
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸின் உதவி இயக்குனராக இருந்த அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா, அதர்வா, அனுராக் நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் இந்த ‘இமைக்கா நொடிகள்’.
பெங்களூரில் தொடர் கொலைகளை நடத்தி வரும் ‘ருத்ரா’ என்ற கேரக்டரை சிபிஐ அதிகாரியாக வரும் நயன்தாரா சுட்டுக் கொன்று விடுகிறார். சில தினங்களுக்குப் பிறகு மீண்டும் ‘ருத்ரா’ என்ற பெயரில் மீண்டும் சில கொலைகளை செய்கிறார் ஒருவர்.
அவன் யாரென கண்டுபிடிக்க ஒரு க்ளூ கூட கிடைக்காமல் திணறுகிறார் நயன்தாரா. இறுதியாக நயன்தாராவின் தம்பி அதர்வாவின் காதலியான ராசி கன்னாவை கடத்துவதுடன், அதர்வாவை பகடைக்காயாக மாற்றி அவர்தான் ருத்ரா என்பது போல சித்தரிக்கவும் செய்கிறான் கொலைகாரன். நயன்தாரா, தன் தம்பி அதர்வாவை எப்படி தப்பிக்க வைக்கிறார்..?? கொலைகரானை எப்படி பழி வாங்குகிறார் என்பதே படத்தின் மீதிக் கதை.
இனி தனக்கு எந்த கதாபாத்திரமும் பொருந்து என நெற்றியில் அடித்தார் போல் நயன்தாரா தன் நடிப்பினை மிக கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்.
மிடுக்கான சிபிஐ அதிகாரியாக வந்து செல்வதிலும் , விஜய் சேதுபதியை கரம் பிடிக்கும் சமயத்தில் அழகு தேவதையாக வருவதிலும் வாழ்ந்து காட்டியிருக்கிறார் நயன்தாரா.
முதல் பாதியில் காதல், பிரிவு என சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும், இரண்டாம் பாதியில் ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து களம் கண்டு அடித்திருக்கிறார் அதர்வா. இரண்டாம் பாதி வழக்கமான சினிமா காட்சிகள் இருப்பது சற்று சோர்வடைய வைத்திருக்கிறது.
படத்தின் மிகப்பெரிய பலமாக இருப்பது வில்லனாக நடித்திருக்கும் அனுராக் கஷ்யப். பாலிவுட்டில் மிகப்பெரிய இயக்குனரான இவர், தனது நடிப்பில் தமிழ் சினிமா வில்லன்களை மிஞ்சியிருக்கிறார். தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட சில வில்லன்கள் வரிசையில் இவர் பெயரும் நிச்சயம் இடம்பெறும். மிரட்டலான தோற்றத்தில் அனைவரையும் மிரள வைத்திருக்கிறார்.
15 நிமிட காட்சி மட்டுமே வந்தாலும், வலுவான பதிந்து செல்லும் காட்சிகளில் வந்து சென்றிருக்கிறார் விஜய் சேதுபதி.
அழகு தேவதையாக வந்து செல்கிறார் ராசி கன்னா. பட்டுக்கோட்டை பிரபாகரின் வசனங்கள் ரசிக்க வைத்திருக்கின்றன. ஹிப் ஹாப் ஆதியின் இசையில் ‘தூங்கவிடலையே’ பாடல் ரிப்பீட் மோட்.. பின்னனி இசையில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆர் டி ராஜசேகரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
படத்தின் நீளம் 2 மணி நேரம் 50 நிமிடம்… அது மட்டுமே படத்திற்கு மிகப்பெரிய சறுக்கல்.. ஒரு பெரிய கத்திரி போட்டிருந்தால், இந்த இமைக்கா நொடிகளை இமைக்காமல் பார்த்திருக்கலாம்…