Spotlightவிமர்சனங்கள்

என்ன தவம் செய்தேனோ – விமர்சனம் (2.5/5)

எத்தனை கருத்துக்கள், விவாதங்கள், செய்திகள் வந்தாலும் தமிழகத்தில் ஆணவக் கொலை என்பது ஒன்று வழக்கமான ஒன்றாகிவிட்டது. சாதிய ஆணவத்தில் திரியும் ஒரு சிலரால் பல உயிர்கள் பலி கொடுக்கப்படுகின்றன.

அப்படியாக சாதி மாறி நடைபெறும் ஒரு காதல் கதையை மையப்படுத்தி உருவாகியுள்ளது இந்த ‘என்ன தவம் செய்தேனோ’.

அரசியல்வாதியின் மகளுக்கும் தள்ளு வண்டியில் ஐஸ் விற்கும் தொழிலாளிக்கும் காதல் ஏற்பட, அரசியல்வாதிக்கு பயந்து ஊரை விட்டு ஓடி விடுகின்றனர் காதல் ஜோடிகள்.

இதை தெரிந்ததும் தன் மகளையும், அந்த பையனையும் கொலை செய்யும் நோக்கோடு அவர்களை ஊர் ஊராக தேடி வருகின்றனர் அரசியல்வாதியும் அவருடைய அடியாட்களும். அவர்கள் அண்டை மாநிலம் சென்று தங்கள் வாழ்க்கையை தொடங்குகின்றனர். அதை அறிந்து அவர்களை கொலை செய்வதற்காக ஆவேசத்துடன் விரட்டி வருகின்றார் அரசியல்வாதி.

இறுதியாக காதல் ஜோடிகளை அரசியல்வாதி கண்டுபிடித்தாரா…?? இல்லையா..?? என்பதே படத்தின் மீதிக் கதை…..

கஜினி முருகன் கதாநாயகனாகவும், அதே சமயம் பிரச்சனை சந்திக்கும் துணிவுள்ள இளைஞனாகவும் நடித்திருக்கிறார். கதாநாயகி விஷ்ணு பிரியா அப்பாவிடம் குறும்பு செய்யும் பெண்ணாகவும், காதல் என்று வரும்போது அப்பாவையே தூக்கி எறிந்துவிட்டு செல்லும் தைரியமிக்கப் பெண்ணாகவும் வருகிறார்.

ஆர்.என்.ஆர். மனோகரன் அரசியல்வாதியாக தன் பணியைச் செவ்வனே செய்திருக்கிறார். கொலை வெறியோடு செல்லும் காட்சிகளில் மனதைப் பதற வைக்கிறார். சிங்கம்புலியும் மயில்சாமியும் வந்து காமெடி என்ற பெயரில் நம்மை சித்தரவதை செய்து விடுகின்றனர்.

ஜாதி வெறி மற்றும் அரசியல் கௌரவம் அதற்காக நடக்கும் ஆணவக் கொலையை மையமாக வைத்து இயக்கியிருக்கிறார் இயக்குநர் முரபாசெலன். இணைந்த கைகள் கலைக்கூடம் எஸ்.செந்தில்குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு, அடுத்தடுத்த காட்சியில் என்ன நடக்குமோ என்ற எதிர்ப்பார்ப்பை கூட்டுகிறது தேவ்குருவின் இசை.

கதையின் காட்சியமைப்பில் கவனம் செலுத்தியிருக்கலாம். நாயகன் உயிருக்கு பயந்து ஓடிக் கொண்டே இருப்பதும், காதலி மீது மிரட்டல் காரணமாகவே காதல் செய்திருப்பது போன்ற பல இடங்களில் லாஜிக் ஓட்டைகள் எட்டிப் பார்ப்பது படத்திற்கு பெரும் சருக்கல்தான்.

என்ன தவம் செய்தேனோ – இன்னும் கொஞ்சம் தவம் செய்து கதையை பலப்படுத்தியிருக்கலாம் இயக்குனரே…

Facebook Comments

Related Articles

Back to top button