
காதல் தோல்விக்குப் பிறகு மீண்டும் காதலிக்க முடியுமா? கடந்த காலத்தை மறந்துவிட்டு புதிய வாழ்க்கையை தொடங்க முயற்சிக்கும் ஒருவரின் வாழ்க்கையில், மீண்டும் காதல் கதவைத் தட்டினால் என்ன நடக்கும்?
இந்த கேள்வியை மையமாக வைத்து உருவாகியிருக்கும் காதல் திரைப்படம் தான் ‘ஒன்ஸ் மோர்’.
விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் மற்றும் சோனா ஒலிக்கல் நடித்துள்ள இப்படம், காதல், பிரிவு, மனக்காயம், இரண்டாவது வாய்ப்பு என பழக்கமான உணர்வுகளை எளிமையான முறையில் சொல்ல முயற்சிக்கிறது.
படத்தின் நாயகன் ரகு. பல ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட காதல் தோல்வியின் தாக்கத்திலிருந்து இன்னும் முழுமையாக வெளியே வர முடியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் காதல் மீதான நம்பிக்கையே அவருக்குள் குறைந்து விடுகிறது. அப்படிப்பட்ட ரகுவின் வாழ்க்கைக்குள் துறுதுறுப்பான அன்ஜலி வருகிறார்.
ரகுவின் அமைதியான உலகத்திற்குள் அன்ஜலியின் உற்சாகம் நுழைந்ததும், அவனது வாழ்க்கை மெல்ல மாறத் தொடங்குகிறது.
காதலை வெறுக்கும் ஒருவரை மீண்டும் காதலிக்க வைக்க முடியுமா என்பதுதான் படத்தின் முக்கியமான பயணம்.
அன்ஜலி கதாபாத்திரத்தில் அதிதி ஷங்கர் படத்திற்கு தேவையான உற்சாகத்தை கொடுத்திருக்கிறார்.
எப்போதும் சிரித்துக்கொண்டே, ரகுவின் வாழ்க்கையில் மீண்டும் காதலை கொண்டு வர முயற்சிக்கும் கதாபாத்திரமாக அவர் வரும் காட்சிகள் பல இடங்களில் ரசிக்க வைக்கின்றன.
குறிப்பாக அர்ஜுன் தாஸுடன் இணைந்து வரும் காதல் காட்சிகளில் இருவருக்கும் இடையேயான chemistry நன்றாக work out ஆகியுள்ளது.
அர்ஜுன் தாஸுக்கு இந்தப் படம் அவரது வழக்கமான intense கதாபாத்திரங்களிலிருந்து சற்று வித்தியாசமான வாய்ப்பை கொடுத்திருக்கிறது.
மனதுக்குள் வலியை வைத்துக்கொண்டு வெளியில் எதையும் காட்டாமல் இருக்கும் மனிதராகவும், பின்னர் காதலின் மூலம் மீண்டும் வாழ்க்கையை ரசிக்கத் தொடங்கும் மனிதராகவும் அவர் தனது நடிப்பில் மாற்றத்தை காட்டுகிறார்.
குறிப்பாக ரகுவின் தனிமையை வெளிப்படுத்தும் காட்சிகளில் அர்ஜுன் தாஸின் நடிப்பு நன்றாக கைகொடுக்கிறது.
படத்தின் முக்கியமான திருப்பம் ரகுவின் கடந்தகால காதல் மீண்டும் அவனது வாழ்க்கைக்குள் வரும்போதுதான் ஏற்படுகிறது.
இதுவரை மென்மையாகவும் ஜாலியாகவும் சென்றுகொண்டிருந்த கதை, இங்கு சற்று தீவிரமான பாதைக்கு செல்கிறது.
பழைய காதல் ஏன் முடிந்தது? அந்த உறவு ரகுவை எந்த அளவுக்கு பாதித்தது? மீண்டும் அந்த நபர் வாழ்க்கைக்குள் வரும்போது ரகு என்ன முடிவு எடுக்கிறார்? போன்ற கேள்விகள் கதையின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்கின்றன.
இந்தப் பகுதியை இன்னும் அழுத்தமாகவும் நம்பகமாகவும் எழுதியிருந்தால் படத்தின் emotional impact இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.
‘ஒன்ஸ் மோர்’ படத்தின் முதல் பாதி அதன் முக்கியமான பலங்களில் ஒன்று.
ரகு – அன்ஜலி சந்திப்பு, அவர்களுக்குள் உருவாகும் நட்பு, அன்ஜலி ரகுவை காதலிக்க வைக்க முயற்சிப்பது என காட்சிகள் இயல்பாக நகர்கின்றன.
பெரிய திருப்பங்களைத் தேடாமல் கதாபாத்திரங்களின் உணர்வுகளின் வழியாக படத்தை நகர்த்தியிருப்பது ரசிக்க வைக்கிறது.
ஆனால் இடைவேளைக்குப் பிறகு வரும் கடந்தகால காதல் தொடர்பான காட்சிகள் படத்தின் வேகத்தை சற்று குறைக்கின்றன.
படத்தின் மிகப்பெரிய குறையாக அமைவது இரண்டாம் பாதியின் screenplay.
கடந்தகால காதல் தொடர்பான conflict இன்னும் வலுவாக எழுதப்பட்டிருக்க வேண்டியது அவசியமாக இருந்தது.
கதையின் முக்கியமான உணர்ச்சியே அந்த பழைய காதலின் தாக்கத்தைச் சுற்றி அமைந்திருப்பதால், அந்தப் பகுதிகள் பார்வையாளர்களை முழுமையாக connect செய்யவில்லை என்றால் படத்தின் emotional weight குறைந்து விடுகிறது.
அதேபோல் சில காட்சிகள் சற்று வசதியாக எழுதப்பட்டதாகவும் தோன்றுகிறது.
இருப்பினும் இறுதிப்பகுதியில் ரகு தனது வாழ்க்கையைப் பற்றிய தெளிவை அடையும் விதம் படத்திற்கு தேவையான emotional closure-ஐ கொடுக்கிறது.
ஹேஷம் அப்துல் வஹாபின் இசை படத்தின் காதல் உணர்வுக்கு நல்ல துணையாக இருக்கிறது.
கதையின் mood-ஐ உயர்த்தும் வகையில் பாடல்களும் பின்னணி இசையும் அமைந்துள்ளன. குறிப்பாக மெலடி பாடல்கள் காதல் காட்சிகளுக்கு அழகான feel-ஐ கொடுக்கின்றன.
அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவும் படத்தின் மென்மையான காதல் உணர்வுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது.
சோனா ஒலிக்கல் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான உணர்வை கொடுத்திருக்கிறார்.
அவரது கதாபாத்திரம் கதையின் முக்கியமான emotional conflict-க்கு காரணமாக இருந்தாலும், அந்தக் கதாபாத்திரத்தை இன்னும் அழுத்தமாக எழுதியிருந்தால் தாக்கம் அதிகமாக இருந்திருக்கும்.
மற்ற துணை நடிகர்களும் கதையின் ஓட்டத்திற்கு தேவையான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் காதல் தோல்வியை மையமாக வைத்து, மீண்டும் வாழ்க்கையைத் தொடங்குவதற்கான மனநிலையைப் பற்றி பேச முயற்சித்திருக்கிறார்.
கதை புதிதானதல்ல. காதல் தோல்வி, புதிய காதல், பழைய காதல் மீண்டும் வருவது போன்ற அம்சங்களை ஏற்கனவே பல படங்களில் பார்த்திருக்கிறோம்.
ஆனால் அதை இன்றைய தலைமுறையின் relationship mindset-உடன் இணைக்க முயற்சித்திருப்பது படத்திற்கு ஒரு தனி அடையாளத்தை கொடுக்கிறது.
முதல் பாதியில் இருக்கும் அந்த அழகான flow-வை இரண்டாம் பாதியிலும் தொடர்ந்து கொண்டு சென்றிருந்தால் ‘ஒன்ஸ் மோர்’ இன்னும் சிறப்பான காதல் படமாக மாறியிருக்கும்.
‘ஒன்ஸ் மோர்’ முழுமையான காதல் திரைப்படமாக ஜெயிக்கவில்லை என்றாலும், காதலின் மூலம் ஒரு மனிதன் தனது பழைய வலியிலிருந்து எப்படி வெளியே வருகிறான் என்பதை சொல்லும் முயற்சியில் சில அழகான தருணங்களை கொடுக்கிறது.
அர்ஜுன் தாஸின் அமைதியான நடிப்பு, அதிதி ஷங்கரின் உற்சாகமான performance, இருவருக்குமான chemistry மற்றும் ஹேஷம் அப்துல் வஹாபின் இசை படத்தின் முக்கியமான பலங்கள்.





