
‘2018’, ‘ரேக்காசித்திரம்’, ‘மாளிகப்புரம்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த காவ்யா ஃபிலிம் கம்பனி, தனது அடுத்த தமிழ் திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னணி நடிகர் ஆர். சரத்குமார் பிறந்தநாளை முன்னிட்டு, தற்காலிகமாக ‘Production No.12’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது காவ்யா ஃபிலிம் கம்பனி மற்றும் சரத்குமார் இணையும் முதல் திரைப்படமாகும். ‘கிங்ஸ்டன்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் கமல் பிரகாஷ், இப்படத்தை எழுதி இயக்குகிறார். சரத்குமாரை இதுவரை இல்லாத மாறுபட்ட கதாபாத்திரத்தில் ரசிகர்கள் பார்க்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
தயாரிப்பாளர் வேணு குன்னப்பள்ளி, சரத்குமார் போன்ற அனுபவம் மிக்க நடிகருடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி தெரிவித்ததுடன், இந்த படம் ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரையரங்கு அனுபவமாக இருக்கும் என்ற நம்பிக்கையையும் பகிர்ந்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ள நிலையில், நவம்பர் 2026-க்குள் முழு படப்பிடிப்பையும் நிறைவு செய்து, 2027ஆம் ஆண்டு தொடக்கத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
படத்திற்கு கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். கலைவாணன் ஆர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். மேலும், தமிழ் பிரபா, எஸ்.எஸ். மூர்த்தி, தினேஷ் மனோகரன், ரோனெக்ஸ் சேவியர் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர்.
படத்தின் தலைப்பு, நடிகர்கள் மற்றும் கூடுதல் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.





