
இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகியுள்ள “லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு” படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இசையமைப்பாளர் தர்புகா சிவா பேசும் போது, “எல்லா கதாபாத்திரங்களும் தங்களது பணியை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு பின்னணி இசையமைத்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பாடல்களுக்கு தேவையான ஆற்றலையும் உணர்வையும் பாடகர்கள் அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளனர். இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பு அளித்த இயக்குநர் தயாள் பத்மநாபன் சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள். இயக்குநராக மட்டுமல்லாமல், இந்தப் படத்திற்காக மிகுந்த உழைப்பை வழங்கியிருக்கிறீர்கள். உங்களுக்கு எனது வாழ்த்துகள்.”
நடிகை லிஸி பேசும் போது “நல்ல மகளாகவும், நல்ல சகோதரியாகவும், நல்ல நடிகையாகவும் இருந்திருக்கிறேனா என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் பெருமைப்படும் ஒரு விஷயம் என்னவென்றால், நான் ஒரு அம்மா என்பதுதான். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள அம்மா பாடல் எனக்கு மிகவும் நெருக்கமானது. அந்தப் பாடலை வழங்கிய இயக்குநருக்கும் இசையமைப்பாளருக்கும் என் நன்றிகள்.
இந்த விழாவின் ஃபோகஸ் முழுவதும் பாண்டே சார் மீது இருக்கிறது என்று கூறினார்கள். முதல் நாள் படப்பிடிப்பே அவருடன் தான். ஒரு நடிகராக அவரைப் பார்த்தபோது நான் ஆச்சரியப்பட்டேன். ‘ஆக்ஷன்’ என்றவுடன் முழுமையாக கதாபாத்திரமாக மாறி நடித்தார். இந்தப் படத்தில் மிகச் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார்.” என்றார்.
அருவின் மதன் பேசும் போது, “அனைவருக்கும் வணக்கம்,…. விழாவின் நாயகனான தர்புகா சிவாவிற்கு பெரிய வாழ்த்துகள். முத்தம் கொடு பாடல் மிக அருமையாக இருந்தது. விழாவை ஒருங்கிணைப்பதில் முதற்கொண்டு தனது வேலையை இறங்கி செய்து கொண்டிருக்கிறார் இயக்குனர் தயாளன் சார். மிகவும் அர்ப்பணிப்போடு அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார் தயாளன் சார். எனக்கு ஒருநாள் தான் படப்பிடிப்பு இருந்தது. இந்த படத்தில் நடித்தது எனக்குப் பெருமையாக இருந்தது. ” என்று கூறினார்.
கவிதா பாரதி பேசும் போது, “கலை சாமானியர்களுக்கான கனவு. பொதுவாக இந்த தலைமுறைக்கு சட்டத்தின் மீதும் நீதியின் மீதும் நம்பிக்கை குறைந்து வருகிறது. அல்லது அதற்காக காத்திருக்கும் பொறுமை குறைந்து வருகிறது எந்த குற்றம் நடந்தாலும், அந்த குற்றத்திற்காக குற்றவாளியை என்கவுண்டர் செய்ய வேண்டும் என்று தான் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். மொத்த நாடும் அதைத் தான் எதிர்பார்க்கிறது. குற்றவாளிகளில் கூட காசு இல்லாதவனுக்கு ஒரு வகையான மாவுக்கட்டும், காசு இருப்பவனுக்கு மாவுக்கட்டு என்ற பெயரில் ஒரு கட்டும் இருப்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. என்கவுண்டரையும் மரணத்தையும் உடனடியாக தர நினைக்கும் இந்த சமயத்தில் நீதிமன்றம் தரும் தண்டனையே வேண்டாம் மீண்டும் அதனை மறுபரீசிலனை செய்யுங்கள் என்பதை பேசுகிறது இந்த படம். அந்த வகையில் இயக்குனர் தயாள் பத்மநாபன் வெறும் ஒரு வணிகத்திற்கான இயக்குனர் இல்லை. இந்த சமூகத்திற்காக பொறுப்பை உணர்ந்து வந்திருக்கக் கூடிய இயக்குனர்.
இங்கிருந்து கன்னடத்திற்குச் சென்று அங்கு தன் கொடியை நட்டி, வெற்றி பெற்ற இயக்குனர் தயாள் பத்மநாபன். அனைவரின் சார்பாக இயக்குனருக்கு ஒரு வாழ்த்துகள்., ஏழாவது மனிதனில் ஒரு பாரதியார் பாடல் ஒன்று வரும், அது ஒரு அற்புதமான பாட்டு… அந்த பாடலுக்குப் பிறகு பாரதியாரின் பாடலை இந்த படத்தில் வைத்து எல்லா இடத்திற்கும் கொண்டு செல்லும் பெருமை படைத்திருக்கிறார் இசையமைப்பாளர் தர்புகா சிவா…
பாரதியை ஏற்றுக் கொண்டவர்கள் பாரதிதாசனை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கும் ஒரு அரசியல் இருக்கிறது. இந்த படத்திற்காக இயக்குனர் தயாள் பத்மநாபன் அதிகமாக உழைத்திருக்கிறார். முதலில் ரங்கராஜ் பாண்டே தான் இந்த படத்தில் நடிக்கப் போகிறார் என்று சொன்னதும், எனக்கு முதலில் ஏற்றுக் கொள்ள மனம் வரவில்லை. அதன் பின் அவரது நடிப்பை பார்த்து, அரசியல் வேறு சினிமா வேறு என்று புரிந்து கொண்டே. அப்படி ஒரு நடிப்பை இப்படத்தில் கொடுத்திருக்கிறார் ரங்கராஜ் பாண்டே. “ என்று கூறினார்.
ரங்கராஜ் பாண்டே பேசும் போது, “இந்தப் படத்திற்காக நானும் இயக்குநரும் சேர்ந்து 12 மணி நேரத்தில் சுமார் 15 நேர்காணல்கள் அளித்தோம். படத்தின் நாயகன் வெற்றியின் கண்களே இந்தப் படத்தில் பேசுகின்றன. ஒரு அதிகாரியிடம் பேசும்போதும், தாயிடம் பேசும்போதும் இருக்கும் உணர்வுகளின் வித்தியாசத்தை அவர் மிக நுணுக்கமாக வெளிப்படுத்தியுள்ளார். நீண்ட வசனங்களையும் மிகவும் இயல்பாகக் கையாள்ந்துள்ளார்.
பாரதியாரின் பாடல்களை திரைப்பட இசையாக மாற்றுவது எளிதான விஷயம் அல்ல. அந்த வகையில் இளையராஜா சாருக்குப் பிறகு, பாரதியாரின் வரிகளுக்கு புதுமையான உயிர் கொடுத்திருக்கிறார் தர்புகா சிவா.” என்றார்.
இயக்குனர் தயாள் பத்மநாபன் பேசும்போது,
“அனைவருக்கும் வணக்கம். கன்னடத்தில் 65 முதல் 75 லட்சம் ரூபாய் செலவில் ஒரு திரைப்படத்தை உருவாக்க முடியும். ஆனால் தமிழில் அதே அளவிலான படத்தை உருவாக்க குறைந்தபட்சம் இரண்டு கோடி ரூபாய் வரை செலவாகிறது. ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ ஒரு மிட்-பட்ஜெட் திரைப்படம்.
இந்த மேடையை ஒரு ஆடியோ வெளியீட்டு விழாவாக மட்டுமல்லாமல், இடதுசாரி மற்றும் வலதுசாரி சிந்தனைகள் இணைந்த ஒரு மேடையாகவே நான் பார்க்கிறேன்.
முதலில் ஜூலை 3ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தோம். ஆனால் விநியோகஸ்தர்களின் வேண்டுகோளை ஏற்று, ஜூலை 10ஆம் தேதி வெளியிட முடிவு செய்தோம்.
ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ரவி எனது 20 ஆண்டு கால நண்பர். இந்தப் படத்தை மக்களிடம் சரியாக கொண்டு சேர்க்க முடியும் என்ற நம்பிக்கையில் அவரிடம் வெளியீட்டு பொறுப்பை ஒப்படைத்துள்ளோம்.” என்றார்.





