
பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனு க்ரீத்தி, பிரபாகர், புகழ், இளவரசு, சிங்கம்புலி என நட்சத்திரங்கள் பலரது நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “டி எஸ் பி”.
பல போலீஸ் பற்றிய படங்கள் தமிழ் சினிமாவில் வெளிவந்திருந்தாலும், இப்படம் அதிலிருந்து எவ்வகையில் மாறுபட்டு நிற்கிறது என்பதை விமர்சனம் மூலம் பார்த்து விடலாம்.
கதைப்படி,
DSP பணியில் இருக்கும் விஜய் சேதுபதி, யாரும் பிடிக்கமுடியாத ஒரு ரெளடியை பிடித்து தனது ஊரான திண்டுக்கல் மாவட்டத்துக்கு போஸ்டிங்க் வாங்கிக் கொண்டுச் செல்கிறார்.
செல்லும் வழியில் வழிப்போக்கரிடம் தனது கதையை ப்ளாஷ் பேக்காக சொல்கிறார் விஜய் சேதுபதி.
திண்டுக்கல் மாவட்டத்தில் பூ வியாபாரம் செய்து வருபவர் இளவரசு. இவரது மகன் தான் விஜய் சேதுபதி. படித்து முடித்து ஊரில் வெட்டியாக சுற்றிக் கொண்டிருக்கிறார். அதே ஊரில், அவ்வப்போது சைட் அடிக்க நாயகி அனு க்ரீத்தியும் இருக்கிறார்.
இச்சமயத்தில், தங்கையின் திருமணத்திற்காக வந்திருந்த நண்பர்களை அதே ஊரில் மிகப்பெரும் ரெளடியாக இருக்கும் பிரபாகர் அடித்து விடுகிறார். பதிலுக்கு பிரபாகரை தாக்கி விடுகிறார் விஜய் சேதுபதி. ஊரார்களின் முன்னிலையில் தான் அடிவாங்கியதால், இழந்த கெளரவத்தை மீட்ட, விஜய் சேதுபதியை கொலை செய்யத் துடிக்கிறார் பிரபாகர்.
இதனால், ஊரை விட்டுச் செல்லும் விஜய் சேதுபதி மீண்டும் திண்டுக்கல்லுக்கு DSP ஆக வருகிறார். இச்சமயத்தில், வில்லனான பிரபாகர் எம் எல் ஏ-வாக உயர்ந்து நிற்கிறார்.
இறுதியாக பிரபாகரை விஜய் சேதுபதி எப்படி பழி தீர்த்தார் என்பதே படத்தின் விமர்சனம்.
வழக்கம் போல் தனது உடல் மொழி கொண்டு படத்தில் ஹீரோவாக உயர்ந்து நின்றாலும், சேதுபதி படத்தில் பார்த்த விஜய்சேதுபதி போல் இல்லையே என்ற குறையை ஒவ்வொரு காட்சியிலும் தெரியப்படுத்துகிறார்.
போலீஸ் கதாபாத்திரம் என்றாலும், அதற்காக சற்று மெனக்கெடல் கொடுக்கலாமே மக்கள் செல்வனே. நாயகியாக அனு க்ரீத்தி துறுதுறுவென பறந்து சென்றாலும் ரசிக்கும் படியாக இல்லையே என்று கூறி கடந்து செல்லத் தான் தோன்றுகிறது.
வில்லனாக பிரபாகர் மட்டுமே தனது கேரக்டரில் மிரட்டியிருக்கிறார். இளவரசு, தீபா உள்ளிட்ட நட்சத்திரங்கள் தங்கள் கேரக்டர்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
சினிமாவுக்கென்று காமெடி வசனங்கள் எழுதுபவரை பக்கத்தில் வைத்துக் கொண்டால் கொஞ்சம் ஜொலிக்கலாம் விஜய் டிவி புகழ் அவர்களே… யாருக்கும் கிடைக்காத வாய்ப்புகள் உங்களைத் தேடி வருகிறது பயன்படுத்திக் கொண்டு அதில் நிலைக்க முற்படுங்கள்.
பல படங்களுக்கு போட்ட அவரது இசையையே அவரே திருப்பி போட்டு, DSP படத்திற்கு பாடலாக கொடுத்திருக்கிறார் இமான். பெரிதாக எதையும் ரசிக்க முடியவில்லை.
தினேஷ் கிருஷ்ணன் மற்றும் வெங்கடேஷ் இருவரின் ஒளிப்பதி படத்திற்கு சற்று ஆறுதல் என்றாலும், இன்னும் மெனக்கெடல் கொடுத்திருக்கலாம் என்று தோன்றியது.
ஊர்ல ஒரு வில்லன், அதே ஊர்ல ஹீரோ… வழக்கமான சீண்டல்
ஊரை விட்டு போய் போலீஸா அதே ஊருக்கு வர்ராரு ஹீரோ…
வில்லனை பழி வாங்குறாரு ஹீரோ..
படம் முடிஞ்சி போச்சி கிளம்பு கிளம்பு…