
சென்னை, ஆகஸ்ட் 30, 2026: சென்னை இந்துஸ்தான் கலை & அறிவியல் கல்லூரி (HCAS) வளாகத்தில், ஆசிரியர் தின கொண்டாட்டம், 2026-ம் ஆண்டு முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா (Freshers’ Day) மற்றும் ‘HCAS Influencer’ என்ற புதிய பாடத்திட்டத்தின் தொடக்க விழா என முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.
ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெற்ற இந்த முப்பெரும் விழாவின் முதல் நிகழ்வாக, காலை 10 மணியளவில் கல்லூரியின் எம்.ஜி.ஆர். அரங்கத்தில் ஆசிரியர் தின கொண்டாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழக காவல்துறையின் பள்ளிக்கரணை மாவட்ட காவல் உதவி ஆணையர் திரு. எஸ். ஜான் விக்டர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். HCAS இயக்குநர் டாக்டர் சூசன் வர்கீஸ் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். கல்லூரி நிர்வாகம் மற்றும் உயர்கல்வித் துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
30 ஆண்டுகால பயணத்தை கொண்டாடிய HCAS
ஆசிரியர் தின கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாக, இந்துஸ்தான் கலை & அறிவியல் கல்லூரியின் 30 ஆண்டுகால கல்விப் பயணத்தை பதிவு செய்யும் வகையில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.
மேலும், மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால வளர்ச்சியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் பங்களிப்பை பாராட்டும் வகையில் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

முதலாமாண்டு மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
இதனைத் தொடர்ந்து 2026-ம் ஆண்டு முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா (Freshers’ Day) நடைபெற்றது. புதிய மாணவர்களை வரவேற்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடைபெற்றன.
மாணவ, மாணவிகளின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலும் நிகழ்வில் அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் HCAS துணை இயக்குநர் திரு. டேவிட் ரயன் வரவேற்புரையாற்றினார்.
‘HCAS Influencer’ – மாணவர்களுக்கான புதிய வாய்ப்பு
முப்பெரும் விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வாக ‘HCAS Influencer’ என்ற புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
மாணவர்களின் படைப்பாற்றல், தகவல் தொடர்புத் திறன் மற்றும் டிஜிட்டல் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான தனித்துவமான தளமாக இந்த புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்கள் மூலம் கல்லூரி மற்றும் சமூகத்துடன் மாணவர்கள் தீவிரமாக தொடர்புகொள்வதற்கும், HCAS-ன் துடிப்பான வளாக கலாச்சாரம் மற்றும் கல்விச் செயல்பாடுகளை டிஜிட்டல் தளங்களில் முன்னெடுத்துச் செல்வதற்கும் இந்தத் திட்டம் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் மாணவர்களை திறமையான Social Media Influencers மற்றும் Digital Content Creators ஆக உருவாக்குவதையும் இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

உயர்கல்வி முதல் டிஜிட்டல் திறன் வரை
ஆசிரியர் தின கொண்டாட்டம், முதலாமாண்டு மாணவர் வரவேற்பு விழா மற்றும் ‘HCAS Influencer’ பாடத்திட்ட அறிமுகம் என நடைபெற்ற இந்த முப்பெரும் விழா, உயர்கல்வி, மாணவர் திறமை, படைப்பாற்றல், தலைமைத்துவம் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் திறன்கள் ஆகியவற்றில் HCAS கொண்டுள்ள தொடர்ச்சியான ஈடுபாட்டை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.







