
விழித்திரை பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதன் மூலம் பார்வை இழப்பைத் தடுக்கும் நோக்கில் தமிழக அரசு ‘விழித்திரை காப்போம்’ என்ற முன்னோடித் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது.
இந்தியாவிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி, சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் செயல்படும் மண்டல கண் மருத்துவக் கழகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் கண் மருத்துவத் துறைத் தலைவர்களின் ஒருங்கிணைப்புடன், எம்.எம்.எம். கண் மருத்துவமனைகள் ஏற்பாட்டில், அப்பாசாமி அசோசியேட்ஸ் நிறுவனத்தின் ஆதரவுடன் முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் டாரெஷ் அகமது ஐ.ஏ.எஸ்., தமிழ்நாடு சுகாதார அமைப்புத் திட்டத்தின் திட்ட இயக்குநர் டாக்டர் எஸ். சுப்பிரமணி ஐ.ஏ.எஸ்., மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் வி. லோகநாயகி, சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் டாக்டர் கே. சாந்தாராம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மேலும், மூத்த கண் மருத்துவர்கள், கல்வியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை வல்லுநர்களும் கலந்துகொண்டனர்.
ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் மேம்பட்ட மருத்துவச் சிகிச்சை கிடைப்பதை உறுதிப்படுத்தவும் தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை விளக்கினார்.
குறிப்பாக, சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படக்கூடிய விழித்திரை பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
இந்தியாவில் சுமார் 10.1 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 13.6 கோடி பேர் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு ஏழு பேரில் ஒருவருக்கு விழித்திரை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.
கிராமப்புறங்களில் சர்க்கரை நோயின் பாதிப்பு 19.8 சதவீதம் முதல் 22.5 சதவீதம் வரையிலும், நகர்ப்புறங்களில் சுமார் 32 சதவீதமாகவும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
‘விழித்திரை காப்போம்’ திட்டத்தின் மூலம் விழித்திரை பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சை வழங்குவதற்கான வாய்ப்பு உருவாகும். இதன் மூலம் தவிர்க்கக்கூடிய பார்வை இழப்புகளைத் தடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அறிகுறிகள் இல்லாமலேயே தீவிரமடையும் பாதிப்புகள்
மண்டல கண் மருத்துவக் கழக இயக்குநர் டாக்டர் விநாயக் மூர்த்தி கூறியதாவது:
“சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்துடன் தொடர்புடைய விழித்திரை பாதிப்புகள், ஆரம்பக் கட்டங்களில் வெளிப்படையான அறிகுறிகள் இல்லாமலேயே தீவிரமடையக்கூடும். பரிசோதனை மற்றும் பரிந்துரை முறைகளை வலுப்படுத்துவதன் மூலம் விழித்திரையில் ஏற்படும் மாற்றங்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறியலாம். நோயாளிகள் உரிய நேரத்தில் சிறப்பு மருத்துவச் சிகிச்சையைப் பெறுவதையும் உறுதிப்படுத்த முடியும். சமூக அளவில் கட்டமைக்கப்பட்ட விழித்திரை பரிசோதனை மற்றும் சிகிச்சையைக் கொண்டு சேர்ப்பதில் ‘விழித்திரை காப்போம்’ திட்டம் முக்கிய முன்னெடுப்பாக அமையும்.”
ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மருத்துவக் கல்லூரிகள் வரை
‘விழித்திரை காப்போம்’ திட்டத்தை ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் வட்டார மருத்துவமனைகள் முதல் மாவட்டத் தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வரை செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு விழித்திரை பரிசோதனை மேற்கொள்ள லேசர் அடிப்படையிலான தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட மேம்பட்ட மருத்துவத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்புகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படும் பார்வை மையங்களில் விழித்திரை பரிசோதனை மேற்கொள்வதற்கும், பாதிப்புகளைக் கண்டறிவதற்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
வட்டார மருத்துவமனைகள் மற்றும் மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில் உள்ள பரிந்துரை மையங்களில், விழித்திரை பரிசோதனை அறிக்கைகள் கண் மருத்துவ நிபுணர்களால் ஆய்வு செய்யப்படும். மேல் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் உரிய மருத்துவ மையங்களுக்குப் பரிந்துரைக்கப்படுவார்கள்.
பரிசோதனை முதல் சிகிச்சை வரை தொடர் செயல்முறை
மண்டல கண் மருத்துவக் கழகத்தின் விழித்திரை சிகிச்சைப் பிரிவுத் தலைவர் டாக்டர் ராஜ்ஷேகர் கூறியதாவது:
“விழித்திரை பாதிப்புகளைப் பரிசோதனை மூலம் கண்டறிவதில் தொடங்கி, சிறப்பு மருத்துவ மதிப்பீடு மற்றும் சிகிச்சை வரை தெளிவான தொடர் செயல்முறையை உருவாக்குவதுதான் இத்திட்டத்தின் முக்கிய பலம். பல்வேறு நிலைகளில் உள்ள மருத்துவ வசதிகள் மற்றும் பரிந்துரை மையங்களை வலுப்படுத்துவதன் மூலம், மேம்பட்ட சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை உரிய கட்டத்திலேயே கண்டறிந்து பரிந்துரைக்க முடியும்.”
நவீன பரிசோதனை மற்றும் சிகிச்சை வசதிகள்
மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில், ஒளியியல் ஒத்திசைவு வரைவியல் எனப்படும் OCT மற்றும் விழித்தள ஒளிர்மப் பொருள் நிறமாலை வரைவியல் எனப்படும் FFA உள்ளிட்ட நவீன உபகரணங்கள் மூலம் விழித்திரை பரிசோதனை வசதிகள் வலுப்படுத்தப்படும்.
தேவையான நோயாளிகளுக்கு லேசர் சிகிச்சை மற்றும் கண்களில் ஊசி மூலம் மருந்து செலுத்தும் சிகிச்சைகள் உள்ளிட்ட நவீன சிகிச்சை முறைகள், விழித்திரை மருத்துவ நிபுணர்களால் வழங்கப்படும்.
ஒன்பது மண்டல மையங்களில் அறுவைச் சிகிச்சை வசதி
தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அமைந்துள்ள ஒன்பது மண்டல மையங்களில், மேம்பட்ட விழித்திரை அறுவைச் சிகிச்சை வசதிகள் வலுப்படுத்தப்பட உள்ளன.
சென்னை, வேலூர், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, சேலம், கோயம்புத்தூர், தஞ்சாவூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் இந்த மண்டல மையங்கள் செயல்படும்.
இந்த மையங்களில் தேவையான மருத்துவ உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படுவதுடன், கண் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மேம்பட்ட பயிற்சிகளும் முதுநிலைப் பயிற்சிகளும் வழங்கப்படும்.
உச்சநிலைப் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் மையம்
சென்னை எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனை, ‘விழித்திரை காப்போம்’ திட்டத்தின் கீழ் மேம்பட்ட சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கான முதன்மைப் பரிந்துரை மையமாகச் செயல்படும்.
மேலும், மேம்பட்ட சிகிச்சை, மருத்துவப் பயிற்சி மற்றும் வழிகாட்டுதலுக்கான உச்சநிலை மையமாகவும் இந்த மருத்துவமனை செயல்பட உள்ளது.
எம்.எம்.எம். கண் மருத்துவமனைகளின் இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் எஸ். பெர்னார்ட் கூறியதாவது:
“விழித்திரை பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதை வலுப்படுத்தும் முக்கிய முன்னெடுப்பாக ‘விழித்திரை காப்போம்’ திட்டம் அமைந்துள்ளது. பரிசோதனை, பரிந்துரை, சிறப்பு மருத்துவச் சிகிச்சை மற்றும் பயிற்சி ஆகியவற்றை கட்டமைக்கப்பட்ட முறையில் இத்திட்டம் ஒருங்கிணைக்கிறது. தவிர்க்கக்கூடிய பார்வை இழப்பைத் தடுக்கும் இந்த முன்னெடுப்பில் பங்களிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.”
இந்தத் திட்டத்தை திறம்படச் செயல்படுத்த தமிழக அரசு முழுமையாகத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழித்திரை பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை வழங்குவதற்கான இந்த முன்னெடுப்பு, தமிழகத்திலும் இந்தியாவிலும் முதன்முறையாகச் செயல்படுத்தப்பட உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. பார்வை இழப்பைத் தடுப்பதுடன், நாட்டின் மருத்துவ மற்றும் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும் முன்னோடித் திட்டமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.





