Spotlightசினிமா

இயக்குனராக களம் இறங்கும் நடிகர்!

கோலிவுட்டில் வந்து பிறக்கும் இயக்குனர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். ஒவ்வொரு வாரமும் முழுத்தகுதி மற்றும் திறமையுடன் இயக்குனர்கள் வந்து அறிமுகமாவதை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.. யாரிடமும் உதவி இயக்குனராக வேலை பார்க்காத ஷரண் குமார் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார்.

உதவி இயக்குனராக இல்லா விட்டாலும், அதற்கு மாறாக பிரகாஷ் ராஜ் தயாரித்த இனிது இனிது படத்தில் நடிகராக அறிமுகமாகி, சார்லஸ் ஷஃபீக் கார்த்திகா, மாலை நேரத்து மயக்கம் ஆகிய படங்களில் நடித்தவர் இவர். தற்போது பரத் நிவாஸ் ஹீரோவாக நடிக்கும் ஒரு திரில்லர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார்.

“நான் நடிகராக வேண்டும் என ஒரு போதும் நினைத்ததில்லை, இயக்குனராவது தான் என் கனவு. நான் ஒரு விளம்பர பட இயக்குனரிடம் உதவியாளராக சேர முடியுமா? என கேட்க சென்ற இடத்தில் தான் அது நிகழ்ந்தது. அவர்கள் நடிக்க ஆடிஷன் செய்ய சொன்னார்கள். மாலை நேரத்து மயக்கம் படத்துக்கு பிறகு, கூடிய சீக்கிரம் இயக்குனர் ஆவதன் அவசியத்தை உணர்ந்தேன். அதனால் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் திரைக்கதை எழுதும் பணிகளில் ஈடுபட்டிருந்தேன்” என்றார் நடிகர் ஷரண். ஷரண் ஓரிரண்டு குறும்படங்கள் இயக்கியதும், அதில் ‘டீ ஆர் காஃபி’ குறும்படம் நல்ல வரவேற்பை, பாராட்டுக்களை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

டார்க் திரில்லர் தான் இயக்கும் முதல் படம் என்று கூறும் ஷரண் மேலும் கூறும்போது, “பரத் ஒரு தொழிலதிபராக நடிக்கிறார், ஒரு தவிர்க்க முடியாத ஆபத்தில் மாட்டிக் கொள்ளும் அவர் குடும்பத்தை அதிலிருந்து மீட்பது தான் கதை. இது ஒரு நாயகனை மையப்படுத்திய கதை கிடையாது, மாறாக ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் இருக்கும். பரத்துக்கு இந்த கதை ரொம்பவே பிடித்து போனது, உடனே படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

சென்னை 2 சிங்கப்பூர் படத்தில் நடித்த கோகுல் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். நாயகி தேர்வு மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இசையமைப்பாளர் தரண் இசையமைக்க, ஜாக்சன் துரை, பர்மா படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த யுவா ஒளிப்பதிவு செய்கிறார். சன்னி (எடிட்டர்), கார்க்கி (பாடல்கள்), சாய்ராம் கிருஷ்ணன் (நிர்வாக தயாரிப்பு) கருந்தேள் ராஜேஷ் (திரைக்கதை ஆலோசகர் – சூது கவ்வும், இன்று நேற்று நாளை புகழ்) ஆகியோரும் படத்தில் பணி புரிகிறார்கள்.

படத்தின் கதைக்கு மலைப்பகுதி பின்னணி தேவைப்படுவதால் கொடைக்கானலில் ஜூலை மாதம் முதல் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. கியூ எண்டர்டெயின்மெண்ட் சார்பில் லக்கி சாஜெர் தயாரிக்கிறார்.

Facebook Comments

Related Articles

Back to top button