Spotlightவிமர்சனங்கள்

பக்ரீத்; விமர்சனம் 3.75/5

திருவள்ளூர் மாவட்டம் ஒர் அழகிய கிராமத்தில் விவசாயம் மட்டுமே தெரிந்த ஒரு சாதாரண விவசாயியாக வருகிறார் விக்ராந்த். மனைவி வசுந்த்ரா மற்றும் தனது 5 வயது மதிக்கத்தக்க அழகிய மகளுடன் ஏழ்மை வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

சகோதரனுடன் ஏற்பட்ட தகராறில் 7 வருடத்திற்கு பிறகு, தனக்கு சேர வேண்டிய விவசாய நிலம் கைக்கு வந்ததும் அதில் விவசாயம் செய்ய நினைக்கிறார் விக்ராந்த். ஆனால், கையில் துளியும் பணம் இல்லாத நிலையில் வங்கியின் கடனுதவியை நாடுகிறார்.

வங்கியின் நிதியுதவி வேண்டும் என்றால், ஆரம்பமாக விவசாய நிலத்தில் முதற்கட்ட பணிகளையாவது செய்திருக்க வேண்டும். அதன் செலவிற்கு பணம் பெறுவதற்காக நண்பன் உதவியோடு அக்கிராமத்தில் இருக்கும் ஒரு முஸ்லீம் பாய் ஒருவரிடம் கடன் வாங்க செல்கிறார் விக்ராந்த்.

அச்சமயத்தில், பக்ரீத் கொண்டாட ராஜஸ்தானில் இருந்து பெரிய ஒட்டகம் ஒன்று பாய் வீட்டிற்கு வர, அதனோடு அதன் குட்டி ஒட்டகத்தையும் அழைத்து வந்து விடுகின்றனர்.

அந்த குட்டி ஒட்டகத்தை தான் வளர்த்துக் கொள்கிறேன் என்று விக்ராந்த் தனது வீட்டிற்கு அழைத்து வருகிறார்.

10 மாத காலங்கள் தனது வீட்டில் வைத்து பராமரித்து வருகிறார் விக்ராந்த்.அவரது மகளும், மனைவி வசுந்த்ராவும் அந்த ஒட்டகத்தின் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருக்கின்றனர்.

இங்கே இருக்கும் கால சூழல், உணவு முறை ஒட்டகத்திற்கு ஒத்துக் கொள்ளாமல் போக, அதை ராஜஸ்தானில் கொண்டு விட்டு விடுங்கள் என்கிறார் மருத்துவராக வரும் எம் எஸ் பாஸ்கர்.

எங்கிருந்தாவது வாழ்ந்தால் போதும் என்று ராஜஸ்தானுக்கு அழைத்துச் செல்கிறார் விக்ராந்த். அதன் பிறகு அவர் படும் இன்னல்களே படத்தின் மீதிக் கதை…

இதுவரை திரையில் பார்த்திராத ஒரு நடிப்பை விக்ராந்த் வெளிப்படுத்தியுள்ளார். இப்படத்திற்கு பிறகு ”பக்ரீத் படத்திற்கு முன் பக்ரீத் படத்திற்கு பின்” என்றே விக்ராந்தின் திரைப்பயணத்தை பிரித்துக் கொள்ளலாம். கதாபாத்திரத்தோடு வாழ்ந்து ஒட்டு மொத்த கதையையும் தாங்கிச் செல்கிறார்.

ஒரு ஒட்டகத்தின் மீதான காதல், பிரிவு, பாசம் என்று அனைத்தும் ஒரு சேர மனிதனாக இப்படத்தில் கொடுத்து கதையோடு வாழ்ந்திருக்கிறார். ஒட்டகத்தை இழந்து விக்ராந்த் வாடும் போது,அவரோடு சேர்ந்து ரசிகர்களையும் வாட்டி அவர்களின் கண்களிலும் நீரை எட்டிப் பார்க்க வைக்கிறார்.

விக்ராந்த் இதன் பிறகு எத்தனை படங்கள் நடித்தாலும், இப்படம் நிச்சயம் ஒரு மைல்கல்லாக அமைந்திருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

ஒரு கிராமத்து விவசாயியின் மனைவியாக வசுந்த்ராவின் நடிப்பும் பாராட்டுக்குறியது. கிராமத்து பெண்ணாக தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்து கொடுத்திருக்கிறார்.

இவர்களது குழந்தையாக வரும் ஷ்ருத்திகா அழகான தேவதையாக வந்து செல்கிறார்.

மேலும், படத்தில் நடித்த மோக்லி , ரோகித் பதக் ஆகியோரும் கதாபாத்திரங்களுக்கேற்ற பொருத்தம் தான்.

படத்தின் மிகப்பெரும் பலமே D இமானின் இசை தான். ’ஆலங்குருவிகளா …’ பாடல் ரிப்பீட் மோட் தான். பின்னனி இசை விக்ராந்த் & ஒட்டகத்தோடு சேர்ந்து ஒர் ராஜஸ்தான் பயணம்….. வலி நிறைந்த இதமான சுகம்…

ரூபனின் எடிட்டிங் ஷார்ப்…

இயக்கம், ஒளிப்பதிவு என இரண்டையும் தன் தோல் மீது சுமந்து சென்றிருக்கிறார் ஜெகதீசன் சுபு. கதை, கதாபாத்திரம் என இரண்டிலும் அவரின் மெனக்கெடல் நன்றாகவே தெரிகிறது.

படத்தின் ஆரம்பத்திலே, கதைக்குள் சென்றது படத்திற்கு மற்றொரு பலம். வீட்டில் உயிரனங்களை பாசமாக வளர்க்கும் அனைவருக்கும் இப்படம் ஏதாவது ஒரு வகையில் ஒரு வலியையோ அல்லது ஈர்ப்பையோ ஏற்படுத்தும்.

இரண்டாம் பாதியில் விக்ராந்தும் ஒட்டகமும் பிரிவதும் சேர்வதும் பிரிவதும் சேர்வதும் என ரிப்பீட் காட்சியாக இருந்தாலும் அந்த வலியை உணர வைத்து ரசிகர்களை ரசிக்க வைத்து விட்டார் இயக்குனர்.

பக்ரீத் – பாசத்தின் வெளிப்பாடு..

தயாரிப்பாளர் – MS முருகராஜ் மல்லிகா

RED GIANT MOVIES உதயநிதி ஸ்டாலின் வெளியீட்டில்….

Facebook Comments

Related Articles

Back to top button