
கேரளாவைச் சேர்ந்த இளம் இயக்குனர் விவேக் ஆர்யன் பைக் விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கேரளாவைச் சேர்ந்த பிரபல இயக்குநரான ஜீத்து ஜோசப்பிடம் ‘திரிஷ்யம், மெமரீஸ்’ போன்ற படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் விவேக் ஆர்யன். கடந்த ஆண்டு வெளியான ‘ஓர்மையில் ஒரு சிஷ்ரம்’ என்ற படத்தின் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமானார்.
இந்நிலையில், கடந்த மாதம் தனது மனைவி அமிர்தாவுடன் மின்னல் வேகத்தில் பைக்கில் சென்றார். அப்போது திடீரென சாலையின் குறுக்கே நாய் வந்துள்ளது. நாய் மீது மோதுவதை தவிர்க்க முயன்று இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனை அடுத்து இருவரும் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விவேக் ஆர்யனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி விவேக் ஆர்யன் பரிதாபமாக உயிரிழந்தார். இது அவரது குடும்பத்தினர் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




