Spotlightசினிமாவிமர்சனங்கள்

ஆகஸ்ட் 16, 1947 – விமர்சனம் 3.5/5

.ஆர்.முருகதாஸ் புரொடக்‌ஷன் சார்பில் ஏ.ஆர்.முருகதாஸ், ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் செளத்ரி தயாரித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ‘ஆகஸ்ட் 16,1947’ இத்திரைப்படத்தை பொன்குமார் இயக்கியிருக்கிறார்.

கெளதம் கார்த்தி, ரேவதி, புகழ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

கதைப்படி,

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது தெரியாமல் வாழும் ஒரு கிராம மக்களின் வாழ்க்கை தான் இந்த திரைப்படத்தின் மூலக்கரு.

சுதந்திரம் கிடைப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன் கதை ஆரம்பிக்கிறது. திருநெல்வேலி அருகே ஒரு கிராமத்தில், வெள்ளையர்களின் ஆட்சியான அக்காலத்தில் அக்கிராமமே அவர்களுக்கு கொத்தடிமைகளாக பருத்தி நூல் உற்பத்தி செய்து வருகின்றனர்.

ராபர்ட் என்ற வெள்ளைக்கார தலைவனின் கீழ் அக்கிராமம் இருக்கிறது. ராபர்ட்க்கு ஜஸ்டின் என்ற மகனும் இருக்கிறான். இவன், அக்கிராமத்தில் இருக்கும் அனைத்து பெண்களையும் சிறுமிகளையும் சீரழிப்பதையே வழக்கமாக வைத்து வருகிறான் . இதனாலேயே பெண்களை உயிரோடு அவர்களது பெற்றோர்கள் புதைத்து கொன்றும் விடுகிறார்கள்.

அதே கிராமத்தைச் சேர்ந்தவரான கெளதம் கார்த்திக் கிராம மக்கள் மீது இருக்கும் வெறுப்பினால் ராபர்ட்க்கும், அந்த பகுதியின் ஜமீன்தாருக்கும் பணிவிடை செய்து வருகிறார்.,

ஜஸ்டின் கண்படாமல் தனது மகளான ரேவதியை வீட்டிற்குள்ளேயே பூட்டி வைத்து வளர்த்து வருகிறார் ஜமீன்.

கெளதம் கார்த்திக் ரேவதியை ஒருதலையாக காதலித்து வருகிறார்.

இச்சமயத்தில், ஜஸ்டின் கண்ணில் ரேவதி பட்டுவிட அதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

கெளதம் கார்த்திக்கின் காதல் வென்றதா.? சுதந்திரம் அடைந்தது மக்களுக்கு எப்படி தெரிந்தது.?

நாயகன் கெளதம் கார்த்திக், தனது கதாபாத்திரத்திற்கான மெனக்கெடலை கொடுத்திருக்கிறார். ஆனால், அது 100 சதவீதம் கைகொடுத்ததா என்பது கேள்விக்குறி தான். தனியாக ஸ்கோர் செய்ய பல இடங்கள் இருந்தும் அதை சரியாக கெளதம் பயன்படுத்தவில்லையோ என்ற சந்தேகம் தான் எழுகிறது.

நாயகி ரேவதி ஆரம்பத்தில் கதையோடு ஒட்டவில்லை என்றாலும் போக போக கதையோடு ஒட்டிக் கொண்ட கதாபாத்திரமாக நெஞ்சில் பதிகிறார்.

கெளதம் கார்த்திக்கிற்கும் புகழுக்கும் இடையேயான காட்சிகள் கச்சிதமாக வொர்க் ஆகியுள்ளது. பல படங்களில் காமெடி கேரக்டரில் எட்டிப் பார்த்து வந்த புகழ், இந்த படத்தில் ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

அதிலும் சுதந்திரம் கிடைத்துவிட்டது என்பதை தனது ஊர் மக்களிடம் சொல்வதற்கு புகழ் முற்படும் காட்சிகளில், தனது நடிப்பால் அனைவரது கண்களிலும் ஈரத்தை எட்டிப் பார்க்க வைத்து விடுகிறார்.

இப்படம் கொடுக்கப்போகும் புகழுக்கு, புகழ் இன்னும் பல ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவில் ஓங்கி நிற்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

தன் மகளை ஜஸ்டினிடம் இருந்து காப்பாற்ற கதறி அழும் அந்த தாயின் அழுகுரல், திரையரங்கை நிசப்தம் அடைய வைத்துவிட்டது. நடிப்பின் உச்சம்.

ராபர்ட், ஜஸ்டின், பாட்டி, தாத்தா, கிராமத்திற்கு பொருட்களை வாங்கி வரும் நபர், போஸ் வெங்கட், ஜமீன், என நடித்த நடிகர்கள் அனைவரும் படத்திற்கு பலமாக இருந்தனர்.

இயக்குனர் பொன்குமாரை வெகுவாகவே பாராட்டலாம். வித்தியாசமான கதையை கையில் எடுத்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். ஆங்காங்கே திரைக்கதை சற்று தொய்வடைவதை சற்று உற்று நோக்கியிருந்திருக்கலாம்.

காட்சியமைப்பையும் கதாபாத்திரங்களின் உயிரோட்டத்தையும் தெளிவாக கொடுத்து கைதட்ட பெறுகிறார் இயக்குனர் பொன்குமார்.

ஷான் ரோல்டனின் இசையில், ஒரு பாடல் முனுமுனுக்க வைத்திருக்கிறது. பின்னணி இசையில் கதையோடு பயணம் புரிய கைகொடுத்திருக்கிறது.

செல்வகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம்.

1947 வருடத்தைக் கண்முன்னே கொண்டு வந்ததற்காகவே பெரிதாக இப்படக்குழுவை பாராட்டலாம்.

ஆகஸ்ட் 16, 1947 – பாராட்டும்படியான படைப்பு…

Facebook Comments

Related Articles

Back to top button