விஜய் சேதுபதி புரொடக்சன் தயாரிப்பில், ஏ அண்ட் பி குரூப்ஸ் சார்பில் நடிகர் அருண் பாண்டியன் வழங்கும் விஜய் சேதுபதி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் ‘ஜுங்கா ’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் பிரபல தயாரிப்பாளர்கள் ஆர் பி சௌத்ரி, ஏ எம் ரத்னம், நந்தகோபால், கதிரேசன், டி. சிவா, காரகட்ட பிரசாத், சி வி குமார், கருணாமூர்த்தி, இயக்குநர்கள் சீனு ராமசாமி, அறிவழகன், சாய் ரமணி,பிரேம், பாலாஜி தரணிதரன், ஜனநாதன், விநியோகஸ்தர்கள் திருப்பூர் சுப்ரமணியன், அருள்பதி, நடிகர்கள் நாசர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களுடன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகை சயீஷா, நடிகை சரண்யா பொன்வண்ணன், இயக்குநர் கோகுல், ஒளிப்பதிவாளர் டட்லீ, இசையமைப்பாளர் சித்தார்த் விபின், படத்தொகுப்பாளர் சாபு ஜோசப், கலை இயக்குநர் மோகன், தயாரிப்பாளர் அருண் பாண்டியன், பாடலாசிரியர் லலிதானந்த், நடன இயக்குநர் ஸ்ரீதர் உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.
இதில் தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி படத்தின் இசைதகட்டை வெளியிட, படக்குழுவினரும் வந்திருந்த சிறப்பு விருந்தினர்களும் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
விழாவின் தொடக்கத்தில் ‘லோலிக்ரியா..’ எனத் தொடங்கும் பாடலுக்கு சிறுவர்களும், சிறுமிகளும் மேடையில் நடனமாடினர்.
இந்நிகழ்வில், விஜய் சேதுபதி பேசுகையில்,‘ இந்த படம் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறது. இது டான் படமாக இருந்தாலும் ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு அப்ரோச் இருக்கிறது. எல்லா டான் படமும் ஒரேமாதிரியாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. இந்த படத்தில் நடித்திருக்கும் டான் கேரக்டர் கஞ்சத்தனமானவர் இல்லை. சிக்கனமானவர். தேவையில்லாமல் செலவு செய்பவரில்லை. அதாவது இந்த சப்ஜெக்டில் தான் நான் சிக்கனமானவராக நடித்திருக்கிறேன். ஆனால் படத்தின் பட்ஜெட் மற்ற விசயங்களை பிரம்மாண்டமாகவே எடுத்திருக்கிறோம்.
இதில் பஞ்ச் இருக்கா? இல்லையா? என்று என்னிடம் கேட்பதை விட, அதை ரசிகர்கள் தான் தேர்தெடுக்கிறார்கள். நாங்கள் அதனை டயலாக்காகத்தான் பேசுகிறோம்.
ஜுங்கா என்றால் என்ன? என்பதை படத்தில் ஒரு காட்சியாகவே வைத்திருக்கிறோம். அதனால் இப்போது அதைப் பற்றி விரிவாக சொல்லமுடியாது.
இந்த படத்தில் நடிக்கும் டான் கேரக்டருக்கும் ஒரு லட்சியம் இருக்கிறது.
படத்தில் என்னுடன் யோகி பாபு நடித்திருக்கிறார். அவருடைய ஒன்லைன் பஞ்ச் என்னோட ஃபேவரைட். எந்த சூழலாக இருந்தாலும் அதனை எளிதாக கையாளக்கூடிய திறமையை நன்றாக கற்றுக் கொண்டிருக்கிறார்.’ என்றார்.