
‘கணம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஸ்ரீ கார்த்திக், தனது அடுத்த திரைப்படத்திற்காக புதிய தயாரிப்பு கூட்டணியுடன் இணைந்துள்ளார்.
இயக்குநர் ஸ்ரீ கார்த்திக், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் தேவ் ராம்நாத், ‘ரோமியோ’ பட இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் ஆகிய மூன்று நண்பர்களும் இணைந்து புதிய திரைப்படத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். தங்களது திரைப்பயணத்தில் சந்தித்த சவால்கள், கதைத் தேர்வு, நிராகரிப்புகள் உள்ளிட்ட அனுபவங்களை சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மூலம் பகிர்ந்து வந்தனர்.
இந்நிலையில், இவர்களின் முயற்சி தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. ஸ்ரீ கார்த்திக் இயக்கும் புதிய திரைப்படத்தை மேட்பாய்ஸ் என்டர்டெயின்மெண்ட் (Madboys Entertainment) மற்றும் சிறுனி சினி கார்ப்பரேஷன் (Siruni Cine Corporation) நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவ் ராம்நாத் மற்றும் ஸ்ரீ கார்த்திக் தலைமையிலான மேட்பாய்ஸ் என்டர்டெயின்மெண்ட், ‘I Hate You I Love You’, ‘Childhood Diaries’ உள்ளிட்ட இணையத் தொடர்கள் மற்றும் குறும்படங்கள் மூலம் கவனம் பெற்ற நிறுவனம். இத்திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக திரைப்படத் தயாரிப்பில் களமிறங்குகிறது.
தேசிய விருது பெற்ற ‘Chi La Sow’ திரைப்படத்தைத் தயாரித்த சிறுனி சினி கார்ப்பரேஷன் நிறுவனம் இப்படத்தின் இணைத் தயாரிப்பாளராக இணைந்துள்ளது.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன.





