விமர்சனங்கள்

குட் டே – விமர்சனம் 3.25/5

அறிமுக இயக்குனர் அரவிந்தன் அவர்களின் இயக்கத்தில் பிரித்திவிராஜ் ராமலிங்கம், காளி வெங்கட், மைனா நந்தினி, ஆடுகளம் முருகதாஸ், பகவதி பெருமாள் (பக்ஸ்), வேல ராமமூர்த்தி, போஸ் வெங்கட், விஜய் முருகன் (கலை இயக்குனர்), ஜீவா சுப்பிரமணியம், பாரத் நெல்லையப்பன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “குட் டே”.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு செய்திருக்கிறார் மதன் குணதேவ். திரைக்கதை மற்றும் வசனம் எழுதியிருக்கிறார் பூர்ணா ஜெஸ் மைக்கேல்.

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா. தயாரிப்பு நிறுவனம் : நியூ மாங்க் பிக்சர்ஸ். தயாரிப்பாளர் : பிரித்திவிராஜ் ராமலிங்கம்.

தனது குடும்பத்தை தனது சொந்த ஊரில் விட்டு, திருப்பூரில் வாடகை வீடு ஒன்றில் தங்கி, அங்கிருக்கும் பனியன் கம்பெனியில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருபவர் தான் நமது படத்தின் நாயகன் பிரித்திவிராஜ்.

வேலையில் சிறிதாக பிரச்சனை வர, பிருத்விராஜின் மேலாளர் அவரை அறைந்து விடுகிறார். அன்றே சம்பளமும் க்ரெடிட் ஆக, பாதி சம்பளத்தை ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டு, மீதி சம்பளத்தை எடுத்துக் கொண்டு மது அருந்த மதுபான கூடத்திற்குச் செல்கிறார் பிருத்விராஜ்.

அளவுக்கு அதிகமாக மது குடித்த பிருத்விராஜ், தனது முன்னாள் கல்லூரி தோழியான மைனாவின் வீட்டிற்குச் செல்கிறார். அங்கு, அவரிடமும் அவரின் கணவரிடமும் பிரச்சனை எழுப்ப, அதனைத் தொடர்ந்து, மற்றொரு குடிகாரராக பிருத்விராஜோடு இணைகிறார் காளிவெங்கட்.

பணம் எடுக்க ஏடிஎம் செல்கையில், அங்கு ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கிறார் பிருத்வி. போலீஸ் வர, அங்கிருந்த வாக்கி டாக்கியை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடிக்கிறார் பிருத்விராஜ்.

அதன்பிறகு பிரித்திவிராஜ் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை கலகலப்போடும் சிந்திக்கக் கூடிய விதமாகவும் எடுக்கப்பட்ட படமே இப்படத்தின் மீதிக் கதை.

படத்தின் கதையை எழுதியதோடு மட்டுமல்லாமல் தயாரித்து, அதில் ஹீரோவாகவும் நடித்து அசத்தியிருக்கிறார் பிரித்திவிராஜ். கதைக்கு என்ன தேவையோ, அந்த கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை அழகாகவும் அளவாகவும் கொடுத்து ரசிக்க வைத்துவிட்டார் பிரித்திவிராஜ். இப்படியொரு கதாபாத்திரத்தை தனது முதல் படத்திலேயே துணிச்சலாக தேர்ந்தெடுத்து நடித்ததற்காகவே பிரித்திவிராஜை வெகுவாகவே பாராட்டலாம்.

ஒரு குடிகாரனின் மேனரிசம் எப்படி இருக்குமோ அதை திரையில் அப்படியே பிரதிபலித்துவிட்டார் பிரித்திவிராஜ். காட்சிக்கு காட்சி பெரிதான மெனக்கெடல் தெரிகிறது.

படத்தில் தோன்றிய மைனா, அவரது கணவராக வரும் ஆடுகளம் முருகதாஸ், ஆட்டோ டிரைவராக வரும் காளி வெங்கட், பக்ஸ், போஸ் வெங்கட், போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் விஜய் முருகன் என அனைவருமே தங்களது கதாபாத்திரங்களை அளவாக நடித்து அசத்தியிருக்கிறார்கள்.

கோவிந்த வசந்தாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையும் கதையோடு நாமும் பயணம் புரிய வைக்க கைகொடுத்திருக்கிறது.

இரவு நேர காட்சிகளை மிக அழகாக காட்சிப்படுத்தி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மதன்குணதேவ்.

சமூகத்திற்கு தேவையான அதேசமயம், அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளும்படியான மிகவும் கலகலப்பான ஒரு திரைக்கதை அமைத்து, அதை அனைவரையும் ரசிக்கவும் வைத்திருக்கிறார் இயக்குனர்.

இப்படியான கதையை அழ வைக்கும் காட்சிகளாக கொண்டு செல்லாமல், கலகலப்பாக கொண்டு சென்று, சிந்திக்க வைக்கும் ஒரு ஆழக்கருத்தையும் படத்திற்குள் வைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளனர் படக்குழுவினர்,.

வார இறுதியை திரையரங்குகளுக்குச் சென்று கொண்டாடுவதற்கு ஏற்றதொரு படைப்பாக வந்திருக்கிறது இந்த குட் டே.

Facebook Comments

Related Articles

Back to top button