Spotlightசினிமா

ரூ. 59 கோடி செக் மோசடி செய்ததாக சகோதரி அம்பிகா மற்றும் சகோதரர் மீது நடிகை ராதா புகார் !!`

நடிகை ராதா தனது சகோதரி மற்றும் சகோதரன் மீது காசோலை திருடப்பட்ட விவகாரம் குறித்து காவல் ஆணையரிடம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில்,

சென்னை போரூரில் ‘RR Garden’ என்ற பெயரில் தொழில் நடத்தி வரும் உதயசந்திரிகா என்கிற ராதா, தனது பழைய காசோலை புத்தகத்தில் இருந்த கையெழுத்திடப்பட்ட வெற்று காசோலைகள் திருடப்பட்டு, பல கோடி ரூபாய் தொகை நிரப்பப்பட்டு வங்கியில் பணமாக்குவதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் தனது சகோதரி அம்பிகா நாயர் மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுன குஞ்சன் நாயர் என்கிற அர்ஜுன் நாயர் மீது விசாரணை நடத்தி உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தனது புகார் மனுவில் கோரியுள்ளார். இவை புகார் மனுவில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மட்டுமே; காவல்துறை விசாரணையின் முடிவு இதில் குறிப்பிடப்படவில்லை.

RR Garden உரிமையாளர் அளித்த புகார்

சென்னை போரூர் ஆர்காடு சாலையில் ‘RR Garden’ என்ற பெயரில் தொழில் நடத்தி வருவதாக உதயசந்திரிகா தனது புகாரில் தெரிவித்துள்ளார். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாய், சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட குடும்ப ஏற்பாட்டின் மூலம் RR Gardens சொத்து தனக்கு கிடைத்ததாகவும், அதன் உரிமையாளராகவும் Proprietrix ஆகவும் தொழிலை நிர்வகித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தனது தொழில் ‘ARS Garden Studio’ என்ற பெயரில் செயல்பட்டு வந்ததாகவும், அந்த நிறுவனத்திற்காக போரூர் IDBI வங்கிக் கிளையில் நடப்புக் கணக்கு வைத்திருந்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டு அந்த வங்கிக் கணக்கிற்காக 50 காசோலைத் தாள்கள் கொண்ட காசோலை புத்தகம் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டில் கையெழுத்திட்ட வெற்று காசோலைகளை வைத்திருந்ததாக தகவல்

தொழில் மற்றும் தனிப்பட்ட பணிகள் காரணமாக கேரளா, மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பல இடங்களுக்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டு வந்ததாக உதயசந்திரிகா தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

சென்னைக்கு வரும்போது வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டின் தரைத்தளப் பகுதியில் தங்குவது வழக்கம் என்றும், அதே தரைத்தளத்தில் தனது சகோதரி அம்பிகா நாயரும் வசித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். குடும்ப உறவின் காரணமாக தனது பகுதியில் சகோதரிக்கு அணுகல் அனுமதி இருந்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

தான் வெளியூரில் இருக்கும் நேரங்களில் ஊழியர்களுக்கான சம்பளம், மின் கட்டணம், சொத்து வரி, குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி, தோட்ட பராமரிப்புக்கான பொருட்கள் வாங்குதல் உள்ளிட்ட வழக்கமான செலவுகளை மேற்கொள்வதற்காக 5 அல்லது 6 கையெழுத்திடப்பட்ட வெற்று காசோலைகளை தனது அறையில் வைத்திருப்பது வழக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ARS Garden Studio பெயர் RR Garden ஆக மாற்றம்

இதற்கிடையே ‘ARS Garden Studio’ என்ற தனது தொழில் பெயரை ‘RR Garden’ என மாற்றியதாகவும், 2025 ஜனவரி 7ஆம் தேதி GST பதிவிலும் அதற்கான மாற்றம் செய்யப்பட்டதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து IDBI வங்கியின் போரூர் கிளைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், அதன்படி 2025 ஜனவரி 22ஆம் தேதி வங்கிக் கணக்கிலும் தொழில் பெயர் மாற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

புதிய தொழில் பெயரில் புதிய காசோலை புத்தகம் வழங்கப்பட்டதால், பழைய காசோலை புத்தகத்தை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டதாகவும், அது செல்லாததாகிவிட்டதாகக் கருதி அதனை கவனிக்காமல் விட்டதாகவும் உதயசந்திரிகா தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 17-ல் வங்கியிலிருந்து வந்த தகவல்

இந்தச் சூழ்நிலையில், 17.09.2026 அன்று, எனக்கு மிகுந்த அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்படும் வகையில், போரூர் IDBI வங்கிக் கிளையிலிருந்து எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், பழைய மற்றும் செல்லாத அதிக மதிப்புள்ள கீழ்க்கண்ட காசோலைகள், எனது சகோதரி அம்பிகா நாயர் பெயரில் பணமாக்குவதற்காக வங்கியில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

காசோலை எண் 322563 – ரூ.11,00,000/-
காசோலை எண் 322564 – ரூ.13,17,00,000/-
காசோலை எண் 322566 – ரூ.27,73,00,000/-
காசோலை எண் 322567 – ரூ.7,00,00,000/-
காசோலை எண் 322568 – ரூ.1,79,00,000/-

இதுகுறித்து தெரியவந்தவுடன், உடனடியாக எனது வங்கிக் கிளையை தொடர்புகொண்டு, மேற்கண்ட காசோலைகளுக்கான பணப்பரிவர்த்தனையை நிறுத்துமாறு (Stop Payment) கோரிக்கை விடுத்தேன். அந்தக் காசோலைகள் திருடப்பட்டு, சட்டவிரோத ஆதாயத்திற்காக தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நான் தெரிவித்தேன்.

எனது சகோதரி அம்பிகா நாயருக்கு எந்தவொரு சட்டபூர்வமான கடன் அல்லது பொறுப்பை நிறைவேற்றுவதற்காகவும் நான் மேற்கண்ட காசோலைகளை வழங்கவில்லை. மேலும், எனக்கும் எனது சகோதரி அம்பிகா நாயருக்கும் இடையே எந்தக் காலகட்டத்திலும் எந்தவிதமான பணப் பரிவர்த்தனையும் நடைபெற்றதில்லை.

இதுதொடர்பாக எனது வங்கியிடம் மேலும் விசாரித்தபோது, மேற்கண்ட காசோலைகளில் உள்ள விவரங்கள் எனது சகோதரர் மல்லிகார்ஜுன குஞ்சன் நாயர் என்கிற அர்ஜுன் நாயரின் கையெழுத்தில் நிரப்பப்பட்டிருப்பதாக தெரியவந்ததாக புகாரில் தெரிவித்துள்ளேன்.

மேலும், எனது சகோதரர் Foreign Exchange Management Act, 1999 (FEMA) தொடர்பான பல்வேறு நிதி குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், அவருக்கு எதிராக குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளேன். மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் FEMA தொடர்பான CMA No.3866 of 2025 வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, மிகப்பெரிய தொகையை அபராதமாக செலுத்த வேண்டிய அழுத்தத்தில் அவர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளேன்.

எனவே, எனது சகோதரி அம்பிகா நாயர் மற்றும் எனது சகோதரர் மல்லிகார்ஜுன குஞ்சன் நாயர் @ அர்ஜுன் நாயர் ஆகியோர் சட்டவிரோதமாக ஆதாயம் பெறும் நோக்கத்துடன், என்னை ஏமாற்றி மோசடி செய்வதற்காக கூட்டுச் சதி செய்துள்ளதாக நான் குற்றம்சாட்டுகிறேன்.

நான் இல்லாத நேரத்தில் எனது அறைக்குள் அத்துமீறி நுழைந்து, நான் கையெழுத்திட்டு வைத்திருந்த வெற்று காசோலைகளை எனக்குத் தெரியாமல் எடுத்துச் சென்று, அதில் தங்களது விருப்பப்படி பெயர், தொகை மற்றும் தேதியை நிரப்பி, அவற்றை எனது வங்கியில் பணமாக்குவதற்காக சமர்ப்பித்துள்ளதாகவும் புகாரில் தெரிவித்துள்ளேன். இந்தச் செயல்கள் சட்டவிரோதமானவை என்றும், BNS (Bharatiya Nyaya Sanhita) சட்ட விதிகளின்படி குற்றமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளேன்.

மேலும், எனது அறையில் தங்கம் மற்றும் வைர நகைகள், சொத்து ஆவணங்கள், வங்கி ஆவணங்கள், பதிவுகள், பரிசுப் பொருட்கள் உள்ளிட்ட பல மதிப்புமிக்க பொருட்களையும் வைத்திருந்தேன். அவை பாதுகாப்பாக உள்ளனவா என்பதை நான் சரிபார்ப்பதற்கும் எனது சகோதரி அம்பிகா நாயர் மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுன குஞ்சன் நாயர் @ அர்ஜுன் நாயர் ஆகியோர் சட்டவிரோதமாக தடையாக இருப்பதாகவும் புகாரில் கூறியுள்ளேன்.

எனவே, எனது இந்தப் புகாரை பரிசீலித்து, சம்பந்தப்பட்ட விவகாரம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி, எனது சகோதரி அம்பிகா நாயர் மற்றும் எனது சகோதரர் மல்லிகார்ஜுன குஞ்சன் நாயர் @ அர்ஜுன் நாயர் ஆகியோர் மீது அவர்கள் செய்ததாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பாக தேவையான குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி!

இப்படிக்கு,
உதயசந்திரிகா @ ராதா

என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது…

Facebook Comments

Related Articles

Back to top button