
சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘சீமராஜா’. படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து விட்ட நிலையில் படத்தின் இசையை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், படத்தின் இசையை மதுரை மாநகரில் வரும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி வெளியிடவுள்ளது படக்குழு.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஆர் டி ராஜா கூறும்போது, ‘மதுரை தமிழ்த் திரையுலகின் இதய துடிப்பாக விளங்கும் நகரம். இங்குள்ள ரசிகர்கள் சினிமாவுக்கு அளிக்கும் அன்பும், ஆதரவும் நம்ப முடியாதது. நாங்கள் படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில் தான் நடத்துவது என்பதில் தீர்மானமாக இருந்தோம். எங்கள் ஹீரோ சிவகார்த்திகேயனின் அபரிமிதமான வளர்ச்சியும், இந்த முடிவுக்கு மிக முக்கியமான ஒரு காரணம். மேலும் இந்த படத்தின் மையக்கதை, தமிழ்நாட்டின் தெற்கு பகுதியின் கிராமப்புறங்களை அடிப்படையாகக் கொண்டது. அதனால் இசை விழா நிகழ்ச்சியை மதுரையில் நடத்த, மனப்பூர்வமாக முடிவு செய்தோம். ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் எண்ணிக்கையில் இந்த விழாவில் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சியை ஒரு பெரிய வெற்றியாக மாற்றுவார்கள் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.