
வினிஷ் மில்லினியம் இயக்கத்தில் யோகி பாபு, சாந்தி ராவ், ஹரிஷ் பெராடி, கல்கி, வசந்தி, மணிமாறன், ஜாகீர் அலி, அருவி பாலா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “ஜோரா கைய தட்டுங்க”.
படத்தினை தயாரித்திருக்கிறார் ஜாகிர் அலி. இசையமைத்திருக்கிறார் எஸ்.என்.அருணகிரி. ஒளிப்பதிவு செய்திருக்கிறார் மது அம்பட்.
கதைக்குள் சென்று விடலாம்…
யோகிபாபுவின் தந்தை மிகப்பெரும் மேஜிக் கலைஞர். அவரிடம் சற்று மேஜிக் கற்றுக் கொண்டு தனது பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கிறார் யோகிபாபு.
அரைகுறையாக கற்றுக் கொண்ட மேஜிக்கை பொதுமக்கள் மத்தியில் செய்து கொண்டிருக்கும் போது, அங்கு சின்னதாக ஒரு அசம்பாவிதம் ஆகிவிட பொதுமக்களும் போலீஸாரும் யோகிபாபுவை அடித்து துவைக்கிறார்கள்.
இதனால் உடைந்து போகிறார் யோகிபாபு. அதே சமயத்தில், யோகிபாபுவின் வீட்டிற்கு அருகில் இருக்கும் மூன்று இளைஞர்கள் அவரை அடிக்கடி சீண்டிக் கொண்டே இருக்கிறார்கள்.
ஒருகட்டத்தில், யோகிபாபு அவர்களிடம் சீண்ட, யோகிபாபுவின் கையை வெட்டிவிட அடியாள் ஒருவரிடம் பணம் கொடுக்கின்றனர் அந்த இளைஞர்கள்.
அந்த ரெளடியும் யோகிபாபுவின் கையை வெட்டி விடுகிறார். இனி எப்படி மேஜிக் செய்வேன் என்று கலங்குகிறார் யோகிபாபு.
அதன்பிறகு, ரெளடி மர்மமான முறையில் இறந்து விட, யோகிபாபுவும் காணாமல் போய் விடுகிறார்.
வழக்கை விசாரிக்க வருகிறார் ஹரீஷ் பெராடி.
அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை..
சாதாரணமாகவே சின்ன சின்ன கேரக்டரில் வந்தாலும் கூட, தான் தோன்றிய இடங்களிலெல்லாம் காமெடி சரவெடியை வெடிக்க வைத்துவிடுவார் யோகிபாபு. ஆனால், இப்படத்தில் அப்படியான மாயாஜாலம் எதுவும் நிகழவில்லை என்பது பெரும் ஏமாற்றம் தான் நமக்கு.
நாமதான் லீட் கதாபாத்திரம் என்றால், அது என்ன மாதிரியான கதை.,? இந்த கதையில் நடித்தால் நாம் எந்த அளவிற்கு பயிற்சி எடுக்க வேண்டும்.? இந்த காமெடி மக்கள் மத்தியில் எடுபடுமா.? என்று ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து பார்க்க வேண்டாமா யோகிபாபு சார்.?
உங்களது காமெடிக்கென்று ரசிகர்கள் பட்டாளமாய் இருக்கின்றனர். நீங்கள் தான் கதையின் நாயகன் என்றால், உங்களது காமெடியை படம் முழுக்க ரசிக்கலாம் என்ற எண்ணத்தில் தானே திரையரங்கிற்கு வருவார்கள்.. அவர்களை இப்படி ஏமாற்றலாமா.? படத்தில் ஒரு காமெடி வொர்க்-அவுட் ஆகாமல் இருந்தால் பரவாயில்லை… ஆனால், படத்தில் ஒரு காமெடி கூட வொர்க்-அவுட் ஆகவில்லையே…
படத்தின் பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு சற்று ஆறுதல். நாயகி தமிழ் சினிமாவிற்கு புதுவரவு. தனக்கு கொடுக்கப்பட்டதை அழகாக செய்திருக்கிறார். இருந்தாலும், இவரது கதாபாத்திரம் படத்தில் துளியளவு கூட பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
ஹரீஷ் பெராடியின் உழைப்பும் வீணாய் தான் போயிருக்கிறது.
அரைகுறையாக மேஜிக் கற்றுக் கொண்ட கலைஞன், தனக்கு ஏற்படும் அவமதிப்பு, குழந்தை பாலியல் கொடுமை அவர்களுக்கான தண்டனை என நல்ல ஒரு ஒன் – லைன் இருந்தாலும் அதை சரியாக படைக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.,
ஜோரா கைய தட்டுங்க – எடுத்த முயற்சிக்கு ஒருமுறை கை தட்டலாம்…





