Spotlightசினிமா

29 நாட்களில் உருவான ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’! டிசம்பர் 24-ல் திரைக்கு வருகிறது!

‘நாய் சேகர்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கிஷோர் ராஜ்குமார், எழுதி, இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’. காதல் மற்றும் நகைச்சுவை கலந்த ஃபீல் குட் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தைத் தமிழ்நாடு முழுவதும் ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இப்படத்தில் கிஷோர் ராஜ்குமாருக்கு ஜோடியாக ‘கொட்டுக்காளி’ புகழ் அன்னா பென் நடித்துள்ளார். மேலும் கே.எஸ். ரவிகுமார், பொன்வண்ணன், விஜி சந்திரசேகர், சரவணன், விநோதினி வைத்தியநாதன், லொள்ளு சபா மனோகரன், CWC மோனிஷா பிளஸ்ஸி, வாட்ஸப் மணி, நக்கலைட்ஸ் ரஞ்சித் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படம் குறித்து இயக்குநர் கிஷோர் ராஜ்குமார் கூறுகையில், “வெறும் 29 நாட்களில் படப்பிடிப்பை முடித்துள்ளோம். உடல் எடை அதிகமாகக் கொண்ட கதாபாத்திரத்தை நாயகனாக வைத்து உருவாக்கியுள்ள காதல், நகைச்சுவை திரைப்படம் இது. குடும்பத்துடன் அனைவரும் ரசிக்கும் வகையில் படம் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

ஜோடி பொருத்தம் மற்றும் காதலை மையமாகக் கொண்ட இப்படத்தில் நாயகியின் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு பிரவீன் பாலு ஒளிப்பதிவு செய்ய, ராம் பாண்டியன் படத்தொகுப்பைக் கவனித்துள்ளார். ஸ்ரீ சசிகுமார் கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். ஒரு பாடலுக்கு பிருந்தா மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.

காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகள் நிறைந்த ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படம் டிசம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button