
நடிகர் நெப்போலியன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘அமெரிக்க ஆவி’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
ஜீவன் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் நெப்போலியன் மற்றும் குணால் நெப்போலியன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை தஞ்சை ஜே.பி.ஆர். இயக்கியுள்ளார். காமெடி, ஹாரர் மற்றும் திரில்லர் அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படத்தில் 200-க்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் புதுமுக நடிகர்கள் நடித்துள்ளனர்.
முழுவதுமாக அமெரிக்காவில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் எனப் படக்குழுவினரால் குறிப்பிடப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு 75 நாட்களில் நிறைவடைந்துள்ளது. ஒளிப்பதிவை ‘நேஷ்வில்’ பிரபு மேற்கொள்ள, ஆதிஷ் உத்ரியன் இசையமைத்துள்ளார்.
இவ்விழாவில் ஜப்பான் துணைத் தூதர் டாக்கா ஹாசி மற்றும் தயாரிப்பாளர் ஆதித்யா ராம் இணைந்து படத்தின் இசையை வெளியிட்டனர். தயாரிப்பாளர் கண்ணன் ரவி பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய நெப்போலியன், பல்வேறு துறைகளில் பணியாற்றும் அமெரிக்க வாழ் தமிழர்கள் தங்களது ஓய்வு நேரத்தை ஒதுக்கி இப்படத்தில் நடித்துள்ளதாகப் பெருமிதம் தெரிவித்தார்.
நடிகர்கள் நாசர், ரோஜா செல்வமணி, இயக்குநர்கள் ஆர்.கே. செல்வமணி, ஆர்.வி. உதயகுமார், தயாரிப்பாளர் டி. சிவா, நடன இயக்குநர் கலா உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகியுள்ள ‘அமெரிக்க ஆவி’, விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.





