் எஸ் வில்சனின் ஒளிப்பதிவில் இப்படம் உருவாகியிருக்கிறது.

படத்தொகுப்பை கவனித்திருக்கிறார் ப்ரதீப் இ ராகவ்.

கே குமார் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

கதைக்குள் பயணிக்கலாம்….

சசிக்குமார், உன்னி முகுந்தன் மற்றும் சூரி மூவரும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள். அதிலும் குறிப்பாக, தாய் தந்தை இல்லாத தன்னை வளர்த்த உன்னி முகுந்தனுக்கு நண்பனாக மட்டுமல்லாமல் நல்லதொரு விசுவாசியாகவும் இருந்து வருகிறார் சூரி. இவர்கள் மூவரையும் சிறு வயதிலிருந்தே வளர்த்து வருபவர் வடிவுக்கரசி.

அங்கிருக்கும் கோம்பை அம்மன் கோவில் நிர்வாக தலைவராக இருக்கிறார் வடிவுக்கரசி. அதுமட்டுமல்லாமல், அந்த கோவிலின் நிர்வாகத்தில் மூவரும் இருக்கிறார்கள்.

இந்நிலையில், கோவிலின் பல கோடி சொத்துமதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமிக்க நினைக்கிறார் அமைச்சர் ஒருவர். அதற்காக அந்த கோவிலுக்கு வைக்கப்பட்டுள்ள பட்டயம் ஒன்றை கைப்பற்ற நினைக்கிறார்.

அதனால், அந்த கோவிலின் நிர்வாகத்திற்குள் தனது ஆளை உள்ளே அனுப்ப நினைக்கிறார் அமைச்சர்.

இதற்காக மூவரையும் பிரித்தாளும் சூழ்ச்சியில் இறங்குகிறார் அமைச்சர். அதுமட்டுமல்லாமல், பணத்தாசையில் உன்னி முகுந்தன் திசை மாறி செல்கிறார்.

அதன்பிறகு என்ன நடந்தது.? மூவரின் நட்பு எப்படி இருந்தது.?? விசுவாசத்திற்கும் நியாயத்திற்குமான போராட்டத்தில் சூரி எந்த பக்கத்தில் நின்றார் என்பதே படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகனாக தோன்றி மிரட்டியிருக்கிறார் சூரி. என்னப்பா இப்படியெல்லாம் நடிக்கிற என்று சொல்லும் அளவிற்கு தனது நடிப்பின் அசுரத்தனத்தை வெளிக்காட்டியிருக்கிறார் சூரி. அதிலும் இடைவேளைக் காட்சியில் மிரள வைக்கும் நடிப்பைக் கொடுத்து அசர வைத்துவிட்டார் சூரி. க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியிலும் மிரட்டியிருக்கிறார். எந்த இடத்திலும் ஹீரோவுக்கான மாஸ் காட்சிகள் இல்லை, கதைக்கான மாஸ் காட்சிகள் இடம் பெற்றது தான் படத்திற்கான பலமாக பார்க்கலாம்..

சசிகுமார் மற்றொரு தூணாக வந்து நிற்கிறார். மண்ணுக்கான கதைக்களமாக இருந்துவிட்டு அதில் சசிகுமார் இல்லையென்றால் நன்றாக இருக்குமா .? என்று சொல்லுமளவிற்கான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

கதையின் ஆரம்பத்தில் கதையோடு ஒன்றாமல் தனித்து தெரிந்தாலும், இடைவேளைக்குப் பிறகு மிரட்டலான நடிப்பைக் கொடுத்து கவர்ந்துவிட்டார் உன்னிமுகுந்தன்.

போலீஸ் ஸ்டேஷனில் கதறி அழும் காட்சியில் கண்களில் ஈரத்தை எட்டிப் பார்க்க வைத்துவிட்டார் ஷிவதா.

நாயகியும் குறைவில்லாத நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் ஓகே ரகமாக தென்பட்டாலும், பின்னணி இசையில் மாஸ் காட்டியிருக்கிறார் யுவன்.

ஒளிப்பதிவு பெரிதாக இப்படத்திற்கு கைகொடுத்திருக்கிறது. மாஸ் காட்சிகள் படத்திற்கு பெரும் பலமாக இருக்கிறது.

கருடன் – வெற்றி கொண்டான்…

Facebook Comments

Related Articles

Back to top button