பெங்களூர்: கர்நாடகாவில், காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு, நடைபெற்ற 2 இடைத் தேர்தல்களிலும், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தோல்வியை தழுவியுள்ளது . கர்நாடக சட்டசபைக்கு மே 12ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
பெங்களூரிலுள்ள ஜெயநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணமடைந்ததால் அந்த தொகுதிக்கும், போலி வாக்காளர் அடையாள அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டதால், ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிக்கும் தேர்தல் நடைபெறவில்லை. இதில் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிக்கு மே 28ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது.
தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ்-மஜத இணைந்து கூட்டணி அமைத்திருந்தாலும் கூட, ராஜராஜேஸ்வரிநகர் தொகுதியில், காங்கிரஸ், மஜத தனித்தனியாக களமிறங்கின. பாஜகவுடன் சேர்த்து அங்கு மும்முனை போட்டி நிலவியது.
மஜத வாக்குகளை பிரித்தபோதிலும் கூட16 சுற்றுகள் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் முனிரத்னா 1,08, 064 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் முனிராஜு கவுடா 82,572 வாக்குகளும், மஜத வேட்பாளர் ராமச்சந்திரா 60,360 வாக்குகள் பெற்றனர். இதனால், காங். வேட்பாளர் முனிரத்னா 25492 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் ஜெயநகர் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. காங்கிரசின் சவுமியா ரெட்டி 54,457 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜகவின் பிரகலாத் 51,568 வாக்குகள் பெற்றார். பிறர் 1861 வாக்குகளை பெற்றனர். 2889 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் சவுமியா ரெட்டி.
இதனால் பாஜக-வின் பலம் படிப்படியாக குறையத் தொடங்கியிருக்கிறது. தென் தமிழகத்தில் தன்னால் கால் பதிக்க முடியவில்லை என மத்திய பாஜக மேலும் ஆட்டம் கண்டுள்ளது.