
இயக்கம்: சுதீஸ் சங்கர்
கதை, திரைக்கதை, வசனம்: வி கிருஷ்ண மூர்த்தி
நடிகர்கள்: வடிவேலு, பஹத் பாசில், கோவை சரளா, சித்தாரா, விவேக் பிரசன்னா, ரேணுகா, பி எல் தேனப்பன்
இசை: யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு: கலை செல்வன் சிவாஜி
தயாரிப்பு: சூப்பர் குட் பிலிம்ஸ்
கதைப்படி,
பாளையங்கோட்டை ஜெயிலில் இருந்து வெளியே வருகிறார் பஹத் பாசில். சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்வது இவரது பழக்கம். வெளியே வந்ததும் மீண்டும் திருட்டு வேலையில் ஈடுபட செல்கிறார். இரவு நேரத்தில் ஒரு வீட்டிற்குள் நுழைகிறார் பஹத்.
அங்கு, சங்கிலியால் விலங்கிடப்பட்டிருக்கும் வடிவேலுவை பார்த்து ஷாக் ஆகிறார். தன் விலங்கை அவிழ்த்துவிட்டால் பணம் தருவதாக கூற, பஹத் பாசிலும் அந்த விலங்கை அவிழ்த்து விடுகிறார். ஏடிஎம் சென்று, அந்த பணத்தை எடுத்து பஹத் பாசிலிடம் கொடுக்கிறார் வடிவேலு.
அப்போது, வடிவேலுவின் அக்கெளண்டில் பல லட்சம் ரூபாய் பணம் இருப்பதை அறிந்து கொண்ட பஹத், அப்பணத்தை கொள்ளையடிக்க நினைக்கிறார்.
வடிவேலுவிற்கு ஞாபக மறதி உள்ளது. அவரையே அவர் மறந்து போகும் அளவிற்கு. இதனைப் பயன்படுத்தி எப்படியாவது பணத்தை சுருட்ட நினைக்கிறார் பஹத்.

தன் நண்பன் திருவண்ணாமலையில் இருப்பதாகவும், அங்கு செல்ல வேண்டுமெனவும் பஹத்திடம் கூறுகிறார் வடிவேலு. இருவரும் பைக்கில் பயணமாகின்றனர்.
இவர்கள் பயணப்படும் அதேவேளையில், அடுத்தடுத்து கொலைகள் நடந்து வருகிறது. கொலை வழக்கை விசாரிக்கிறார் கோவை சரளா.
இறுதியில், அந்த கொலைகளுக்கு யார் காரணம்.? எதற்காக கொல்லப்படுகிறார்கள்.? யார் கொல்கிறார்கள்.? பஹத் பாசிலின் திட்டம் பழித்ததா.? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இரண்டாம் பாதியில் விடையை வைத்திருக்கிறார் இயக்குனர்.
இப்படத்தில், இயக்குனர் இயக்குனர் வேலையை மட்டும் செய்ததாலோ என்னவோ அவர் பணியை அவர் சரியாக செய்து முடித்திருக்கிறார்.
மாமன்னன் படத்திற்குப் பிறகு, மிகவும் சரியான ஒரு கதையை தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார் வடிவேலு. விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் காமெடியை எந்த இடத்திலும் கொடுக்காமல், சிறிதான புன்னகை கொடுத்தாலும் அதில் மன நிறைவை கொடுக்க வைக்கும் நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார் வடிவேலு. பஹத் பாசிலுக்கும் வடிவேலுக்குமான கெமிஸ்ட்ரி படத்தில் நன்றாகவே கைகொடுத்திருக்கிறார்.

இருவருக்குமான கான்வர்சேஷன் கதையின் ஓட்டத்திற்கு பலமாக இருந்திருக்கிறது. வடிவேலுவிற்கு இணையாக பஹத் பாசிலும் சின்ன சின்ன இடங்களில் கூட தனது நடிப்புத்திறனை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். அதிலும், வடிவேலு என்று தெரிந்து கொண்ட பின்பு, அவரை சந்திக்கச் செல்லும் காட்சியில் பஹத்தின் நடிப்பும் யுவனின் பிஜிஎம்’ம் சேர்ந்து ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்தியிருக்கிறது.
தேவையான இடங்களில் சின்ன சின்ன காமெடித் துணுக்குகளை கவனமாக சிதறவிட்டிருக்கின்றனர் படக்குழுவினர்.
போலீஸ் விசாரணை என்ற பெயரில் பெயரளவுக்கு அந்த கதாபாத்திரத்தை நகர விட்டு, லாஜிக் ஓட்டைகளை அடைக்க பயன்படுத்திருக்கிறார்களே தவிர, பெரிதளவில் அது கைகொடுக்கவில்லை.
முதல் பாதியில் கொஞ்சம் இல்லை நிறையவே சோதித்தாலும், கதைக்கு தேவை என்பதால் சற்று பொறுத்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர் படம் பார்ப்பவர்கள்.
படத்தின் இடைவேளையில் மிகப்பெரும் ட்விஸ்ட் வைத்து படத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். அதன்பிறகே, கதையின் அடித்தளம் நகர ஆரம்பித்திருக்கிறது. முதல் இடைவேளை வரை எதைத்தான் சொல்ல வருகிறார்கள் என்று தலையை சொறிய வைக்கவிட்டுவிடுகிறார்கள்.
ஒருவழியாக இரண்டாம் பாதி, கைகொடுத்து தூக்கி நிறுத்தி படத்தினை காப்பாற்றியிருக்கிறது. படத்தின் நீளம் படத்திற்கு மிகப்பெரும் சவாலாகவே உள்ளது. நீளத்தினை நன்றாகவே குறைத்திருக்கலாம். க்ளைமாக்ஸ் காட்சியில் நடக்கும் சண்டைக் காட்சியை இன்னும் சற்று யோசித்து கொடுத்திருந்திருக்கலாம்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் ரகம். அதிலும் , வடிவேலுவின் குரலில் ஒலிக்கும் பாடலை கேட்க கேட்க உள்ளுக்குள் கண்ணீரை வரவைத்திருக்கிறது. இளையராஜாவின் பாடலை சரியாக பயன்படுத்தியிருக்கிறார் யுவன்.
அழகான பசும் சோலையை காட்சிப்படுத்தியதில் இருந்து ஆரம்பித்து, க்ளைமாக்ஸ் காட்சி வரையிலும் தனது ஒளிப்பதிவின் திறனை மிகச் சரியாக பயன்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
அழகான கதையை கையில் எடுத்து அதற்கு அழகாகவே திரைக்கதை அமைத்து நகர்த்தியிருக்கிறார்கள். குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் குறித்து பேசி, சமூகத்தில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.முதல் பாதியில் விட்டதை இரண்டாம் பாதியில் கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்…
படக்குழுவினருக்கு வாழ்த்துகள்.
மாரீசன் – வீறு கொண்டவன்..





