
தமிழில், தளபதி விஜய் நடித்த ‘குஷி’ படத்தின் மூலம் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் ஷாம். பின்னர் 12பி , ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, லேசா லேசா, இயற்கை, உள்ளம் கேட்குமே, உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.
தமிழை தவிர, தெலுங்கு, கன்னடம். மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் ஷாம், அவருக்கு சொந்தமாக சென்னை நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலையில் அமைந்துள்ள அடுக்கு மாடி குடியிருப்பில், அடிக்கடி பணம் வைத்து சீட்டு விளையாடி, சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனால் நேற்றிரவு, போலீசார் திடீர் என, நடிகர் ஷாமுக்கு சொந்தமாக உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள வீடுகளை திடீர் என சோதனை செய்தனர். அதில் ஒரு வீட்டில் நடிகர் ஷாம் உட்பட 13 பேர், சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அவர்களை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, பணம் மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்துபோலீசார் விசாரணை செய்த போது, இங்கு சீட்டு விளையாடுவதற்காக பல இயக்குனர்கள், நடிகர்கள், தொழிலதிபர்கள் வருவது வழக்கம் என்று, இந்த வீட்டை நடிகர் ஷாம், சூதாட்ட கிளப் போல் வைத்திருந்ததும் தெரிய வந்துள்ளது.
இரவு நேரத்தில் போலீசார் பிரபல நடிகர் உட்பட 13 பேரை கைது செய்துள்ள சம்பவம், தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





