
டம்: மௌனமொழிகள்
நடிப்பு: ஷகீர் மனோ, அர்ச்சனா, பி. ஸ்ரீமன், திவ்யா நாகேஷ், அர்ஜுன், தலைவாசல் விஜய், மீரா கிருஷ்ணன், இளவரசன், அஞ்சலி தேவி, விஜய் கணேஷ்
தயாரிப்பு: பி. பாலசந்திரன், பி. ஸ்ரீமன்
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம்: ஏ.சி. சௌந்தர்
இசை: நல. இளந்திரையன்
ஒளிப்பதிவு: எம்.ஜி. ராய்
மக்கள் தொடர்பு: சரண்
கதைக்களம்
மாடலிங் துறையில் சாதித்து, மிஸ் இந்தியா பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணித்து வருகிறார் பவித்ரா (அர்ச்சனா). தனது முயற்சியால் மிஸ் சென்னை பட்டத்தையும் வெல்கிறார்.
இதற்கிடையே, எதிர்பாராத விதமாக கதிர் (ஷகீர் மனோ) மற்றும் பவித்ரா இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொள்ளும் சூழல் உருவாகிறது. ஒவ்வொரு சந்திப்பிலும் இருவருக்கும் இடையே சிறுசிறு மோதல்கள் ஏற்படுகின்றன.
இந்நிலையில், எதிர்பாராத விபத்தில் சிக்கும் பவித்ராவின் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்படுகின்றன. இதனால், தனது முகத்தை மற்றவர்களுக்குக் காட்டாமல் மறைத்து வாழத் தொடங்குகிறார்.
ஒருகட்டத்தில் பவித்ராவைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ளும் கதிர், அவரது முகத்தைப் பார்க்காமலேயே காதலிக்கத் தொடங்குகிறார்.

தனது காதலை பவித்ராவிடம் வெளிப்படுத்துகிறார் கதிர். ஆனால், அவரது காதலை ஏற்க மறுக்கிறார் பவித்ரா.
பவித்ரா காதலை மறுத்ததற்கான காரணம் என்ன? கதிரின் உண்மையான காதல் வெற்றி பெற்றதா? இருவரது வாழ்க்கையிலும் என்ன நடந்தது? என்பதே மௌனமொழிகள் திரைப்படத்தின் மீதிக்கதை.
கதிர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஷகீர் மனோ, காதல் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தனது காதலின் ஆழத்தை வெளிப்படுத்தும் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார்.

பவித்ராவாக நடித்துள்ள அர்ச்சனா, மாடலிங் கனவுடன் பயணிக்கும் பெண்ணாகவும், எதிர்பாராத விபத்தால் மனதளவில் பாதிக்கப்படும் பெண்ணாகவும் தனது கதாபாத்திரத்தைச் சிறப்பாகக் கையாண்டுள்ளார்.
இருவருக்கும் இடையேயான காதல் காட்சிகள் படத்தின் முக்கியமான பலமாக அமைந்துள்ளன.
இரண்டாவது கதாநாயகனாக நடித்துள்ள பி. ஸ்ரீமன், கதைக்குத் தேவையான நடிப்பை வழங்கியுள்ளார். அனிதா கதாபாத்திரத்தில் நடித்துள்ள திவ்யா நாகேஷ், துடிப்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.
தலைவாசல் விஜய், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட அனுபவமிக்க நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்துள்ளனர்.
காதல் என்பது ஒருவரின் வெளிப்புற அழகைப் பார்த்து வருவதல்ல; அவர்களின் மனதைப் புரிந்துகொள்வதன் மூலம் உருவாவது என்ற கருத்தை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார் ஏ.சி. சௌந்தர்.

உண்மையான காதலுக்காக ஒருவர் எந்த எல்லை வரை பயணிப்பார் என்பதையும் உணர்வுப்பூர்வமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
வழக்கமான காதல் கதையாகத் தொடங்கினாலும், பவித்ராவின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களுக்குப் பிறகு படம் உணர்ச்சிப்பூர்வமான பாதையில் பயணிக்கிறது.
குறிப்பாக, கிளைமாக்ஸ் காட்சி பார்வையாளர்களின் கண்களைக் கலங்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. காதலின் உன்னதத்தையும் அதன் உண்மையான அர்த்தத்தையும் உணர்த்தும் விதமாகப் படத்தை நிறைவு செய்திருக்கிறார் இயக்குநர்.
நல. இளந்திரையனின் இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
கர்நாடக இசையின் சாயலில் அமைந்துள்ள ‘காற்றே நீ தூது செல்வாயோ’ பாடல் ரசிக்க வைக்கிறது. அதேசமயம், ‘டிமிக்கி கொடுக்குறா’ பாடல் துள்ளலான இசையால் ஆட்டம் போட வைக்கிறது.
காதல் கதைக்குத் தேவையான இசையை வழங்கி தனது பணியைச் சிறப்பாகச் செய்துள்ளார் இசையமைப்பாளர்.
எம்.ஜி. ராயின் ஒளிப்பதிவும் கவனம் ஈர்க்கிறது. காதல் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளை அழகாகப் பதிவு செய்துள்ளார்.
இருப்பினும், வாயு தொடர்பான நகைச்சுவைக் காட்சிகளைத் தவிர்த்திருந்தால் படத்தின் ரசனை இன்னும் அதிகரித்திருக்கும்.
படத்தின் பிளஸ்
ஷகீர் மனோ மற்றும் அர்ச்சனாவின் இயல்பான நடிப்பு.
உண்மையான காதலை மையப்படுத்திய கதைக்களம்.
ரசிக்க வைக்கும் காதல் காட்சிகள்.
நல. இளந்திரையனின் இசை மற்றும் பாடல்கள்.
எம்.ஜி. ராயின் ஒளிப்பதிவு.
மனதை நெகிழ வைக்கும் கிளைமாக்ஸ்.
படத்தின் மைனஸ்
– தேவையற்ற வாயு தொடர்பான நகைச்சுவைக் காட்சிகள்.
வெளிப்புற அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் உலகில், மனதின் அழகே உண்மையான காதலின் அடையாளம் என்பதை அழுத்தமாகச் சொல்லும் படைப்பாக மௌனமொழிகள் அமைந்துள்ளது.
காதல், வலி, ஏக்கம், அன்பு எனப் பல்வேறு உணர்வுகளை ஒருங்கிணைத்து, காதலின் மகத்துவத்தை உணர்த்த முயன்றிருக்கிறார் இயக்குநர் ஏ.சி. சௌந்தர்.
மௌனமொழிகள் – முகம் பேசாத காதலை மனம் பேசும் கவிதை!





