
தமிழ் சினிமாவில் இதுவரை அதிகம் பேசப்படாத கடலோர வாழ்க்கையையும், பாய்மரப் படகுப் போட்டியையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம், ரசிகர்களை வித்தியாசமான திரையுலக அனுபவத்திற்கு அழைத்துச் செல்ல தயாராகி வருகிறது.
நடிகர் சூரி கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தை இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். கடலின் நடுவே நடைபெறும் பரபரப்பான பாய்மரப் படகுப் போட்டி, போட்டியின் வெறி, வெற்றிக்கான போராட்டம் மற்றும் கதாபாத்திரங்களின் உணர்வுகள் என ‘மண்டாடி’ திரைப்படம் ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் ட்ராமாவாக உருவாகியுள்ளது.
இப்படத்தில் சூரியுடன் சுஹாஸ், மகிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திர விஜய், அச்யுத் குமார், பாலா சரவணன், மிதுன் மற்றும் கீர்த்திகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘மண்டாடி’ திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். பிரபல தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தலைமையிலான RS Infotainment Pvt. Ltd. நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்துள்ளது.
கடினமான கடலோர சூழல்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், பிரம்மாண்டமான காட்சியமைப்புகள், ஆக்ஷன் காட்சிகள் மற்றும் உணர்வுப்பூர்வமான கதைக்களம் ஆகியவற்றின் மூலம் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இப்படத்தின் முதல் பாடலான ‘மண்டாடி மண்டாடி’ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது பாடலும் வெளியாகியுள்ளது.
“உசுரே நீதான் புள்ள” என பெயரிடப்பட்டுள்ள இந்த காதல் பாடல், சூரி மற்றும் மகிமா நம்பியார் இடையேயான காதல் மற்றும் அழகான இணைப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
இதமான மெலடி இசையுடன், மனதை வருடும் காதல் வரிகளும் சூரி – மகிமா நம்பியாரின் இயல்பான கெமிஸ்ட்ரியும் இணைந்து “உசுரே நீதான் புள்ள” பாடலை ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உருவாக்கியுள்ளன.
“சுருக்கு பைய்யா சுருங்கும் காலம் வர, உன்னில் ஒன்னா வாழ வேணும் புள்ள” என காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல் வரிகளை ஜெயஸ்ரீ மதிமாறன் எழுதியுள்ளார். கபில் கபிலன் மற்றும் சஞ்சனா இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர்.
கடலோர வாழ்க்கையின் பின்னணியில் உருவாகியுள்ள ஒரு ஆக்ஷன் கதைக்குள் காதலையும் உணர்வுகளையும் அழகாக இணைத்திருப்பது ‘மண்டாடி’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
சூரி – மகிமா நம்பியார் கூட்டணியில் வெளியாகியுள்ள “உசுரே நீதான் புள்ள” பாடல், படத்தின் காதல் காட்சிகள் குறித்த ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. வித்தியாசமான கதைக்களம், கடலோர பின்னணி, பாய்மரப் போட்டி, ஆக்ஷன் மற்றும் காதல் என பல அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடம் எந்த அளவுக்கு வரவேற்பைப் பெறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.





