
புதுமுக நடிகர்களான சித்து மூலி மணி, ஸ்ரீ வைஷ்ணவ், சந்தோஷ் மற்றும் கிருஷ்ணா விஜய் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்துள்ள ‘கோல்டு கால்’ (Cold Call) திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. இந்த முன்னோட்டத்தை நடிகர் ஆர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தம்பிதுரை இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சித்து மூலி மணி, ஸ்ரீ வைஷ்ணவ், சந்தோஷ், கிருஷ்ணா விஜய், ஸ்ரீகாந்த், பாலாஜி ராஜசேகர், அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே, கீர்த்தனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜி.என். சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு பிரணவ் கிரிதரன் இசையமைத்துள்ளார். சுரேஷ் ஆறுமுகம் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். முழுமையான கமர்சியல் என்டர்டெய்னராக உருவாகியுள்ள இப்படத்தை வாக்த்ரோ என்டர்டெயின்மெண்ட் (Walkthrough Entertainment) சார்பில் கேசவ மூர்த்தி தயாரித்துள்ளார். ஆக்சன் ரியாக்ஷன் நிறுவனம் சார்பில் ஜெனீஷ் இப்படத்தை வெளியிடுகிறார்.

‘கோல்டு கால்’ திரைப்படம் செப்டம்பர் 18ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி படத்தின் முன்னோட்டம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
முன்னோட்டத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த நான்கு தென்னிந்திய விற்பனை பிரதிநிதிகளின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகியிருப்பதை வெளிப்படுத்துகிறது.
விற்பனை பிரதிநிதிகளாக பணியாற்றும் நான்கு இளைஞர்களின் அன்றாட வாழ்க்கை, அவர்களுக்கிடையேயான நட்பு, காதல், மோதல் மற்றும் எதிர்பாராத சம்பவங்களை நகைச்சுவையுடன் கலந்து சொல்லும் படமாக ‘கோல்டு கால்’ உருவாகியுள்ளது. காமெடியுடன் ஆக்ஷன் மற்றும் காதலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது முன்னோட்டத்தின் மூலம் தெரிய வருகிறது.

புதுமுக நடிகர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த வித்தியாசமான கமர்சியல் என்டர்டெய்னர் திரைப்படம், செப்டம்பர் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
தற்போது ‘கோல்டு கால்’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.





