Spotlightவிமர்சனங்கள்

கிளாப் – விமர்சனம் 3/5

மிருகம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அடியெடுத்து வைத்தவர் ஆதி. அதைத் தொடர்ந்து ஈரம், மரகத நாணயம் என பல படங்களை ஹிட் கொடுத்திருக்கிறார்.

தற்போது க்ளாப் படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். க்ளாப் படத்தின் டீசர் வெளியான போது, ஆதி கால் இழந்த ஊனமுற்றவராக நடித்து வெளிவந்த காட்சி மிகவும் தத்ரூபமாக இருந்ததால் இப்படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பை எட்டிப் பார்க்க வைத்தது. நேரடியாக வெள்ளிக்கிழமை(11.03.2022) முதல் சோனி லைவ்வில் வெளியாக இருக்கிறது.

கதைப்படி,

படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே தனது தந்தை பிரகாஷ்ராஜுடன் பைக்கில் செல்லும் ஆதிக்கு விபத்து ஏற்படுகிறது. விபத்தில் தனது ஒரு காலை இழந்து விடுகிறார். இந்த விபத்தில் பிரகாஷ் ராஜ் இறந்து விடுகிறார். நல்லதொரு தடகள வீரரான ஆதி தனது காலை இழந்ததை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இதனால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு தன்னால் தடகள வீரனாக ஆக முடியாமல் போனதே, கனவு வீணானதே என்று தினம் தினம் அதை நினைத்து மிகவும் வருத்தப்பட்டு வருகிறார். காதலித்த பெண்ணான அகான்ஷா சிங்கை திருமணம் செய்து கொண்டாலும், சில வருடங்களாகவே அவருடன் பேசாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில், விளையாட்டு கிளப்பின் தலைவராக இருந்து வரும் நாசர், கிராமத்தில் இருந்து வரும் கீழ் ஜாதியை சேர்ந்த மற்றொரு கதாநாயகியான கிரிஷா குருப்பை நிராகரிக்கிறார். நல்லதொரு திறமை இருந்தும் அவர் நிராகரிக்கப்படுகிறார்.

அந்த பெண்ணை சாதிக்க வைக்க வேண்டும், தன்னால் முடியாததை அந்த பெண் கொண்டு சாதிக்க வைக்க வேண்டும் என்று ஸ்போர்ட்ஸ் கிளப்பில் மிகப்பெரும் ஆளுமையான நாசரை எதிர்த்து, கிரிஷாவிற்கு பயிற்சியாளராக இறங்குகிறார் ஆதி.

நாசரை எதிர்த்து ஆதியால் வெற்றி பெற முடிந்ததா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் ஆதி, மிருகம், ஈரம் படங்களுக்குப் பிறகு மிகவும் நேர்த்தியான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் ஆதி.

தன் இளமையில் எதையும் சாதிக்க முடியவில்லையே, இயலவில்லையே என்ற உணர்வில் மனதளவில் புண்பட்டு கஷ்டப்படும் காட்சிகளில் கண்களில் ஈரத்தை எட்டிப் பார்க்க வைக்கிறார். மனம் படும் இன்னல்கள் முகம் வெளிக்காட்டும் தருணத்தை உணர்ந்து நடித்திருக்கிறார் ஆதி.

நாயகியாக அகான்ஷா சிங் அழகான தேவதையாக வருகிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் அகான்ஷா ஸ்கோர் செய்திருக்கிறார். கைதட்டலையும் பெறுகிறார்.

படத்தின் கதை ஓட்டத்திற்கும், படத்தில் தடகள ஓட்டத்திற்கும் பெரிதும் கை கொடுத்திருப்பவர் கிரிஷா குருப். இப்படத்திற்கென தனியாக பயிற்சியெல்லாம் எடுத்து கதாபாத்திரத்திற்கு தயாராகியிருக்கிறார் கிரிஷா.. மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தை தனது தோள் மீது சுமந்து அசாலாட்டாக செய்திருக்கிறார் கிரிஷா.

வழக்கமான ஸ்போர்ட்ஸ் படங்களில் வரும் கதை என்றாலும், அதை சொன்ன விதம் கவரும் விதமாக அமைந்தது படத்திற்கு மிகப்பெரும் பலம்.

சீனியர் நடிகர் என்ற முறையில் நாசர் வில்லனாக தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார். ஹீரோவோடு ட்ராவல் செய்யும் கதாபாத்திரத்தில் முனீஷ்காந்த் ஒன்றியிருக்கிறார். அவ்வப்போது ஒரு சில இடங்களில் இவர் பேசும் அரசியல் கைதட்ட வைக்கிறது.

பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் இப்படத்தின் தயாரிப்பாளர் கார்த்திகேயன், யதார்த்தமாக நடித்து அசத்தியிருக்கிறார்.

மேலும், மைம் கோபி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் தங்களது கேரக்டரை நன்றாக செய்து முடித்திருக்கிறார்கள்.

இளையராஜாவின் இசையில் பின்னனி இசை ஓகே ரகம் தான். பாடல்கள் பெரிதாக மனதில் ஒட்டவில்லை.

ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து. காட்சிகளை அழகேற்றி ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

விளையாட்டிற்குள் நடக்கும் ஜாதி அரசியலை மையப்படுத்தி பல படங்களோடு இப்படமும் வந்தாலும், மற்ற படங்களோடு ஒப்பிட்டு பார்க்க முடியாத ஒரு தனித்துவம் இப்படத்தில் எட்டிப் பார்த்திருப்பது படத்திற்கு பலம். இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அடியெடுத்து வைத்திருக்கும் இயக்குனர் பிரித்வி ஆதித்யாவிற்கு வாழ்த்துகள்.

கிளாப் – தன்னம்பிக்கையின் வெளிச்சம்.

Facebook Comments

Related Articles

Back to top button