ஒரு குப்பை கதை” படத்தின் மூலமாக சினிமா ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களின் பாராட்டுக்களை வாரிக் குவித்தவர் மனிஷா யாதவ். ஏற்கனவே, “வழக்கு எண்18/9”, “ஆதலால் காதல் செய்வீர்”,”ஜன்னல் ஓரம்” என வரிசையாக முத்திரை பதித்த இயக்குநர்களுடன் பயணித்தவர்.
நிதானமாக கதைகளை தேர்வு செய்து நடிப்பது, ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்திற்காக முழுமையான அர்ப்பணிப்போடு உழைப்பது என அவசரப்படாமல் தமிழ் சினிமாவில் ஐந்தாண்டுகளை நிறைவு செய்திருக்கிறார் மனீஷா. இந்த பக்குவம் குறித்து அவர் கூறுகையில்,
“பாலாஜி சக்திவேல், சுசீந்திரன், கரு.பழனியப்பன்.. என வரிசையாக முதல் மூன்று படங்களுமே முக்கியமான இயக்குநர்களுடையது. அந்த வகையில் நிஜமாகவே நான் ரொம்ப லக்கினு தான் சொல்வேன். “வழக்கு எண்” நடிச்சிட்ருக்கும் போதே எனக்கு “ஆதலால் காதல் செய்வீர்” வாய்ப்பு கிடைச்சது. அதே போலதான் “ஜன்னல் ஓரம்” படமும். இந்த மூன்று படமுமே எனக்கு மொத்த சினிமாவையும் கத்து கொடுத்திடுச்சு. அங்கிருந்து தான் நான் “ஒரு குப்பைக் கதை” படத்தில் நடிப்பதற்கான அனுபவத்தை படித்துக் கொண்டேன்” என்கிறார் அழகு தமிழில்.
தமிழ்த் திரையுலகில் அறிமுகமான இந்த ஐந்தாண்டுகளில் நடிப்பு மட்டுமல்லாமல், தமிழ் மொழியையும் முழுமையாக கற்றுக்கொண்டிருக்கிறார். சரளமாக தமிழில் பேசி அசத்தும் அவர், “முன்பிலிருந்தே தமிழ் பேசுவேன். ஆனால் இப்போது தான் பிழையில்லாமல், தைரியமாக பேசுகிறேன்” என்கிறார்.
“என் மனதுக்கு திருப்தி தராத கதைகளில் நடிக்க நான் விரும்புவதில்லை. படத்தில் வெறும் பொம்மையாக வந்து செல்லமுடியாது. என்னுடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும். நிறைய படங்களை என் பிடிவாதத்தால் இழந்துள்ளேன். கதையும் கதாபாத்திரமும் தான் எனக்கு முக்கியம்”
என்று அழுத்தம் திருத்தமாக கூறும் மனீஷா யாதவ், தற்போது தீவிரமாக கதைகள் கேட்டு வருகிறார். முன்னணி கதாநாயகன் ஒருவரது படத்தில் நடிப்பதற்கான இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் இருக்கும் அவர், விரைவில் அது குறித்த அறிவிப்பையும் வெளியிட இருக்கிறார்.