
இயக்கம்: முரளி கிரிஷ். எஸ்
நடிகர்கள்: தினேஷ், ரேஷ்மா வெங்கடேஷ், மதுநிகா, மன்சூர் அலிகான், சரவண சுப்பையா, கலையரசன் கண்ணுசாமி , பிராங்க் ராகுல்
தயாரிப்பு: முரளி கிருஷ்ணன்
இசை: இன்பா
ஒளிப்பதிவு: பாஸ்கர் ஆறுமுகம்
கதைப்படி,
வாட்டர் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் தினேஷ், மேட்ரிமோனி மூலமாக ரேஷ்மாவை சந்திக்கிறார். இருவரும் சந்தித்து பேசி காதலித்து திருமணம் செய்ய முடிவு செய்கின்றனர். ரேஷ்மாவிடம் தினேஷ் பேசிக்கொண்டிருக்கும் போது தன்னிடம் கருப்பு பல்சர் ஒன்று இருப்பதாக எதேச்சையாக கூற, அதில் தன்னை அழைத்துச் செல்லுமாறு ரேஷ்மா கூறி விடுகிறார்.
இதன் பிறகு வேறு வழியில்லாமல் பழைய கருப்பு பல்சர் ஒன்றை வாங்கி விடுகிறார் தினேஷ். அந்த பல்சர் வாங்கியதில் இருந்து தினேஷின் வாழ்க்கையில் எதிர்பாரா சம்பவங்கள் சில நடக்கின்றன. அதன் பிறகு தான் தெரிய வருகிறது பைக்குக்குள் காளைமாடு ஒன்றின் ஆவி புகுந்திருக்கிறது… பைக்கிற்குள் ஆவியாக காளை ஏன் புகுந்தது.? இதன் பின்னால் இருக்கும் மர்மம் என்ன என்பதே படத்தின் மீதி கதை.

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை நேர்த்தியாக செய்யக்கூடிய திறமை கொண்டவர் தினேஷ். அதே போல தான் இந்த படத்திலும் அக்கதாபாத்திரமாகவே மாறி கதையின் முழு உருவமாகவே நம் கண்ணில் தென்பட்டார் தினேஷ்.
கதாபாத்திரத்தை நன்றாகவே உணர்ந்து அதை மிகவும் நேர்த்தியாகவே செய்திருக்கிறார் தினேஷ். ஜல்லிக்கட்டு காளையை தினேஷ் அடக்கும் காட்சிகள் மிகவும் தத்ரூபமாக இருந்தது படத்திற்கு மேலும் உயிர் கொடுத்தது.
ஹீரோயின் ரேஷ்மா அழகான தேவதையாக வந்து படத்தில் தனது நடிப்பை சிறப்பாக கொடுத்திருந்தார். பிராங்க் ஸ்டார் ராகுல் நன்றாகவே சிரிக்க வைத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் இன்பாவின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் நன்றாக இருந்தது. பாஸ்கர் ஆறுமுகம் அவர்களின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலமாக இருந்தது.
முதல் பாதியை கலகலப்பாக கொண்டு சென்று இரண்டாம் பாதியில் அமானுஷ்யம் ஆக்சன் என படத்தை அதிரடியாக இயக்கி வெற்றி கண்டிருக்கிறார் இயக்குனர் முரளி கிரிஷ் ..
கருப்பு பல்சர் – அதிரடி..



