
பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படக் குழுவினர் உலகநாயகன் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றுள்ளனர். சென்னை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், படக்குழுவினருடன் கமல்ஹாசன் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டார்.
பாவனா ஸ்டுடியோஸ் தயாரிப்பில், கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், குறிப்பிடத்தக்க வெற்றியையும் பதிவு செய்துள்ளது. தற்போது இப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி, தமிழ் ரசிகர்களிடையேயும் கவனம் பெற்று வருகிறது.
இந்தச் சந்திப்பில் படத்தின் இயக்குநர் கிரிஷ் ஏ.டி., நடிகர்கள் திலீஷ் போத்தன், ஃபகத் பாசில், கிரண் ஜோஸி, சங்கீத் பிரதாப் மற்றும் உன்னிமாயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், ஃபியூச்சர் ரன் அப் பிலிம்ஸ் நிறுவனத்தின் விநியோகஸ்தர்களான அருண் நாராயணன் மற்றும் அனுப் குமார் ஆகியோரும் உடனிருந்தனர்.
மலையாளத்தில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம், தற்போது தமிழ் மொழியிலும் வெளியாகியுள்ள நிலையில், கமல்ஹாசன் நேரில் பார்த்து பாராட்டியிருப்பது படக்குழுவினருக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது.
கமல்ஹாசனின் பாராட்டும், வாழ்த்துகளும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினருக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பு, படத்தின் பயணத்தில் மேலும் ஒரு சிறப்பான தருணமாக அமைந்துள்ளது.





