சத்துணவுத்திட்டத்திற்கு தேவையான பொருட்களை ஒப்பந்தம் மூலம் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளது என்று வருமானவரித்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் முட்டை, சத்துமாவு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு தேவையான உணவு பொருட்களை ஒப்பந்தப் புள்ளி அடிப்படையில் கிறிஸ்டி ப்ரைடுகிராம் நிறுவனம் வினியோகம் செய்து வருகிறது. அந்த நிறுவனத்துக்கு தொடர்புடைய 70க்கும் அதிகமான இடங்களில் கடந்த 5 நாட்களாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், 5 நாட்களாக நடந்த சோதனையில், கணக்கில் வராத 17 கோடி ரூபாய் மற்றும் 10 கிலோ தங்க நகைகளையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் கிறிஸ்டி ப்ரைடு கிராம் நிறுவனம் மலேசியா, சிங்கப்பூரில் முதலீடு செய்துள்ளது தொடர்பாக ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்களின் இல்லத்திலிருந்து 100க்கும் அதிகமான பென்டிரைவ்கள், ஹார்டு டிஸ்க்குகள் ஆகிவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்தி வருவதாகவும் வருமானவரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.கிறிஸ்டி மற்றும் அக்னி நிறுவனங்கள் செய்துள்ள வரி ஏய்ப்பு எவ்வளவு என்பதையும், இந்த முறைகேட்டில் யார் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளன என 3 நாட்களுக்குள் தெரிவிப்போம் என்று வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.