இயக்குனர் மணிரத்னத்தின் புகழ்பெற்ற பள்ளியில் இருந்து இயக்குனரான கண்ணன் போன்ற ஒரு இயக்குனர் தனது திரைப்படங்களில் இசையின் முக்கியத்துவத்தை உணர்ந்தவராக இருப்பார். பல்வேறு இசையமைப்பாளர்களுடன் இணைந்து செயல்பட்ட போதிலும், அவரது திரைப்படங்கள் ஒருபோதும் இசை விருந்தை அளிக்க தவறியதில்லை. அதர்வா முரளி மற்றும் மேகா ஆகாஷ் ஜோடியாக நடிக்கும் ‘பூமராங்’ படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் ரதன் இசையமைத்திருப்பது படக்குழுவை தன்னம்பிக்கையோடு வைத்திருக்கிறது.
இப்படத்தின் இசையை வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியிட இருக்கிறார்கள். குறிப்பாக, சமீபத்திய ‘அர்ஜுன் ரெட்டி’ ஆல்பத்தின் மிகப்பெரிய வெற்றியால் புகழின் உச்சியில் இருக்கும் இந்த இளம் இசையமைப்பாளர் இசையமைத்திருப்பதால், பூமராங் படத்துக்கு இசை வெளியாகும் முன்பே எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.
“மிகச்சரியாக, நேர்மையாக சொல்வதென்றால், நான் அர்ஜுன் ரெட்டிக்கு முன்பே ரதனின் பெரிய ரசிகனாக இருந்திருக்கிறேன். தமிழ் மற்றும் தெலுங்கில் தனித்துவமான இலக்கணத்தை கொண்டு, உணர்வுகளை தூண்டும் இசையை வழங்கி வருகிறார். வெறும் இசையமைப்பதில் மட்டுமல்லாமல், மிக்ஸிங் செய்வதிலும், பாடல்களை முழுமையாக கொடுப்பதிலும் ரதன் செலுத்தும் கவனம் சிறப்பானது. அவருடன் இணைந்து பணிபுரிந்தது மொத்த ‘பூமராங்’ குழுவுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்கிறார் இயக்குனர் கண்ணன்.
ஆகஸ்ட் 3ஆம் தேதி படத்தின் இசையோடு சேர்த்து படத்தின் ட்ரைலரும் வெளியிடப்பட இருக்கிறது.