ராஜசேகர் மற்றும் யுவராஜ் கண்ணன் என்கிற இரட்டையர்கள் இணைந்து இயக்கியிருக்கும் படம் தான் இந்த “லாக்கர்”. இப்படத்தில், விக்னேஷ் சண்முகம், நிரஞ்சனி அசோகன், நிவாஸ் ஆதித்தன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
அவ்வப்போது திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் ஹீரோ விக்னேஷ். யாரிடமும் மாட்டிக் கொள்ளாதவாறு இந்த திருட்டு வேலைகளை தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து செய்து வருகிறார்.
இந்த சூழலில் நாயகி நிரஞ்சனி காண்கிறார் விக்னேஷ். கண்டதும் அவர் மீது காதல் கொள்கிறார் விக்னேஷ். சிறிது நாட்கள் நிரஞ்சனியின் பின்னால் சுற்ற, விக்னேஷின் காதலை நிரஞ்சனி ஏற்றுக் கொள்கிறார்.
ஒருகட்டத்தில், விக்னேஷ் திருட்டு வேலை செய்து வருவது நிரஞ்சனிக்கு தெரிய வர, விக்னேஷை விட்டு பிரிகிறார் நிரஞ்சனி.
தனது காதலுக்காக, இனி அந்த வேலையை செய்வதில்லை என்று முடிவெடுக்கிறார் விக்னேஷ். தனக்காக திருட்டு வேலையை விட்டதை அறிந்த நிரஞ்சனி மீண்டும் விக்னேஷோடு இணைகிறார்.
இதைத் தொடர்ந்து, வில்லனான நிவாஸ் ஆதித்தனை காண்கிறார் நிரஞ்சனி. மிகப்பெரும் செல்வந்தரும் ரெளடியுமான நிவாஸ் ஆதித்தனால் தான் தன்னுடைய குடும்பம் நடுரோட்டிற்கு வந்ததாகவும், தன்னுடைய அப்பாவை அவர் தான் கொன்றார் என்றும் நிரஞ்சனி விக்னேஷிடம் கூறுகிறார்.
தனக்காக, நிவாஸை பழி வாங்குமாறு விக்னேஷிடம் கேட்க, அவரும் ஓகே சொல்ல… கதை பழி வாங்குதலில் பயணிக்கிறது.
இறுதியில் என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் விக்னேஷ், கதைக்கு சரியாக பொருந்தியிருக்கிறார். இருந்தாலும், கதையோடு ஒன்றி பயணிக்க சின்ன சின்ன கூடுதல் எஃபர்ட் கொடுத்திருந்திருக்கலாம். பல இடங்களில் தன்னால் முடிந்த முயற்சியை அளவாக கொடுத்ததற்காக நன்றாகவே பாராட்டலாம்.
காட்சிகளில் அழகாகவும் நடிப்பில் அளவாகவும் தந்து தனது திறமையை செவ்வெனவே நிரூபித்திருக்கிறார் நாயகி நிரஞ்சனி. இன்னும் பல படங்களில் இவரை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
வில்லனாக நடித்த நிவாஸ், அளவாக இல்லாமல் மிகையாகவே நடித்திருக்கிறார். அதை சற்று குறைத்திருந்திருக்கலாம்.
நாயகன் உடன் வரும் இருவரை வைத்து நன்றாகவே காமெடி ட்ரை பண்ணியிருக்கலாம். ஆனால், அதை செய்ய தவறிவிட்டனர்.
போலீஸ் அதிகாரியாக வந்தவர் மிரட்டலான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
அடுத்த காட்சி என்ன என்பது நம்மால் எளிதில் யூகிக்க முடிகிறது அது சற்று படத்திற்கு சறுக்கலாக இருந்தாலும், திரைக்கதையின் விறுவிறுப்பு நம்மை படத்திற்குள் இழுத்துச் சென்று விடுகிறது.
அளவாக எடிட் செய்து அளவாக நம் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்கள். இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.
லாக்கர் – வேகமெடுத்த திரைக்கதை…