
இயக்குனர் சந்துரு இயக்கத்தில் உபேந்திரா, ஸ்ரேயா நடிக்க உருவாகி வெளிவந்திருக்கும் படம் தான் கப்ஜா. மிகப்பெரும் பொருட் செலவில் கே ஜி எஃப் படத்திற்குப் பிறகு கன்னட சினிமாவில் இருந்து வந்திருக்கும் அடுத்த ஒரு பிரம்மாண்ட படைப்பு.
கதைப்படி,
சுதந்திர போராட்டத்தில் தனது தந்தையை இழந்து விடுகிறார் உபேந்திரா. தனது தாயின் அரவணைப்பில் வளரும் உபேந்திராவிற்கு உடன் பிறந்தது ஒரு அண்ணன்.
1970-களில் நடக்கும்படியாக கதை நகர்கிறது. விமானப்படை பணிக்கு சேர பயிற்சி முடித்திருக்கும் உபேந்திரா, தனது கிராமத்திற்கு வருகிறார். அரண்மனை வீட்டு இளவரசியான ஸ்ரேயாவை காதலிக்கிறார் உபேந்திரா.
இந்நிலையில், லோக்கல் தாதாவின் மகனை ஒரு பிரச்சனையில் உபேந்திராவின் அண்ணன் கொன்று விட, லோக்கல் தாதா உபேந்திராவின் அண்ணனை கொன்று விடுகிறார்.
தனது அண்ணனை கொன்றவரை பழிவாங்க, கேங்க்ஸ்டராக உருவெடுக்கிறார். அடுத்தடுத்த ரெளடிகளை துவம்சம் செய்து மிகப்பெரும் கேங்க்ஸ்டராகிறார் உபேந்திரா.
இவரது சாம்ராஜ்யம் நிலைத்ததா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
கன்னடத்தில் சூப்பர் ஸ்டாரான உபேந்திரா, கப்ஜாவில் மிரட்டலான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். ஆக்ஷனின் அதகளமாய் மிரட்டியிருக்கிறார் உபேந்திரா.
அழகிலும் நடிப்பிலும் ஜொலித்திருக்கிறார் ஸ்ரேயா. கன்னட திரையுலகில் இருந்து வந்த கே ஜி எஃப் திரைப்படத்தில் வைக்கப்பட்ட சண்டைக் காட்சிகள், ஒளிப்பதிவு, பின்னணி இசை என அனைத்தும் இப்படத்திலும் காப்பியடித்தாற் போல் சென்றது தான் இப்படத்திற்கு மிகப்பெரும் சரிவு.
சிறியகதாபாத்திரத்தில் தோன்றியிருக்கிறார்கள் கிச்சா சுதீப்பும் சிவராஜ்குமாரும்.
அதிரடியான சண்டைக் காட்சிகளாக இருந்தாலும், அதில் சற்று நம்பகத்தன்மையும் இருக்க வேண்டும். ஆனால், இப்படத்தில் அந்த நம்பகத்தன்மை ஒரு இடத்தில் கூட நாம் பார்க்க முடியாது.
சிறையில் நடக்கும் சண்டைக் காட்சிகளில் ஒளிப்பதிவு சிறப்பு. கிராபிக்ஸ் காட்சிகளில் இன்னும் சற்று கூடுதலாகவே கவனம் செலுத்தியிருந்திக்கலாம்.
கே ஜி எஃப் படத்தில் நீக்கப்பட்ட இசையே இப்படத்திலும் ஒலித்திருப்பதால் பெரிதாக பின்னணி இசையை ரசிக்க முடியவில்லை.
படத்தின் கதை மற்றும் திரைக்கதை இரண்டும் பலமாக இருந்தும் மேக்கிங்’கில் பெரிதான தொய்வு இருப்பதால் கப்ஜாவை ரசிக்க முடியாமல் போனது தான் மிச்சம். கை தூக்கினால் பத்து பேர் பறந்து செல்லும் காட்சிகளை ரசிக்கும் கன்னட ரசிகர்களுக்கு இப்படம் மிகப்பெரும் விருந்தாகக் கூட இருக்கலாம்….
ஆனால், தமிழ் ரசிகர்களுக்கோ கப்ஜா – ஏமாற்றம்..