
மலையாள இயக்குனர் அஜு குளுமலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “டிராமா”. கிஷோர் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஜெய்பாலா நாயகனாகவும் காவ்யா பெல்லு நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்.
இந்த படமானது ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கிறது.
கதைப்படி,
கிராமத்தில் இருக்கும் காவல்நிலையத்தில், ஜெய்பாலா புதிதாக எஸ் ஐ பொறுப்பேற்று பணியில் அமர்கிறார். அதே, ஸ்டேஷனில் ஏட்டாக வருகிறார் சார்லி. கூடவே சக போலீஸாரும் அங்கு பணியில் இருக்கின்றனர்.
ஜெய்பாலாவின் காதலியாக வருகிறார் காவ்யா பாலு. காவல்நிலையத்திற்கு காதல் ஜோடி ஒன்றும் தஞ்சம் கொள்கிறது.
இச்சமயத்தில், காவ்யா பாலுவின் பிறந்தநாள் தினத்தை சக காவலர்கள் காவல்நிலையத்தில் கொண்டாடுகின்றனர். அச்சமயத்தில், மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. மின்சாரம் மீண்டும் வரும் சமயத்தில், அங்கு சார்லி கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். இதனால் ஒட்டுமொத்த காவல்நிலையமும் அதிர்ச்சியாகிறது.
அங்கு இருக்கும் யாரோ ஒருவரால் தான் சார்லி கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது தெரியவர, யார் அவர்.? என்பதை விசாரிக்க வருகிறார் கிஷோர்.
குற்றவாளியை கிஷோர் கண்டுபிடித்தாரா.? எதற்காக சார்லி கொலை செய்யப்பட்டார் என்பது படத்தின் இரண்டாம் பாதியின் கதையாக வருகிறது.
ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட இப்படம், மற்ற படங்களில் இருந்து சற்று மாறுபட்டு நிற்கிறது. ஒளிப்பதிவில் சற்று குறைகள் ஆங்காங்கே தென்பட்டாலும், நடிகர்களின் நடிப்பை பெரிதாக பாராட்டலாம்.
காமெடி என்ற பெயரில், பெண்களின் அங்கங்களை குறியீட்டு காட்டும் காட்சிகளை தவிர்த்திருந்திருக்கலாம். அருமையான த்ரில்லர் கதையை கையில் எடுத்த இயக்குனர் அதை காட்சிப்படுத்தியதிலும் வென்று காட்டியிருக்கிறார்.
ஒரே ஷாட்டில் படத்தை எடுத்து பாராட்டுகளை பெற்றிருந்தாலும், ஒரே ஷாட் இக்கதைக்கு தேவையா என்று தான் கேட்க தோன்றுகிறது.
கேரக்டர்கள் அனைவரும் படத்திற்கு தேவையானதை கொடுத்திருக்கிறார்கள். பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. என்ன மாதிரியான இன்வஸ்டிகேஷனை கிஷோர் செய்கிறார் என்ற காட்சியையும் நமக்கு தெளிவாக கொடுத்திருந்திருக்கலாம்.
மற்றபடி “டிராமா” – உழைப்பை பாராட்டலாம்..