Spotlightசினிமா

நாட்டுப்புற இசையிலிருந்து திரைப்பாடலுக்கு… ‘வேட்ட சாமி’ மூலம் புதிய பயணத்தை தொடங்கிய வில்லுப்பாட்டு மாதவி!

நாட்டுப்புற இசை மற்றும் வில்லுப்பாட்டு கலையின் மூலம் மக்களின் இதயங்களில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கும் வில்லுப்பாட்டு மாதவி, தற்போது தமிழ் சினிமாவில் பாடகியாக புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். ‘வேட்ட சாமி’ திரைப்படத்தின் மூலம் அவர் திரைப்பாடகியாக அறிமுகமாகியிருப்பது நாட்டுப்புற இசை ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் தமிழகத்தின் பல்வேறு கோவில் திருவிழாக்கள், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் சமூக விழிப்புணர்வு மேடைகளில் தனது வில்லிசை நிகழ்ச்சிகளால் ஆயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தவர் மாதவி. அவரது தனித்துவமான குரல், ஆற்றல்மிக்க மேடை நிகழ்ச்சி மற்றும் பாரம்பரிய இசையை இளம் தலைமுறைக்கும் கொண்டு செல்லும் அர்ப்பணிப்பு காரணமாக சமூக வலைதளங்களிலும் அவருக்கு தனி ரசிகர் வட்டம் உருவாகியுள்ளது. அவரது கலைப் பயணத்திற்காக பல விருதுகளும் கௌரவங்களும் கிடைத்துள்ளன.

இந்நிலையில், இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள ‘சுடலைமாடன் வேட்டைப்பாடல்’ என்ற பாடலை மாதவி பாடியுள்ளார். சமீபத்தில் இந்தப் பாடலின் ஒலிப்பதிவு வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், வில்லுப்பாட்டு மாதவியை திரைப்பாடகியாக அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைவதாக இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

7 Miles Per Seconds Productions சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரித்துள்ள ‘வேட்ட சாமி’ திரைப்படத்தில் அருள்நிதி மற்றும் அமீர் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் இயக்குநர் தமிழ், விஜி சந்திரசேகர், ‘ஆடுகளம்’ நரேன், அர்ஜெய், OAK சுந்தர், மதுசூதனன், மைனா நந்தினி, கவிதா பாரதி, நந்தினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘பம்பர்’ திரைப்படத்தை இயக்கிய எம். செல்வகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், வீரம், மண்ணின் அடையாளம் மற்றும் தெய்வ நம்பிக்கை ஆகியவற்றை மையமாகக் கொண்ட கதையம்சத்துடன் உருவாகியுள்ளது.

ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு மேற்கொண்டு வருகிறார். சண்டைக் காட்சிகளை சிறுத்தை கணேஷ் வடிவமைத்துள்ளார்.

படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட பின்னணி பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நாட்டுப்புற இசை உலகில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ள வில்லுப்பாட்டு மாதவியின் திரைப்பாடகர் அறிமுகம், ‘வேட்ட சாமி’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் இந்த ‘சுடலைமாடன் வேட்டைப்பாடல்’ பெரும் வரவேற்பைப் பெறும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button