
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகி வரும் பான் இந்தியா காதல்-நகைச்சுவை திரைப்படமான ‘ஃபீல் மை லவ்’ (Feel My Love), வரும் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது.
தமிழ் திரைப்படங்களை தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெற்றிகரமாக விநியோகம் செய்ததுடன், பல பான் இந்தியா திரைப்படங்களை வெளியிட்ட தயாரிப்பாளர் A.N. பாலாஜி, முதல் முறையாக தமிழில் தயாரிக்கும் திரைப்படம் என்பதால் ‘ஃபீல் மை லவ்’ மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஹரி பிரகாஷ் எம் எழுதி இயக்கும் இந்த திரைப்படம், காதல், நகைச்சுவை, குடும்ப உறவுகள் மற்றும் உணர்ச்சிகளை அழகாக இணைக்கும் ஒரு முழுமையான பொழுதுபோக்கு படைப்பாக உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் எம்.எஸ். பாஸ்கர், ஆதித்யா பாஸ்கர், ஐரா, அம்மு அபிராமி, ராஜ் ஐயப்பா, நோபிள் ஜேம்ஸ், பிரியங்கா ஆகியோருடன், முக்கிய கதாபாத்திரத்தில் மதுசூதனன் ராவ் நடித்துள்ளார்.

‘ஹவுஸ் மேட்ஸ்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற எம்.எஸ். சதீஷ் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். இசையை ராஜரவிவர்மா எஸ் மற்றும் பாலசுப்ரமணியன் ஜி இணைந்து அமைத்துள்ளனர். ‘LOVE’, ‘கொலை சேவல்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய அஜய் மனோஜ் படத்தொகுப்பை கவனித்துள்ளார்.
“வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் ஒரு அதிசயம் நிகழலாம்” என்ற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், காதலை புதிய கோணத்தில் சொல்லும் முயற்சியாக உருவாகியுள்ளதாக இயக்குநர் ஹரி பிரகாஷ் எம் தெரிவித்துள்ளார்.
சுவாரஸ்யமான தருணங்கள், இயல்பான மனித உறவுகள், மனதை தொடும் உணர்வுகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் உருவாகியுள்ள ‘ஃபீல் மை லவ்’, இளைஞர்கள் மட்டுமல்லாமல் குடும்ப ரசிகர்களையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு சென்னை மற்றும் புதுச்சேரியில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு மூனாரின் இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ள இந்த திரைப்படம், இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களை சென்றடையும் வகையில் தயாராகி வருகிறது.

மேலும், திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.





