
இயக்குனர் வைகறை பாலன் இயக்கத்தில் கிஷோர் நடித்துள்ள படம்தான் இந்த கடிகார மனிதர்கள். தங்களின் வாழ்க்கைத் தேவைக்காகவும் குடும்பத்தின் தேவைக்காகவும் நாள்தோறும் ஓடி ஓடி தேயும் ஒரு குடும்பத் தலைவனின் கதை.
கிஷோரின் மனைவியாக வருகிறார் லதாராவ். இவர்களுக்கு மூன்று குழந்தைகள். கடன் தொல்லையால் சென்னைக்கு தஞ்சம் புகும் இந்த குடும்பம், வாடைகைக்கு வீடு தேடி அலை அலை என அலைகின்றனர்.
தன்னுடைய, பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு ஒரு இடத்தில் வீடு ஒன்று கிடைத்தாலும், நான்கு பேர் மட்டும் தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் விதிக்கப்படுகிறது. நான்கு பேருக்கு மேல் ஆள் இருப்பவர்களுக்கு வீடு வாடகைக்கு கொடுப்பதில்லை என்று வீட்டு உரிமையாளர் கராராக சொல்லிவிட, வேறு வழி இல்லாமல், தனது ஒரு பிள்ளையை மறைத்து, இரண்டு பிள்ளைகள் இருப்பதாக பொய் சொல்லி கிஷோர் அந்த வீட்டில் குடியேறுகிறார் கிஷோர்.
தனது மூன்றாவது பிள்ளை இருப்பதை வீட்டு உரிமையாளரிடம் மட்டும் இன்றி, தனது காம்பவுண்ட்டில் இருப்பவர்கள் அனைவரிடமும் மறைத்து, பிள்ளையை மறைமுமகாக பள்ளிக்கு அழைத்து செல்வது, அழைத்து வருவது, அனைவரும் எழுந்திருப்பதற்கு முன்பாக அவனை குளிக்க வைத்து பள்ளிக்கு தயார் படுத்துவது என்று ஒரு புறம் பதுங்கு குழி வாழ்க்கை நடத்தும் கிஷோர், மறுபுறம் சரியான வருமானம் இல்லாமல் கஷ்ட்டப்பட்டாலும் இறப்பதற்கு முன்பாக சொந்த வீடு வாங்கிட வேண்டும் என்ற கனவோடு பயணிக்க, அவரது கனவு நிறைவேறியதா இல்லையா, என்பது தான் படத்தின் மீதிக்கதை.
இதற்கு நடுவே கருணாகரனின் காதல் போராட்டம், ஹவுஸ் ஓனரின் மகளை காதல் புரிகிறார். சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்று சென்னைக்கு வந்தவரின் வாழ்க்கை ஒருபுறம் என்று வாடகை வீடுகளில் வசிக்கும் பலவித மனிதர்களின் பலவித போராட்டங்களை இதில் காட்டியுள்ளார்.
கிஷோர் வழக்கம்போல் தன்னுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். கதைக்கு தேவையான இடங்களில் மட்டும் ஸ்கோர் செய்திருக்கிறார். தனது குடும்பத்திற்காக வீடு தேடி அலையும் நேரத்தில் பவ்வியமான ஒரு முகத்தோடு கச்சிதமான ஒரு நடிப்பினை கொடுத்திருக்கிறார்.
கிஷோர் மூலம் இயக்குனர் தான் சொல்ல வந்த கருத்தை அழுத்தமாக தெளிவாக சொல்லியிருக்கிறார். லதா ராவுக்கு பெரிய அளவில் ஸ்கோப் இல்லை என்றாலும் கதாபாத்திரமாக கவர்கிறார்.
கருணாகரன் காமெடி நடிகராக அல்லாமல் குணச்சித்திர வேடமாக படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். வீட்டு உரிமையாளராக நடித்திருக்கும் பாலாசிங்கின் கராரான நடிப்பு டெரராக இருக்கிறது.
உமா சங்கரின் ஒளிப்பதிவும், சாம் சி.எஸ்-ன் இசையும் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. சென்னையில் வாடகை வீட்டில் வசித்திருக்கும் பல குடும்பங்களின் நிலையை வெளிச்சம் காட்டியதற்காகவே இயக்குனருக்கு ஒரு பெரிய பூங்கொத்தை வழங்கலாம்.
நூறு படங்களுக்கு நடுவே வரும் இப்படியான எளிமையான கதையை கொண்டாடலாம்.
கடிகார மனிதர்கள் – எளிய கதையில் தோன்றிய வெளிச்சம் ….