
கார்த்தி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் IVY Entertainment நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ். லக்ஷ்மன் குமார் மற்றும் இஷான் சக்சேனா தயாரித்துள்ள இப்படத்தை பி.எஸ். மித்ரன் இயக்கியுள்ளார்.
‘சர்தார் 2’ படத்தில் கார்த்தியுடன் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு, ரஜிஷா விஜயன், நாசர், ஆசிஷ் வித்யார்த்தி, நிழல்கள் ரவி, அச்யுத் குமார், தேவதர்ஷினி, சின்னி ஜெயந்த், ஜீன் பால் லால், பாபு ஆண்டனி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பையும், ராஜீவன் கலை இயக்கத்தையும் மேற்கொண்டுள்ளனர்.
உளவுத்துறை அதிகாரிகளின் வாழ்க்கை மற்றும் பின்னணியை மையமாகக் கொண்டு ஆக்ஷன் என்டர்டெய்னராக உருவாகியுள்ள ‘சர்தார் 2’, செப்டம்பர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. தயாரிப்பாளர் டி.ஜி. தியாகராஜன், நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி, எஸ்.ஜே. சூர்யா, நாசர், கவின், ரவி மோகன், நடிகைகள் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், இயக்குநர்கள் பி.எஸ். மித்ரன், மோகன் ராஜா, சுந்தர் சி, ரத்ன குமார் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார், ‘சர்தார் 2’ தங்களது கனவு திரைப்படம் என்று தெரிவித்தார். மிகப்பெரிய அளவில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் கார்த்தியின் பங்கு முக்கியமானது என்றும் அவர் பாராட்டினார்.
“இந்த அளவிற்கான தரத்தில் படத்தை உருவாக்கியதற்கு கார்த்தி மிக முக்கிய காரணம். இயக்குநர் மித்ரன் கதை சொன்னபோதே அதன் பிரம்மாண்டம் புரிந்தது. ஆக்ஷனுடன் எமோஷனையும் இணைத்து அழகாக உருவாக்கியிருக்கிறார்” என்று அவர் கூறினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சூர்யா, ‘சர்தார் 2’ டீசர் மற்றும் ட்ரெய்லர் தன்னை ஆச்சரியப்படுத்தியதாக தெரிவித்தார்.
“டீசரை முதலில் பார்த்தபோது நெட்ஃபிளிக்ஸில் ஏதோ ஒரு இன்டர்நேஷனல் படம் என்று நினைத்தேன். திடீரென கார்த்தி வந்தபோதுதான் ‘நம்ம படமா இது?’ என்று ஆச்சரியப்பட்டேன். தமிழில் இப்படியெல்லாம் ஒரு படம் செய்ய முடியுமா என்று வியந்தேன்” என சூர்யா கூறினார்.
மேலும், அண்மைக்கால தமிழ் சினிமாவில் உண்மை சம்பவங்களுக்கு நெருக்கமாகவும், அழகியலுடனும் இத்தகைய ஸ்பை திரில்லரை பார்த்ததில்லை என்றும் அவர் பாராட்டினார்.
இயக்குநர் மித்ரனை சிறந்த எழுத்தாளர் மற்றும் இயக்குநர் என்று குறிப்பிட்ட சூர்யா, ‘சர்தார்’ முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் பெரிய விவாதத்தை உருவாக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
கார்த்தி குறித்து பேசிய சூர்யா, “ஒரு நடிகரை விட அவரது கதாபாத்திரம் பேசப்பட்டால் அதுதான் அந்த நடிகருக்கு கிடைக்கும் மிகப்பெரிய ஆசீர்வாதம். இன்று ரசிகர்கள் கார்த்தியை ‘சர்தார்’ ஆகவே பார்க்கிறார்கள். அவருடைய திரைப்பயணத்தில் ‘சர்தார்’ மிக முக்கியமான படம்” என்றார்.
இயக்குநர் பி.எஸ். மித்ரன் பேசுகையில், ‘சர்தார் 2’ உருவாக தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் வழங்கிய ஆதரவையும் நம்பிக்கையையும் நினைவுகூர்ந்தார்.
கார்த்தியுடன் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக பயணித்து வருவதாக தெரிவித்த மித்ரன், ஒரு காட்சி நன்றாக வந்தாலும் இன்னும் சிறப்பாக செய்யலாம் என தொடர்ந்து ஊக்கப்படுத்தும் நடிகர் கார்த்தி என்றும் பாராட்டினார்.
எஸ்.ஜே. சூர்யாவின் உழைப்பையும் மித்ரன் குறிப்பிட்டு பாராட்டினார். ரசிகர்களுக்கு ஒவ்வொரு விஷயமும் தெளிவாக புரிய வேண்டும் என்பதில் அவர் மிகவும் கவனமாக இருப்பதாகவும், அவரது ஆலோசனைகள் படத்தின் தரத்தை உயர்த்தியதாகவும் கூறினார்.
மாளவிகா மோகனன் குறித்து பேசிய மித்ரன், அவருடைய முதல் நாள் படப்பிடிப்பிலேயே சவாலான ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டதாக தெரிவித்தார். உயரமான இடத்திலிருந்து கீழே விழுவது உள்ளிட்ட கடினமான காட்சிகளிலும் அவர் முழு ஒத்துழைப்பு அளித்ததாக கூறினார்.
நடிகை மாளவிகா மோகனன் பேசுகையில், “திரைப்பட உருவாக்கம் என்பது ஒரு கூட்டு முயற்சி. இது One Man Show அல்ல” என்று குறிப்பிட்டார்.
தனது முதல் நாள் படப்பிடிப்பே சவாலான அனுபவமாக இருந்ததாகவும், ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க முதலில் தயக்கம் இருந்தபோதிலும் படக்குழுவின் ஆதரவால் அதைச் செய்ய முடிந்ததாகவும் தெரிவித்தார்.
கார்த்தியுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசிய அவர், கார்த்தி மிகவும் எளிமையான மற்றும் பெருந்தன்மையான மனிதர் என்றும், கதாபாத்திரத்திற்காக அவர் காட்டிய அர்ப்பணிப்பை பார்த்து வியந்ததாகவும் கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய கார்த்தி, ‘சர்தார் 2’ படக்குழுவின் முழுமையான உழைப்பை பாராட்டினார்.
“தமிழ் சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல; அது தமிழ்நாட்டின் அடையாளம். 40 அல்லது 50 மதிப்பெண் போதும் என்று நினைக்காமல் 100 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று இந்த படக்குழு நினைத்திருக்கிறது” என்று கார்த்தி தெரிவித்தார்.
இந்த அளவிலான திரைப்படத்தை உருவாக்க தயாரிப்பாளரின் நம்பிக்கை மிகவும் முக்கியம் என்றும், பிரின்ஸ் பிக்சர்ஸ் அளித்த முழுமையான ஆதரவு இல்லாமல் இந்த கனவு நனவாகியிருக்காது என்றும் அவர் கூறினார்.
யோகி பாபுவின் உழைப்பையும் கார்த்தி பாராட்டினார். ஒரு காட்சியை மேலும் சிறப்பாக மாற்ற அவர் எடுத்துக் கொள்ளும் முயற்சி மற்றும் தயாரிப்பாளர், இயக்குநர் ஆகியோரின் நலனில் அவர் காட்டும் அக்கறை வியப்பை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.
மாளவிகா மோகனனின் கதாபாத்திரம் வழக்கமான நாயகி கதாபாத்திரமாக இருக்காது என்றும் கார்த்தி தெரிவித்தார். படத்தில் அவர் ஏற்றுள்ள ‘சாரா’ கதாபாத்திரம் தனக்கு மேலதிகாரியாக இருப்பதாகவும் அவர் சுவாரசியமாக பகிர்ந்துகொண்டார்.
‘சர்தார் 2’ படத்தில் முக்கியமான சமூக மற்றும் ஆரோக்கியம் சார்ந்த ஒரு விஷயமும் பேசப்படுவதாக கார்த்தி தெரிவித்துள்ளார்.
“இந்தப் படம் சொல்லும் விஷயத்தை படம் பார்த்த பிறகு உங்களால் எளிதில் தவிர்க்க முடியாது. உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றிய ஒரு முக்கியமான உண்மையை இதில் சொல்லியிருக்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய விவாதத்தையும் உரையாடலையும் உருவாக்கும் என்ற நம்பிக்கையையும் கார்த்தி வெளிப்படுத்தினார்.
எஸ்.ஜே. சூர்யாவின் எனர்ஜியையும் கார்த்தி வெகுவாக பாராட்டினார். “அவருடைய நடிப்பை வேண்டுமானால் imitate செய்யலாம்; ஆனால் அவருடைய energy-ஐ யாராலும் copy செய்ய முடியாது” என்று தெரிவித்தார்.
இறுதியாக தனது ரசிகர்களுக்கு உறுதியளித்த கார்த்தி, கடந்த சில ஆண்டுகளில் ரசிகர்களுக்கு எதிர்பார்த்த அளவிலான திரைப்படங்களை வழங்க முடியாமல் போனதாக கூறி, இந்த முறை எந்த குறையும் வைக்கவில்லை என்றார்.
“இந்த முறை முழுவதும் இறங்கி அடித்திருக்கிறேன். ரசிகர்கள் சந்தோஷமாக வந்து பார்த்து என்ஜாய் செய்யும் வகையில் ‘சர்தார் 2’ உருவாகியுள்ளது” என்று கார்த்தி நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
ஆக்ஷன், ஸ்பை திரில்லர், எமோஷன் மற்றும் முக்கியமான சமூக கருத்து ஆகியவற்றை இணைத்து உருவாகியுள்ள ‘சர்தார் 2’ செப்டம்பர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.




