
துல்கர் சல்மான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘I Am Game’ திரைப்படத்தின் பிரம்மாண்டமான முன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், படம் வரும் செப்டம்பர் 3, 2026 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனம் தயாரித்துள்ள ‘I Am Game’ படத்தை நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ளார். துல்கர் சல்மானின் திரைப்பயணத்தில் இது அவரது 40-வது திரைப்படம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.
துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து Wayfarer Films பேனரில் இப்படத்தை தயாரித்துள்ளனர். சஜீர் பாபா, இஸ்மாயில் அபு பக்கர் மற்றும் பிலால் மொய்து ஆகியோர் திரைக்கதையை எழுதியுள்ளனர். சஜீர் பாபா, ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் ஷபாஸ் ரஷீத் ஆகியோர் வசனங்களை எழுதியுள்ளனர்.
துல்கர் சல்மானுடன் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், காயாது லோஹர், கதிர், பார்த் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘I Am Game’ படத்தின் தமிழ் பதிப்பை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் சென்னையில் நடைபெற்ற முன் வெளியீட்டு விழாவில் துல்கர் சல்மான், ஆண்டனி வர்கீஸ், கதிர், சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டனர்.
“கிட்டத்தட்ட ஒரு தமிழ் படம் போல இருக்கும்” – துல்கர் சல்மான்
நிகழ்ச்சியில் பேசிய துல்கர் சல்மான், ‘I Am Game’ திரைப்படம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமான அனுபவத்தை கொடுக்கும் என்று தெரிவித்தார்.
“‘I Am Game’ படத்தைப் பார்க்கும்போது கிட்டத்தட்ட ஒரு தமிழ் படம் போன்ற உணர்வு ரசிகர்களுக்கு ஏற்படும். இதில் ஏராளமான தமிழ் நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் எங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் இதுவரை உருவான மிகப்பெரிய பட்ஜெட் மற்றும் பிரம்மாண்டமான தயாரிப்பு இதுதான்” என்று துல்கர் சல்மான் தெரிவித்தார்.
படத்தில் நடித்துள்ள கதிரின் நடிப்பு மிகவும் இயல்பாகவும் தீவிரமாகவும் அமைந்துள்ளதாக பாராட்டிய துல்கர், மிஷ்கின் இந்தப் படத்தின் முக்கியமான அங்கம் என்றும் குறிப்பிட்டார்.
மிஷ்கினிடம் இருக்கும் உற்சாகம் மற்றும் எனர்ஜியை இன்றைய இளம் தலைமுறையினரிடமே அரிதாக பார்க்க முடியும் என்றும் அவர் பாராட்டினார்.
மேலும் சம்யுக்தா விஸ்வநாதனுக்கு ‘I Am Game’ ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமையும் என்று தெரிவித்த துல்கர், ஆண்டனி வர்கீஸ் இந்தப் படத்தின் முக்கிய பலங்களில் ஒருவர் என்றும் கூறினார். மலையாள ரசிகர்களைப் போலவே தமிழ் ரசிகர்களும் அவரை கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
காமெடி முதல் ஆக்ஷன் வரை…
‘I Am Game’ முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகியுள்ளதாக துல்கர் சல்மான் தெரிவித்தார்.
காமெடி, ரொமான்ஸ், மர்மம், சஸ்பென்ஸ், ஆக்ஷன், த்ரில்லிங் மற்றும் கேமிங் என பல்வேறு அம்சங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.
ஜேக்ஸ் பிஜாயின் இசையில் படம் ஒரு அசத்தலான ஆல்பமாக இருக்கும் என்றும், ஏற்கனவே வெளியான பாடல்களைத் தவிர படத்தில் ரசிகர்களை கவரும் மேலும் பல பாடல்கள் இருப்பதாகவும் துல்கர் தெரிவித்தார்.
“டிரெய்லரை தாண்டி நிறைய சர்ப்ரைஸ்” – கதிர்
நடிகர் கதிர் பேசுகையில், ‘I Am Game’ திரைப்படத்தில் ரசிகர்களுக்காக பல ஆச்சரியங்கள் காத்திருப்பதாக தெரிவித்தார்.
“டிரெய்லரில் பார்த்ததைத் தாண்டி படத்தில் இன்னும் பல சர்ப்ரைஸ்கள் இருக்கின்றன. ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களுக்கு ஒரு அனுபவமாக அமையும் வகையில் முன்கூட்டியே திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது” என்று கதிர் தெரிவித்தார்.
இந்தப் படத்தில் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நடித்திருப்பதாக கூறிய கதிர், இதற்கு முன்பு தனக்கு பெரிய அளவில் கிரிக்கெட் விளையாடிய அனுபவம் இல்லை என்றும், இந்த கதாபாத்திரத்திற்காக புதிதாக கிரிக்கெட் கற்றுக்கொண்டதாகவும் சுவாரஸ்யமாக பகிர்ந்துகொண்டார்.
மேலும் புதிய கதைகள் மற்றும் வித்தியாசமான முயற்சிகளுக்காக ரிஸ்க் எடுக்கும் துல்கர் சல்மானின் சினிமா மீதான ஆர்வம் தனக்கு ஊக்கமளிப்பதாகவும் கதிர் பாராட்டினார்.
“கதை கேட்டவுடன் நடிக்க முடிவு செய்தேன்” – சம்யுக்தா விஸ்வநாதன்
நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் பேசுகையில், இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் முதன்முறையாக கதையை கூறியபோதே இந்தப் படத்தில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என முடிவு செய்ததாக தெரிவித்தார்.
தனது கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாகவும் மனதைத் தொடும் வகையிலும் இருந்ததாக அவர் கூறினார்.
குறிப்பாக ஹைதராபாத்தில் நடைபெற்ற நீண்டகால படப்பிடிப்பு தனக்கு சிறந்த பயிற்சியைப் போன்ற அனுபவத்தை வழங்கியதாகவும், ஒரு காட்சிக்குத் தேவையான உணர்வை குறுகிய நேரத்தில் வெளிப்படுத்த வேண்டிய சவால் தனது நடிப்பிற்கு பல புதிய விஷயங்களை கற்றுக் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.
துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்தது மறக்க முடியாத அனுபவம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“தமிழ் ரசிகர்கள் எப்படி வரவேற்பார்கள் என ஆவலாக இருக்கிறேன்” – ஆண்டனி வர்கீஸ்
நடிகர் ஆண்டனி வர்கீஸ் பேசுகையில், சென்னையில் நடைபெறும் தனது முதல் நிகழ்ச்சி இது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தமிழ் ரசிகர்கள் தன்னை எப்படி வரவேற்பார்கள் என்பதை அறிய ஆவலுடன் இருப்பதாக கூறிய அவர், துல்கர் சல்மானை சிறந்த நடிகர், தயாரிப்பாளர் மற்றும் தனது நெருங்கிய நண்பர் என்று பாராட்டினார்.
இயக்குநர் நஹாஸ் ஹிதாயத்துடனான நட்பும் படப்பிடிப்பு அனுபவமும் மறக்க முடியாதது என்றும் அவர் தெரிவித்தார்.
தனது கதாபாத்திரம் குறித்து தற்போது அதிகமாக வெளிப்படுத்த முடியாது என்றும், படம் பார்க்கும்போது ரசிகர்களுக்கு அது சிறப்பான அனுபவமாக இருக்கும் என்றும் ஆண்டனி வர்கீஸ் தெரிவித்தார்.
துல்கர் சல்மானின் 40-வது திரைப்படம்
‘I Am Game’ துல்கர் சல்மானின் 40-வது திரைப்படமாக உருவாகியுள்ளது. Wayfarer Films நிறுவனம் இதுவரை தயாரித்த படங்களில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படமாகவும் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு ஜிம்ஷி காலித் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். சாமன் சாக்கோ படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்ஸ் வடிவமைத்துள்ளனர்.
அஜயன் சாலிசேரி புரொடக்ஷன் டிசைனராக பணியாற்றியுள்ளார். ரோனெக்ஸ் சேவியர் மேக்கப் பணிகளையும், மஷார் ஹம்சா காஸ்ட்யூம் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். படத்தின் VFX பணிகளை தௌஃபீக் (Eggwhite) கவனித்துள்ளார்.
படத்தின் இசை உரிமையை Zee Music நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
5 மொழிகளில் பான் இந்தியா ரிலீஸ்
‘I Am Game’ திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியா அளவில் வெளியாகிறது.
ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள படத்தின் டிரெய்லர் மற்றும் முதல் பாடல் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ள நிலையில், சென்னை முன் வெளியீட்டு விழா படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
ஃபேண்டஸி, மர்மம், சஸ்பென்ஸ், ஆக்ஷன், ரொமான்ஸ், காமெடி மற்றும் கேமிங் உள்ளிட்ட பல அம்சங்களை ஒருங்கிணைத்து உருவாகியுள்ள ‘I Am Game’ படத்தில் துல்கர் சல்மான் ஸ்டைலிஷான மாஸ் அவதாரத்தில் களமிறங்குகிறார்.
பெரிய பட்ஜெட் மற்றும் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள ‘I Am Game’ திரைப்படம் செப்டம்பர் 3, 2026 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.





