நடப்பு ஐபிஎல் தொடரில் 50-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்ய குமார் யாதவ் மற்றும் லெவிஸ் களமிறங்கினர். லெவிஸ் 9 , இஷான் கிஷான் 20 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 27 ரன்களுடனும் வெளியேற மும்பை அணி சற்று தடுமாற்றத்தை சந்தித்தது.
அந்த அணியில் குர்னால் பாண்டியா மற்றும் போலார்டு அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர். போலார்டு 23 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 50 ரன்கள் அடித்தார். குர்னால் பாண்டியா 2 சிக்ஸர்களுடன் 32 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் எடுத்தது.
187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் கெயில் களமிறங்கினர். இந்த ஆட்டத்திலும் கெயில் சொற்ப ரன்களில் அவுட் ஆகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தார். கடந்த மூன்று போட்டிகளில் கெயில் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பியது குறிப்பிடத்தக்கது.
கெயிலை அடுத்து பின்ச் களமிறங்கினார். ராகுல் மற்றும் பின்ச் ஆகிய இருவரும் அணியின் ரன் ரேட்டை உயர்த்தினர். பின்ச் 35 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து எதிர்பாரா விதமாக பும்ரா பந்தில் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ஸ்டோனிஸ் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினார். ராகுல் கடைசிவரை போராடினார். 59 பந்துகளைச் சந்தித்த அவர் 10 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 94 ரன்கள் அடித்து பும்ரா பந்தில் அவுட் ஆனார். இறுதி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் கிங்ஸ் லெவன் அணி 14 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.