ஒரு அழகிய கிராமத்தில் சமுத்திரக்கனி தனது மகன், மகளோடு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.
மற்றவர்களை ஏமாற்றி பணம் பறிப்பது சமுத்திரக்கனியின் வேலை. கூடவே ஐஸ் வியாபாரமும் செய்து வருகிறார்.
சமுத்திரக்கனியின் செயலைக் கண்டு கண்டு அவர் மீது பெரிய வெறுப்பை வளர்த்துக் கொள்கிறார் அவரது மகன் மணிகண்டன்.
காலங்கள் செல்ல, மணிகண்டன் வாலிப வயதை எட்ட, காதலும் தொற்றிக் கொள்கிறது. ஊரின் பண்ணையார் மகளை காதலிக்க ஆரம்பிக்கிறார்.
காதலியும் காதலை ஏற்றுக் கொள்ள, ஆற்றில் ஓடும் நீர் போல காதலும் அமைதியாக சென்று கொண்டிருக்கிறது.
ஒரு கட்டத்தில், சற்று புரிதலில் ஏற்பட்ட சண்டை காதலை பிரிக்கிறது. கோபத்தில் சென்னைக்கு சென்று விடுகிறார் மணிகண்டன்.
திடீரென ஒருநாள், அப்பா இறந்துவிட்டதாக போன் வர, ஊருக்கு வருகிறார் மணிகண்டன்.
அதன் பின் அங்கு அரங்கேறும் அலப்பறைகளே படத்தின் மீதிக் கதை.. இந்த அலப்பறைக்குள் மணிகண்டனின் காதல் என்னவானது என்பதையும் காணலாம்.
இதுவரை யாரும் பாத்திராத, ரசித்திராத கதாபாத்திரத்தில் தோன்றி அசத்தியிருக்கிறார் சமுத்திரக்கனி. அட்வைஸ், ஆக்ஷன் என்ற கோணங்களில் பார்க்கப்பட்ட சமுத்திரக்கனியை இப்படி ஒரு கதாபாத்திரத்தில் பார்ப்பது சற்று வித்தியாசமாக இருந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படியாக தனது கேரக்டரை செவ்வென செய்திருக்கிறார். கிராமத்தில் அரங்கேறும் ஒரு சில காமெடிகள், நிகழ்வுகளை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் சமுத்திரக்கனி. அதிலும், க்ளைமாக்ஸ் காட்சிகள் அட்டகாசம்.
சில்லுகருப்பட்டியில் பார்த்த அதே காதல், ஏக்கம், பிரிவு என தனது காதலை காட்டியிருந்தாலும், ஒரு படி மேல் சென்று தனது கேரக்டரை கச்சிதமாக செய்திருக்கிறார் மணிகண்டன். அப்பாவின் மீது முதலில் வெறுப்பு வருவதும், பின்பு பாசம் வருவதும் என கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் மணிகண்டன்.
பண்ணையார் வீட்டு மகளாக வரும் மதுமதி அழகு தேவதையாக வந்து செல்கிறார். காதலில் மிளிர்கிறார்.
சில்லு கருப்பட்டி படத்திற்கு பிறகு ஒரு அழகான கிராமத்து விருந்தை படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஹலிதா ஷமீன். இறுதிசடங்கில் கிழவன்கள், கிழவிகளின் ரவுசுகளை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் வைத்த ட்விஸ்ட் படத்திற்கு மிகப்பெரும் பலம்.
தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு கிராம அழகை கண்முன்னே கொண்டு வந்திருக்கிறது. கபிர் வாசுகி மற்றும் அருள்தேவ் இவர்களது இசையில் பின்னனி இசை கதையின் நகர்வுக்கு உதவியிருக்கிறது.
மேலும், படத்தில் நடித்த சனா உதயகுமார், கைலாஷ், அகல்யா, தமிழரசன், சுதர்சன் காந்தி, கணேஷ், சரண்யா ரவிச்சந்திரன், ஆனந்த் என அனைவரும் படத்தின் கதைக்கேற்ற கதாபாத்திரங்கள் தான்.
ஏலே – ஏலே.. எல்லோரும் போய் படத்த பாருங்களே.. நல்லா இருக்குலே