
எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் இசையமைப்பாளராக அதுவும் “மறு வார்த்தை பேசாதே” பாடலின் மூலம் பட்டிதொட்டி எங்கும் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர் தான் “தர்புகா சிவா”. முதல் முறையாக இயக்குனராக களமிறங்கி இயக்கியிருக்கும் படம் தான் “முதல் நீ முடிவும் நீ”. இப்படம் நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
கதைப்படி,
11 ஆம் வகுப்பு பள்ளி வாழ்க்கையில் தொடங்குகிறது கதை நாயகர்களின் வாழ்க்கை. அனு, கேத்ரின், சைனீஸ், வினோத், துரை, பிரான்சிஸ், ரேகா, ரிச்சர்ட், உள்ளிட்ட சிலர் ஒரே பள்ளியில் படிக்கும் நண்பர்கள்.
பள்ளி சேட்டைகள், காதல், கொண்டாட்டம், ஜாலியாக பள்ளி வாழ்க்கை பயணம் ஆகிறது. இதில், அனுவும் வினோத்தும் காதலர்கள். அமைதியாக செல்லும் இவர்களது காதல் வாழ்க்கையில் மற்றொரு பெண் எட்டிப் பார்க்க, மோதல் வெடிக்கிறது. இருவரும் பிரிகிறார்கள். ”சாரி” என்ற ஒரு வார்த்தை கூறாததால் அவர்களின் வாழ்க்கை எங்கே போய் நிற்கிறது என்பது தான் “முதல் நீ முடிவும் நீ” படத்தின் மீதிக் கதை.
நாயகனாக கிஷன் தாஸ், அழகான தோற்றத்தில் மிகவும் யதார்த்த நாயகனாக களம் கண்டு வினோத் என்ற கதாபாத்திரத்தோடு ஒன்றியிருக்கிறார் . பள்ளி வாழ்க்கையில், நண்பர்களோடு அரட்டை அடிப்பது, காதல், எனவும், அனுபவ வயதில் அமைதியான தோற்றம் எனவும், தனது கதாபாத்திரத்திற்கு தேவையான அம்சங்களை அளவெடுத்தாற் போல் கொடுத்திருக்கிறார்.
மற்றொரு கதாநாயகன் தான் என்று சொல்ல வேண்டும் இவரை. சைனீஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஹரீஷ். படத்திற்கு மிகப்பெரும் பலமாக வந்து நிற்கிறார் ஹரீஷ். நாம் பள்ளி வாழ்க்கையை கடந்திருக்கும் போது இவரது கேரக்டரை போன்ற ஒரு கதாபாத்திரத்தை நிச்சயம் பார்த்துவிட்டோ அல்லது கடந்துவிட்டோ தான் வந்திருப்போம். எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாத, பார்க்கும் பெண்களை எல்லாம் காதல் செய்யும் ஒரு கதாபாத்திரம்தான் ஹரீஷின் கதாபாத்திரம். பள்ளியில் நாம் படிக்கும் போது பார்த்த, ரசித்த, பல விஷயங்களை ஹரீஷ் நினைவூட்டிச் செல்கிறார். இவருடன் சுரேந்தர் கதாபாத்திரத்தில் நடித்த கெளதம் ராஜ் மேலும் பக்கபலமாக இருந்திருக்கிறார்.
நாயகியாக வந்த அம்ரிதா (அனு), அழகான தேவதையாக வந்து செல்கிறார். பள்ளி மாணவியாக வந்து செல்லும் காட்சிகளில் க்யூட்டான தேவதையாக கண்களுக்கு விருந்து படைக்கிறார். மேலும், கேத்ரின் கதாபாத்திரத்தில் பூர்வா ரகுநாத், துரை கதாபாத்திரத்தில் ஷரன் குமார், ப்ரான்சிஸ் கதாபாத்திரத்தில் ராகுல் கண்ணன், ரேகா கதாபாத்திரத்தில் மீதா ரகுநாத், ரிச்சர்ட் கதாபாத்திரத்தில் வருண் ராஜன், திருமால் கதாபாத்திரத்தில் நரேன், விக்கி கதாபாத்திரத்தில் ஹரினி ரமேஷ் கிருஷ்ணன் என ஒவ்வொரு கதாபாத்திரமும் கதைக்கேற்ற கதாபாத்திரமாக வந்து ஜொலித்திருக்கிறார்கள்.
சுஜித் சரங் அவர்களின் ஒளிப்பதிவு படத்திற்கு தூணாக அமைந்துள்ளது. 90’ஸ் காலக்கட்டத்தில் இருந்த ஒவ்வொன்றையும் மிக கவனமாக காண்பித்து அக்காட்சிகள் ஒவ்வொன்றிற்கும் உயிர் கொடுத்திருக்கிறார். கதைக்கேற்ற ஒளியை ஜோதியாக கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
தர்புகா சிவாவின் பாடல்கள் பெரிதாக ஜொலிக்கவில்லை என்றாலும், பின்னனி இசை கதையோடு பசை போல் ஒட்டி வருகிறது. “மறு வார்த்தை பேசாதே” பாடலின் ரீங்காரமே இப்படத்தில் பல இடங்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. வாசுதேவனின் ஆர்ட் வேலைப்பாடுகள் பாராட்டுக்குறியது.
முதல் பாதியில் மிகவும் எதேச்சையாகவும், மிகவும் கவனமாக கையாண்டு கதையை நகர்த்திச் சென்ற இயக்குனருக்கு இரண்டாம் பாதியை கடத்திச் செல்ல தவறியது ஏனோ.? ஓ மை கடவுளே படத்தின் சில காட்சிகளும், 96 படத்தின் சில காட்சிகளும் ஆங்காங்கே எட்டிச் செல்வதை கவனிக்காமல் இருக்க முடியவில்லை.
இரண்டாம் பாதியில் தொய்வடையும் ஒரு சில காட்சியில் இயக்குனர் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் “முதல் நீ முடிவும் நீ” இன்னும் சற்று ரசனையை ஏற்றி கொடுத்திருந்திருக்கும். இருந்தாலும் இயக்கத்தில் தனது முதல் வெற்றிக் கொடியை நாட்டிவிட்டார் “தர்புகா சிவா”.